கின்னஸ் சாதனை படைத்த நாக்பூர் டபுள் டக்கர் மேம்பாலம்- மத்திய மந்திரி நிதின்கட்கரி பாராட்டு..!!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரே நேரத்தில் மிக நீளமான டபுள் டக்கர் மேம்பாலம் உருவாக்கப் பட்டுள்ளது. நெடுஞ்சாலை மேம்பாலமும், அதன் மேல் மெட்ரோ ரெயில் மேம்பாலமும் ஒரே நேரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனமும் இணைந்து இந்த முயற்சியை வெற்றிகரமாக்கி மாற்றி உள்ளது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு மத்திய நெடுஞ்சாலைகள்துறை மந்திரி நிதின்கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 3.14 கி.மீ. தொலைவிலான நெடுஞ்சாலை மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் மேம்பாலத்தை வடிவமைத்திருப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும், மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனத்தையும் பாராட்டியுள்ளார். இந்த மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் ஏற்கனவே ஆசிய மற்றும் இந்திய புக்ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகங்களில் இடம் பெற்றிருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த சாதனையை படைத்த பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் இடைவிடாத பங்களிப்புக்கு தலை வணங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.