;
Athirady Tamil News

மாத வருமானம் ரூ.66 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா? 10 சதவீத இட ஒதுக்கீடு சமூகநீதிக்கு எதிரானது – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

0

நூற்றாண்டு காலமாக…
சென்னையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- நூற்றாண்டு காலமாக நாம் போற்றி பாதுகாத்து வந்த சமூகநீதிக்கொள்கைக்கு இன்று பேராபத்து சூழ்ந்திருக்கிறது.சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே சமூகரீதியாகவும், கல்விரீதியாகவும் பின்தங்கியவர்களுக்கு தரப்பட வேண்டிய ஒன்று என்பதுதான் இந்திய அரசியலமைப்பு சட்ட வரையறை. அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பொருளாதார அளவுகோலை புகுத்த நினைத்தது மத்திய அரசு. அதன்படி ஒரு சட்டத்தை 2019-ம் ஆண்டு செய்தார்கள். அந்த சட்டத்தைத்தான் தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அமர்வில் 3 நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு தீர்ப்பு அளித்துள்ளார்கள்.

முரணானது
சமூகத்தில் முன்னேறிய சாதியில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதுதான் பா.ஜ.க. அரசினுடைய திட்டம். எந்த நோக்கம் அவர்களுக்கு இருந்தாலும் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு என்பது சமூகநீதிக்கு முரணானது, அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது.

முதல் அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது பொருளாதாரம் என்ற சொல்லையும் சேர்க்க சொல்லி சில உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். அந்த நேரத்தில் இந்திய நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட கருத்துதான் பொருளாதார அளவுகோல். 1992-ம் ஆண்டு 9 நீதிபதிகள் கொண்ட அமர்வானது பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு அளித்துள்ளதை நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

தடுக்கவில்லை
முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்வதை தடுப்பதாக யாரும் இதனை கருதத்தேவையில்லை. ஏழைகளுக்கான எந்த திட்டத்தையும் நாம் தடுக்க மாட்டோம். ஆனால், சமூகநீதி கொள்கையின் அடிப்படையை மடைமாற்றும் திருகுவேலையை இடஒதுக்கீடு அளவுகோலாக மாற்றக்கூடாது என்பதுதான் எங்களது வேண்டுகோள்.

யார் ஏழைகள்?
ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு கீழே உள்ளவர்கள் இதன் பயனைப் பெறலாம் என்கிறார்கள். அப்படியானால் மாத வருமானம் 66,660 ரூபாய் பெறுபவர்கள் ஏழைகளா?, தினமும் 2,222 ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழைகளா? அந்த வகையில் பார்த்தால் இதன் நோக்கம் முன்னேறிய சாதி ஏழைகளின் வறுமையை ஒழிப்பதாகவும் இல்லை.

ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கும் குறைவானவர்கள் வருமான வரிக்கட்ட தேவையில்லை என்று சொல்லும் பா.ஜ.க. அரசு ரூ.8 லட்சம் சம்பாதிப்பவர்களை ஏழைகள் என்பது எப்படி?, கிராமமாக இருந்தால் தினமும் 27 ரூபாயும், நகரமாக இருந்தால் தினமும் 33 ரூபாயும், இதற்கு கீழ் சம்பாதிப்பவர்களை வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களாக சொல்கிறது மத்திய அரசு. இந்த மக்களுக்கு எத்தகைய பொருளாதார உதவிகளையும் அரசு வழங்கலாம், யாரும் தடுக்கவில்லை. அதே அரசு, தினமும் 2,222 ரூபாய் சம்பாதிப்பவர்களை ஏழைகள் என்று சொல்கிறது என்றால், இதனைவிட கேலிக்கூத்து ஒன்று இருக்க முடியாது.

எதிர்க்க வேண்டும்
5 ஏக்கருக்கும் குறைவாக வைத்திருப்பவர்கள், 1,000 சதுர அடி நிலத்திற்கு குறைவாக வைத்திருப்பவர்கள் ஏழைகளாம். இந்த இடத்தில் நாம் கவலைப்படும் ‘வர்க்கம்’ என்பதும் அடிபட்டு விடுகிறது. என்னை பொறுத்தவரையில், முன்னேறிய சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு அல்ல இது. முன்னேறிய சாதியினருக்கான இடஒதுக்கீடாகத்தான் இதனை சொல்ல வேண்டும்.

இந்த வகையில், இந்திய அரசியலமைப்பின் 103-வது திருத்தம் என்பது சமூகநீதிக்கு எதிரானது. அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரானது. இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது, சுப்ரீம் கோர்ட்டின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்கும் எதிரானது. ஏழைகளுக்கு எதிரானது என்பதால் நாம் எதிர்க்க வேண்டியதாக உள்ளது. இந்த சட்டத்திருத்தத்தை ஏற்றுக்கொண்டால் காலப்போக்கில் சமூக நீதி தத்துவமே உருக்குலைந்து போகும். பொருளாதார நிலை என்பதையே அனைத்துக்கும் கொண்டு வந்துவிடுவார்கள்.

கடமை இருக்கிறது
சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. வழக்கு தாக்கல் செய்தது. மிகக்கடுமையாக எதிர் வாதங்களை வைத்தது. பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பு வேறாக இருந்தாலும், முழு அமர்வும் இத்திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த நிலையில் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு, சமூகநீதியைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக சில செயல்களை செய்தாக வேண்டும். அந்த கடமை தமிழ்நாட்டுக்குத்தான் அதிகம் இருக்கிறது.

சமூகநீதிக்கு ஆபத்து வரும் போதெல்லாம் தமிழ்நாடு காப்பரணாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.