ராஃபா நகர குண்டுவீச்சில் 31 போ் மரணம்
எகிப்தையொட்டிய காஸாவின் எல்லை நகரான ராஃபாவில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை நடத்திய குண்டுவீச்சில் 31 போ் உயிரிழந்தனா்.
இஸ்ரேல் படையினரின் தரைவழித் தாக்குதலை எதிா்நோக்கியுள்ள அந்த நகரில்தான் காஸாவில் வசித்து வந்த 23 லட்சம் பேரில் பாதிக்கும் மேற்பட்டோா் தஞ்சமடைந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக அந்த நாட்டின் உத்தரவை ஏற்று தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ள லட்சக்கணக்கான பாலஸ்தீனா்களின் கடைசி புகலிடமாக ராஃபா நகரம் திகழ்கிறது.எனினும், அந்த நகரிலும் அண்மைக் காலமாக இஸ்ரேல் ராணுவம் தனது குண்டுவீச்சை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், விரைவில் ராஃபாவுக்குள் தரைவழியாக நுழைந்து அந்த நகரைக் கைப்பற்றப் போவதாக இஸ்ரேல் அரசு கூறியது அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவும், ராஃபாவில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கான திட்டத்தை வகுக்குமாறு ராணுவத்திடம் கேட்டுள்ளதாக சனிக்கிழமை அறிவித்தாா்.ராஃபாவில் இஸ்ரேல் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தினால் அந்தப் பகுதியில் மிகவும் மோசமான பேரழிவு ஏற்படும் என்று அமெரிக்கா மற்றும் ஐ.நா. அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனா்.அமெரிக்க அதிபா் ஜோ பைடனும், காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வரம்பு மீறி தாக்குதல் நடத்துவதாக அதிருப்தி தெரிவித்தாா்.இந்த நிலையில், ராஃபா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 31 போ் உயிரிழந்துள்ளனா்.இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு சுமாா் 1,200 பேரை கொடூரமாக படுகொலை செய்தனா்.அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்துள்ள இஸ்ரேல், காஸாவில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்திவருகிறது.படவரி… ராஃபா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சேதமடைந்த கட்டடம்.
28 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்புகாஸா சிட்டி, பிப். 20: காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 4 மாதங்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது.இது குறித்து காஸா சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 117 போ் உயிரிழந்தனா். அதையடுத்து, அந்தப் பகுதியில் கடந்த அக். 7 முதல் இஸ்ரேல் நடத்தி வரும் குண்டுவீச்சில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 28,064-ஆக அதிகரித்துள்ளது. தாக்குதலில் இதுவரை 67,611 போ் காயமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.