;
Athirady Tamil News

அகவிலைப்படி உயர்வு… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

0

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுளள்து. தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என 2015ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன்பிறகு நான்குமுறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டபோதும், தங்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை எனக் கூறி, அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற பணியாளர் நலச்சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயண பிரசாத் விசாரித்தார். அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அகவிலைப்படி உயர்வை வழங்க மறுத்ததால் 86 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும், 20 அயிரம் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பணியில் உள்ளவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும் நிலையில், தங்களுக்கு வழங்க மறுப்பது பாரபட்சம் என்றும் வாதிட்டார்.

மேலும், கடந்த ஜூலை மாதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மற்ற துறைகளில் போதுமான நிதி இருப்பதாகவும், குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்கள் உள்ளதாகவும் தெரிவித்த அரசு, போக்குவரத்து துறையில் அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள் உள்ளதால் அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கு 81 கோடி ரூபாய் செரலவாகும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பலன்களை வழங்க வேண்டும் என்ற கேள்வி எழும்போதெல்லாம், நிதி நெருக்கடி என்ற பதிலையே அரசு வழங்கி வருவதாக அதிருப்தி தெரிவித்தார். நிதி நெருக்கடியை ஒரு காரணமாக சொல்லும் அரசு, சமீபத்தில் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது எப்படி? என்ற கேள்வியையும் எழுப்பினார். அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வரும் நவம்பர் முதல் வழங்க வேண்டும் என அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அகவிலைப்படி உயர்வை வழங்கியது தொடர்பான அறிக்கையை நவம்பர் 25ம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.