;
Athirady Tamil News

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெட்கத்தை விட்டு கேட்கிறேன்… ஒரு பில்லியன் டாலர் கொடுங்க: பாகிஸ்தான் பிரதமரின் வீடியோ வைரல்!!

0

ஐக்கிய அரபு அமீரக தலைவர்களிடம், ‘வெட்கத்தை விட்டு கேட்கிறேன்… பணம் கொடுங்கள்’ என்று பாகிஸ்தான் பிரதமர் பேசிய வீடியோ ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று முதல் கராச்சி, இஸ்லாமாபாத் போன்ற பெரிய நகரங்களில் கூட மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு தேவையான மின்சாரம் நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படுவதால், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி கொள்முதல் செய்யவும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ‘கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்தேன். அந்நாட்டின் அரசுத் தலைவர் மற்றும் எனது சகோதரர் (மரியாதை நிமித்தமாக அழைப்பது) முகமது பின் சயீத் ஆகியோரைச் சந்தித்தேன். அவர்கள் என்னை மிகுந்த அன்போடு நடத்தினார்கள். அவர்களிடம் கடன் கேட்கக் கூடாது என்று எனது மனதிற்குள் முடிவு செய்தேன். ஆனால் கடைசி நேரத்தில் என்னால் அவர்களிடம் கடனை கேட்காமல் இருக்க முடியவில்லை.

அதனால் மூத்த சகோதரரிடம், ‘மிகவும் வெட்கப்படுகிறேன்; பாகிஸ்தானின் உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியும். எனவே எங்களுக்கு இன்னும் ஒரு பில்லியன் டாலர் கொடுங்கள்’ என்று கேட்டேன்’ என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். பொதுவாக பாகிஸ்தானுக்கு எப்போதெல்லாம் பணம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் வளைகுடா நாடுகளின் தலைவர்களை நேரில் சந்தித்து பணம் கேட்பது வாடிக்கையாகிவிட்டது, என்று அந்நாட்டு ஊடகங்களும் விமர்சித்து வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.