;
Athirady Tamil News

தேசிய கீதத்துக்கு பதில் ஒலித்த வேறு பாடல்: ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை நிகழ்ச்சியை விமர்சித்த பாஜக..!!

0

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது யாத்திரையை தொடங்கிய அவர், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக தற்போது மகாராஷ்டிராவில் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

இந்த யாத்திரையின்போது, அந்தந்த பகுதி மக்களுடன் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் வாசிம் மாவட்டத்தில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதத்திற்கு பதிலாக வேறு ஒரு பாடல் இசைக்கப்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. பாஜக தலைவர்கள் இதுதொடர்பான வீடியோவை வெளியிட்டு ராகுலையும், ஒற்றுமை யாத்திரையையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அந்த வீடியோ வைரலாகி வருகிறது. கூட்டத்தின் நிறைவில் தேசிய கீதம் என்று ராகுல் காந்தி அறிவிக்கிறார். அப்போது தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைவரும் எழுந்து நிற்கின்றனர். ஆனால் தேசிய கீதத்திற்கு பதிலாக வேறு பாடல் வேறு மொழியில் ஒலிபரப்பப்படுகிறது. இதைப் பார்த்து குழப்பமடைந்த ராகுல் காந்தி, அருகில் நின்றிருந்த காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சைகை மூலம் தவறை சுட்டிக் காட்டுகிறார். அவர்கள், பாடல் பிளே செய்யும் மைக் செட் பொறுப்பாளரை அழைத்து சொல்கிறார்கள்.

இதையடுத்து உடனடியாக தவறு சரி செய்யப்பட்டு, முறையான தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி குறித்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜக தேசிய செயலாளர் சுனில் தியோதர், இந்தியாவை ஒன்றிணைப்பவர்களின் தேசிய கீதமா இது? என கிண்டலடித்துள்ளார். அதே வீடியோவை பகிர்ந்துள்ள தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, “ராகுல் காந்தி, என்ன இது?” என்று கூறி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.