ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!
ஆப்கானிஸ்தான் நாட்டில் மீண்டும் 5.0-க்கும் மேலான ரிக்டர் அளவைக் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில், புதன்கிழமை (பிப். 25) மாலை 4.42 மணியளவில், நிலப்பரப்பில் இருந்து 80 கி.மீ. ஆழத்தில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, தேசிய நிலஅதிர்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தப் புதிய நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. ஆனால், அங்கு தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் அந்நாட்டு மக்களிடையே பதற்றமான சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, ஆப்கானிஸ்தானில் கடந்த பிப். 20 அன்று 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும், பிப். 23 அன்று 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் ஏற்பட்டிருப்பது பதிவாகியுள்ளது.
யுரேசிய மற்றும் இந்திய டெக்டோனிக் தகடுகளுக்கு இடையில் ஆப்கானிஸ்தான் நாடு அமைந்துள்ளதால், அங்குள்ள ஹிந்து குஷ் மலைத்தொடர்கள் நிலநடுக்கம் ஏற்படும் அபாயமுள்ள பகுதி எனக் கூறப்படுகிறது.
மேலும், கடந்த 2025 ஆகஸ்டில் ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து, சுமார் 2,200-க்கும் அதிகமான மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.