;
Athirady Tamil News

மக்களை தவறான திசையில் வழிநடத்தும் எதிர்க் கட்சிகள்!!

0

எதிர்காலம் தொடர்பில் மக்களை சிந்திக்க விடாது தடுக்கும் சில தரப்பினர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் என்ற பெயரில் அப்பாவி மக்களை அசௌகரியப்படுத்தி அவர்களை தவறாக வழிநடத்திக் கொண்டிருப்பது எதிர்காலத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியப்போகிறது. எனவே இவ்விடயத்தில் நாட்டு மக்கள் தெளிவடைய வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

அரசியல் சமூக பொருளாதார ரீதியில் நம் நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டிருக்கின்றது. சர்வதேச நாடுகளினதும் சர்வதேச நிதி நிறுவனங்களினதும் அனுசரணைகளையும் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொள்வதற்கும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையிலே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோக நிகழ்வானது கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஹீ ஷேன் ஹொங் ஆகியோரின் தலைமையில் கல்வி அமைச்சின் சப்புகஸ்கந்தையில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் இடம் பெற்றது.

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை விநியோகம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே கல்வி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், “அரசாங்கமானது எப்போதும் நாடு, மக்கள் மற்றும் எதிர்காலம் என்ற சிந்தனையில் செயல்படுகிறது. ஆனாலும் எதிர்த் தரப்பினரின் ஆரோக்கியமற்ற முன்னெடுப்புகள் அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முட்டுக்கட்டையாக அமைகின்றன.

எதிர்க்கட்சியினரின் ஆரோக்கியமான விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை என்பதை மறுக்கவில்லை. அதேநேரம் அரசாங்கமானது தனது கடமைப் பொறுப்பிலிருந்து விலகிச் சென்று விடவில்லை என்பதையும் இங்கு கூறி வைக்க வேண்டும். தற்போது நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய கஷ்டங்களையும் இடையூறுகளையும் அனுபவித்து வருகின்றனர்.

இத்தகைய இடையூறுகளையும் கஷ்டங்களையும் களைவதற்கு பொருளாதாரத்தின் தன்மையை சீரமைத்து ஒருநிலைப் படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகிறது. யார் எதனைக் கூறினாலும் நம் நாட்டின் பொருளாதாரம் சீரமைக்கப்படும் பட்சத்திலேயே மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.

கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட இலவச சேவைகளையும் ஏனைய கட்டண சேவைகளையும் செம்மைப்படுத்த முடியும். அதேபோன்று அபிவிருத்திகளையும் எதிர்பார்க்க முடியும்.
அரசாங்கம் இவ்வாறு சிந்தித்து செயல்படுகின்ற இத் தருணத்தில் நாட்டை தொடர்ச்சியாக கொதிநிலையில் வைத்திருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கங்கணம் கட்டி செயல்பட்டால் நாடு பாரிய ஆபத்தையே எதிர்கொள்ளும்.டினதும் மக்களினதும் எதிர்காலத்தினதும் நிலை உணர்ந்து எதிர்க்கட்சிகள் தங்களது நிலைப்பாடுகளை பரிசீலனை செய்ய வேண்டும்.

நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும் என்பதையே அரசாங்கம் விரும்புகிறது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.