;
Athirady Tamil News

பிற மதங்களை வெறுக்க அவர்களுக்கு உரிமை இல்லை!!

0

எவருக்கும் மதத்தை நம்புவதற்கும் அவ்வாறு நம்பாதிருப்பதற்கும் உரிமை உண்டு என்றாலும், பிறருடைய நம்பிக்கைகளையும் மதங்களையும் புண்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இந்நாடு அனைத்து மதத்தினரும் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய நாடு என குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், குறிப்பிட்ட சில புரட்சிக் கும்பல்களின் மதத்திற்கு எதிரான கருத்துக்களைக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

புரட்சி பற்றி பேசும் தரப்பினர் தலதா மாளிகையையும் பௌத்த மதத்தையும் அவமதித்து பேசியதை வன்மையாக கண்டிப்பதாகவும் இவ்வாறானவர்களுக்கு சமூகத்தில் இடம் வழங்கக்கூடாது எனவும் மதம் குறித்து வேறுநிலைப்பாடுகள் இருந்தாலும் ஏனையவர்களுக்கு தாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்குரிய உரிமை அடிப்படை உரிமை சார்ந்தது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மதங்கள் மற்றும் இனங்களுக்கு இடையில் பிரிவினையை உருவாக்குவதன் காரணமாக, வரலாற்றில் இருந்து எண்ணற்ற பாடங்கள் கற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பரஸ்பர நம்பிக்கைகளை மதித்து நல்லிணக்கத்தை பரப்புவது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார்.

மதத்தைக் கொண்டு, இனத்தைக் கொண்டு பிரிவினைக்கு இங்கு இடமில்லை எனவும் நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் சகவாழ்வு நாட்டிற்கு இன்றியமையாதது எனவும், சகவாழ்வின் பிரகாரமே நாடு முன்னேற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இனவாததைப் பேசி பிளவுகளை ஏற்படுத்துவதனால் அரசியல்வாதிகளே வெல்லுவதாகவும், நாட்டு மக்களுக்கும் நாடுமே தோல்வியைத் தழுவுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அரசியல் கட்சிகள் தரப்புகளாக பிரிந்து தேர்தலில் போட்டியிடுகின்ற போதிலும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் 65 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம் (5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்று ஜா-எல நிவன்தம ஜினராஜ கல்லூரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் நேற்று (06) அன்பளிப்புச் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.