ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் எல்-1 புள்ளிக்கு வெற்றிகரமாக நகர்த்தப்பட்டது – இஸ்ரோ தகவல்!!
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்துகொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாகப் பாய்ந்தது. பின்னர், ஆதித்யா எல்1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த விண்கலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி அதன் இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
4 மாத பயணத்திற்கு பின்னரே விண்கலம் சென்று சேரும் என்றும், அந்த இடத்தில் இருந்து கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனைக் கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது. ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வரும் 19-ம் தேதி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்தது.
இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் இன்று 5-வது முறையாக அதிகரிக்கப்பட்டது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று அதிகாலை 2.00 மணியளவில் விண்கலத்தின் உயரம் 5வது முறையாக அதிகரிக்கப்பட்டு சூரியனின் எல்1 புள்ளியை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்துள்ளது. சுற்று வட்டப்பாதை உயர்வு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் சீராக உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.