நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனின் கண்டன அறிக்கை
சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள்; வலுக்கட்டாயமாக பொலிசாரால் அகற்றப்பட்டு சிலரை கைதுசெய்த சம்பவம் சிங்கள பௌத்த ஏகாதிபத்தியத்தின் கீழ் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்ற பேருண்மையை மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனின் கண்டன அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,
இன்று வலம்புரி பத்திரிகையில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் ஒரு கூற்றை வாசித்தேன். அதில்
1. இலங்கையின் புராதன நாகரீகம் சம்பந்தமான வரலாறுகளை அடுத்த சந்ததிக்கு கொண்டு போவதே தமது சமய கலாச்சார அமைச்சின் பிரதான நோக்கமாக உள்ளது என்றார்.
2. வெடுக்குநாறிமலை வனப்பிரதேச பரிபாலன திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது, அத்துடன் அது ஒரு தொல்பொருள் பகுதி என்றார்.
3. குறித்த திணைக்களங்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் தண்ணீர்பௌசர், உழவுஇயந்திரங்கள் போன்றவை கொண்டு செல்வது சட்டமுரணானது என்றார்.
4. பொதுமக்கள் குறித்த இடங்களில் நடமாடமுடியாது என்றார்.
5. தமிழ் அரசியல் தலைவர்கள் தமது சுயலாபம் வேண்டி மக்களைத் தூண்டிவிட்டுள்ளனர் என்றார்.
6. வெடுக்குநாறிமலையிலுள்ள மக்களின் எதிர்ப்பு சிங்கள மக்களினதும் பௌத்த பிக்குகளினதும் எதிர்ப்பை வரவழைத்துள்ளது என்றார்.
7. அனைத்து தொல்பொருளியல் பகுதிகளும் பாதுகாக்கப்படும் என்றார்.
கௌரவ அமைச்சரிடம் இது சம்பந்தமாக எமது மக்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றார்கள் –
1 வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் எந்தவகையில் தேசிய முக்கியத்துவம் பெறுகின்றது? அது ஒரு தேசிய தொல்பொருள் இடமா ?
2. அதன் சுற்றுச்சூழலில் தமிழ் பௌத்தர் காலத்து பௌத்த கோயில் ஒன்று இருந்ததாயின் அதனைப் பாதுகாக்காமல் இந்துக்கோயிலில் வழிபடும் அடியார்களைத் துன்புறுத்துவது எந்தவிதத்தில் சட்டரீதியானதாகும் ?
3. நாட்டின் மற்றைய மாவட்டங்களில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் சின்னங்கள் அல்லது ஆலயங்கள் இருந்தால் அதனைச் சுற்றியுள்ள சமய தலங்களில் எந்தவித வழிபாடுகளும் எவராலும் நடத்தப்படக்கூடாது என்று சட்டம் விதித்துள்ளீர்களா ? இதற்கு உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சம்பவம் வெறும் தொல்பொருள் பாதுகாப்பு விடயமன்று. அரசாங்கத்துடன் தொடர்புடைய சிங்கள பௌத்த நிறுவனங்கள் மற்றும் பௌத்த பிக்குகள் வடகிழக்கில் தமிழ் மக்களின் காணிகளைக் கையகப்படுத்தும் நீண்டகாலத் தந்திரத் திட்டத்தின் வெளிப்பாடே இது.
நாம் முடிந்தளவு இந்தத் திட்டத்தை உலகறியச் செய்து கொண்டிருக்கின்றோம். தற்போது எம்மக்களின் விசனத்தை, சினத்தை,வேதனையை வெளிக்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கு எனது கட்சியின் மனமுவந்த ஆதரவை இங்கு வெளியிடுகின்றேன்.
பொலீசாரோ இராணுவத்தினரோ இனியேனும் எமது மக்களின் கருத்து சுதந்திரத்தையும் மதசுதந்திரத்தையும் நசுக்க நடவடிக்கை எடுக்காதிருக்க இறைவனை வேண்டி நிற்கின்றேன் – என்றுள்ளது.