;
Athirady Tamil News

‘வந்தேபாரத்’ அதிவிரைவு ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைக்கிறார்..!!

0

தென் இந்தியாவில் முதன்முறையாக சென்னை-மைசூரு இடையே வந்தேபாரத் அதிவிரைவு ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கிறார். அத்துடன் சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தை திறந்துவைக்கிறார்.

பிரதமர் மோடி வருகை
ஒரு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) பெங்களூரு வருகிறார். 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதற்காக பிரதமர் மோடி நாளை காலை 9 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். அங்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் அவரை வரவேற்க உள்ளனர். அதன் பிறகு அவர் அங்கிருந்து கார் மூலம் விதான சவுதாவுக்கு வருகிறார்.

வந்தேபாரத் அதிவிரைவு ரெயில்
பிறகு எம்.எல்.ஏ.க்கள் பவனுக்கு வந்து கனகதாசர் ஜெயந்தியையொட்டி அங்குள்ள கனகதாசர் மற்றும் வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன் பிறகு அவர் அங்கிருந்து கார் மூலம் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வருகிறார். அங்கு காலை 11 மணியளவில் சென்னை-மைசூரு வந்தேபாரத் அதிவிரைவு ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

இது தென் இந்தியாவின் முதல் வந்தேபாரத் ரெயில் ஆகும். இந்திய தொழில்நுட்பத்தில் அதிநவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த ரெயில் சென்னையில் காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு மைசூருவுக்கு வந்தடைகிறது. மறுமார்க்கமாக மைசூருவில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை சென்றடைகிறது. இந்த ரெயிலில் பயணித்தால் சென்னையில் இருந்து மைசூருவுக்கு 6.40 மணி நேரத்தில் வந்துவிடலாம்.

2-வது விமான முனையம்
அத்துடன் அதே இடத்தில் பாரத் கவுரவ் காசி தரிசன ரெயில் சேவையையும் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார். அந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு பிரதமர் மோடி தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு சாலை மார்க்கமாக செல்கிறார். அங்கு ரூ.5 ஆயிரம் கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2-வது அதிநவீன முனையத்தை அவர் தொடங்கி வைக்கிறார். மேலும் அந்த விமான நிலைய வளாகத்தில் பெங்களூருவை நிர்மாணித்த கெம்பேகவுடாவின் 108 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார்.

போக்குவரத்துக்கு தடை
அந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு பகல் 2 மணியளவில் பிரதமர் மோடி தனி விமானம் மூலம் தமிழ்நாட்டின் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பெங்களூருவில் அவர் பயணிக்க இருக்கும் சாலைகளில் புதிதாக தார்சாலைகள் போடப்பட்டுள்ளன. சிட்டி ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் அவர் நகரில் பயணிக்க இருக்கும் சாலைகளில் இன்று போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி அந்த சாலைகளில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

போலீஸ் குவிப்பு
பிரதமர் வருகையை முன்னிட்டு சிட்டி ரெயில் நிலையத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். சிட்டி ரெயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதுமாக தூய்மைப்படுத்தப்பட்டு உள்ளன.

சாலை விதிகளை குறிக்கும் வெள்ளை, மஞ்சள் நிற வண்ணங்கள் பூசப்பட்டுள்ளன. சாலையின் தடுப்பு சுவர்களுக்கு கருப்பு, வெள்ளை நிற பெயிண்ட் பூசப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த சாலைகள் பளிச் சென்று காணப்படுகின்றன. கெம்பேகவுடாவுக்கு 108 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கல சிலை உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது கர்நாடகத்திற்கே பெருமை அளிக்கும் விஷயமாக உள்ளது.

தீவிர சோதனை
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு வந்து பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைப்பது குறிப்பிடத்தக்கது. மோடியின் வரவுள்ளதால் பா.ஜனதா தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். மோடி பயணிக்கும் சாலையின் இருபுறங்களிலும் பா.ஜனதா கொடிகள் கட்டப்பட்டுள்ளன. அதாவது விதான சவுதாவில் இருந்து சிட்டி ரெயில் நிலையம் வரை அந்த கொடிகள் கட்டப்பட்டு இருக்கின்றன. மேலும் விதான சவுதாவில் இருந்து சிட்டி ரெயில் நிலையம் வரை நேற்று போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.