;
Athirady Tamil News

பள்ளிகளில் ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று எந்த விதியும் இல்லை- காஞ்சிபுரம் கலெக்டர்!!

0

காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுகுணா. பட்டியலினத்தை சேர்ந்த பெண்ணான இவர் திருப்புட்குழி ஊராட்சியில் பொது வார்டில் போட்டியிட்டு ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளார். இவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர். இவர் குடியரசு தின விழாவில் பங்கேற்க திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தேசிய கொடியை ஏற்றச் சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர்கள் தடுத்துள்ளனர்.

இதனால் அங்கு தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தேசியக்கொடியை ஏற்றவில்லை. இதுபற்றி ஊராட்சி தலைவர் சுகுணா பாலுசெட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் தன்னை தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்ததாக பாலசந்தர், செல்வம் ஆகியோர் மீது புகார் செய்தார். இதுகுறித்து சுகுணா கூறுகையில், என்னை எதிர்த்து போட்டியிட்டவர்களின் ஆதரவாளர்கள் என்னை பணி செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர். பள்ளியில் என்னை தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்தனர்.

அவர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளேன். தலைமை ஆசிரியர் விஜயகுமாரி மீது பள்ளிக் கல்வித்துறையில் புகார் கொடுக்க உள்ளேன் என்றார். இதுகுறித்து தலைமை ஆசிரியர் விஜயகுமாரி கூறுகையில், “நான் எனது விளக்கத்தை கலெக்டரிடம் தெரிவித்துவிட்டேன்” என்றார். இந்த விவகாரம் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி கூறுகையில், “ஊராட்சி தலைவர் ஆரம்ப பள்ளியில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடியை ஏற்ற வரும்போது முன் விரோதத்தில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் சுகுணா அங்கிருந்து வெளியேறினார்.

எனவே வேறு நபரை வைத்து தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர்” என்றார். இந்த விவகாரம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- ஊராட்சி தலைவருக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தான் கொடி ஏற்ற முழு அதிகாரம் உள்ளது. பள்ளிக்கூடம் என்பது முழுக்க முழுக்க தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு அவர் தேசியக்கொடியை ஏற்றுவார். அவர் இல்லை என்றால் வேறு யாராவது ஏற்றலாம்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஊராட்சி தலைவர் அதே கிராமத்தில் 3 இடங்களில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார். ஒரு கிராமத்தில் பல இடங்களில் குடியரசு தின விழா நடைபெற்றால் அனைத்து இடங்களிலும் ஒரே நபர் தேசியக் கொடியை ஏற்ற முடியாது. பள்ளிகளில் ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.