நீரிழிவு என்பது ஒரு பேரழிவு. வேண்டாம் இந்த சீரழிவு
‘கொவிட்’ காலப் பகுதிக்கு பின்னரான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இளம் தலைமுறையினர் நீரிழிவின் தாக்கத்திற்கு உள்ளாவது அதிகரித்துச் செல்வதாக யாழ்ப்பாண போதனா வைத்திய சாலை நீரிழிவு சிகிச்சை பிரிவின் வைத்திய அதிகாரி வைத்தியர் அரவிந்தன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற இலவச நீரழிவு பரிசோதனையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்துச்செல்வதை காணக் கூடியதாக இருக்கின்றது.
வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் ஏறக்குறைய 20 சதவீதமானவர்களுக்கு நீரிழிவு நோய் காணப்படுகின்றது. இது ஒரு அபாய அறிகுறி.
கடந்த இரண்டு மூன்று வருடங்களை எடுத்துக் கொண்டால் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொவிட் தொற்று காலப் பகுதிக்கு பின்னரான காலப்பகுதியில் இளம் தலைமுறையினர் மத்தியில் நீரிழிவின் தாக்கம் அதிகரித்துச் செல்வதை காணக்கூடியதாக உள்ளது.
நீரிழிவு நோயினால் பல்வேறுபட்ட நோய்கள் ஏற்படுகின்றன. ஆகவே வருமுன் காப்பது மிகவும் இன்றியமையாத விடயமாகும்.
யாழ் போதனா வைத்திய சாலையில் இது தொடர்பான பல செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கின்றோம்.
“நீரிழிவு என்பது ஒரு பேரழிவு. வேண்டாம் இந்த சீரழிவு ” எனவே பொதுமக்கள் நீரிழிவு நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்குரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.