சவால்களைத் தாண்டி புதிய சந்தைகளை நோக்கி இலங்கையின் ஏற்றுமதித்துறை!
இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருட்கள் என்றவுடன் தேயிலை, – இறப்பர், – தேங்காய் என்பதுதான் பலருக்கு நினைவுக்கு வரும். பிரித்தானிய (காலன்னித்துவ) ஆட்சிக் காலம் முதல் சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருட்களாக அந்நிய செலாவணியை அள்ளித் தரும் திரவியங்களாக விளங்கின. கடந்த பல தசாப்தங்களாக பாடசாலை பாடப் புத்தகங்களிலும் இம் மூன்றும் தான் குறிப்பிடப்பட்டிருக்கும்.
வரையறுக்கப்பட்ட ஏற்றுமதிப் பொருட்களாயினும் 1948 இன்போது அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வெறும் 4.97 என்றால் மலைத்துப் போவீர்கள். இப்பெறுமதியானது 1975 ஆம் ஆண்டின்போது கூட 7.50 ஆக மட்டுமே இருந்தது.
1977 இல், ஜே.ஆர். ஜயவர்த்தனவின் தலைமையில் ஜக்கிய தேசிய கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து திறந்த வர்த்தகப் பொருளாதாரம் அறிமுகப்படுத்தியதன் விளைவாக ‘இறக்குமதி சுனாமி’ அலையில் இலங்கையின் உற்பத்தித் துறைகளும் அதன் விளைவாக ஏற்றுமதிகளும் அடிபட்டுப்போயின. இலங்கை மக்கள் நுகர்வுக் கலாசாரம் எனும் மாயைக்குள் சிக்கவைக்கப்பட்டனர் என்றே கூற வேண்டும்.
ஜே.ஆர். அறிமுகப்படுத்திய திறந்த பொருளாதார கொள்கையின் விளைவாக, சுமார் 30 வருட காலத்தில், 2005 இன்போது, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 99.79 ஆக பெறுமதி இழந்திருந்தது.
நமது அண்டை நாடான இந்தியாவின் உள்நாட்டு உற்பத்திகளை வளர்த்து ஏற்றுமதித் துறையை மேம்படுத்துவதற்காக இந்திரா காந்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட மேற்படி ‘ஐந்தாண்டு திட்டம்’ என்பது அடிப்படையில் திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான மூடிய பொருளாதார கொள்கையைக் கொண்டிருந்தது. இறக்குமதிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் நிலவின. உள்நாட்டு உற்பத்திகளுக்கு தேவையான வசதிகளும் போதுமான சலுகைகளும் வழங்கப்பட்டன.
1975 இல் அமெரிக்க டொலருக்கு எதிராக 7.94 ஆக இருந்த இந்தியா ரூபாவானது இலங்கை ரூபாவை விட குறைவான பெறுமதியையே கொண்டிருந்தது. மேற்படி ‘ஐந்தாண்டு திட்டம்’ மூலம், 30 வருடங்களில் (2005 இல்) அமெரிக்க டொலருக்கு எதிராக இந்தியா ரூபாவின் பெறுமதி 44.27 வானது. அதாவது 30 வருடங்களில் இலங்கை ரூபாவை விட தனது நாணயத்தின் பெறுமதியை இந்தியா உயர்த்தியிருந்தது.
2025 இல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்கும் வரை, உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறையின் வளர்ச்சி குறித்து அரசாங்கங்களின் முன்னெடுப்புக்களும் இலங்கை மக்களின் நுகர்வு கலாசாரமும் குறிப்பிடக்கூடிய மாற்றங்கள் ஏதுமின்றி தேக்க நிலையில் காணப்பட்டன.
புதிய அரசாங்கம் தேடும் புதிய பாதைகள்
இலங்கை வீழ்ந்துள்ள நிரந்தரக் கடனில் இருந்து விடுபட்டு, தனக்கென ஒரு நிலையான பொருளாதாரத்தைக் கட்டமைக்க உதவும் பல விதமான திட்டங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாக தேசிய ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டத்தைக் (NEDP) குறிப்பிட வேண்டும். இத் திட்டமானது 2026 முதல் 2030 வரை செயல்படுத்தப்படவுள்ளது. இக்காலப் பிரிவின் நிறைவில் 36 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மாபெரும் ஏற்றுமதி வருவாயை ஈட்டிக்கொள்ளும் இலக்கினை தொடுவதே இத்திட்டத்தின் இலட்சியமாகும்.
36 பில்லியன் அமெரிக்க டொலர் என்பது, நமது நாட்டின் ஒரு சராசரி ஆண்டின் மொத்த ஏற்றுமதி வருவாயை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும். இந்த இலக்கை அடைய, 2030ஆம் ஆண்டுக்குள் இலங்கை தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% முதல் 15% சதவிகிதத்தை ஏற்றுமதிகள் மூலம் ஈட்ட வேண்டும். இப் பாரிய இலக்கினை அடைவதற்காக சம்பிரதாய ஏற்றுமதி பொருட்களில் தங்கியிருப்பதினால் சாத்தியமாகாது என்பது மட்டுமல்ல நீண்ட காலத்தில் பொருளாதாரம் பாதாளத்தில் விழுவதற்கும் காரணமாகலாம்.
பௌதிக மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்திகளில் மட்டும் ஏற்றுமதித் துறையை நம்பியிருக்காமல், அதற்கும் மேலதிகமாக சேவைகளை ஏற்றுமதி செய்வதில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், தேயிலை மற்றும் மசாலாப் பொருட்கள் போன்ற பௌதிக மூலப்பொருள் ஏற்றுமதிகள் மூலம் 28 பில்லியன் அமெரிக்க டொலரையும் தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் நிதிச் சேவைகள் போன்ற சேவை ஏற்றுமதிகள் மூலம் 8 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டுவதே இலக்காகும்.
இந்த 36 பில்லியன் இலக்கு எவ்வளவு பெரியது என்பதைப் புரிந்துகொள்ள, கடந்த 30 ஆண்டுகளில் நமது நாட்டின் ஏற்றுமதி வரலாற்றை நாம் பார்க்க வேண்டும்.
1990களில், இலங்கையின் ஆண்டு ஏற்றுமதி வருவாய் சுமார் 2 முதல் 4 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற மிகக் குறைந்த அளவில் இருந்தது. பின்னர், 2000களில் அது 5 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்தது.
2010களிலிருந்து அது சீராக அதிகரித்து வரும் நிலையில், 2025ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் அதிகபட்ச மொத்த ஏற்றுமதி வருவாய் 17.2 பில்லியன் அமெரிக்க டொலராக மட்டுமே இருந்தது.
கடந்த 30 ஆண்டுகளாக 17 பில்லியன் அமெரிக்க டொலராகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்த வருவாயை, இந்தப் புதிய திட்டத்தின் மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் 36 பில்லியன் அமெரிக்க டொலராக, அதாவது இருமடங்குக்கும் அதிகமாக உயர்த்த அரசாங்கம் தற்போது திட்டமிட்டுள்ளது.
ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் ஒரு முக்கிய கடல்வழிப் பாதையில் இலங்கை அமைந்துள்ளது. எனினும், இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்கள் அதன் சமுத்திர கேந்திர முக்கியத்துவத்திலிருந்து உச்ச பயனைப் பெற்றுக்கொள்ள முயலவில்லை அல்லது அதற்குரிய நீண்டகால திட்டங்கள் இருக்கவில்லை.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வைத்துள்ள இந்தப் புதிய திட்டமானது கொழும்புத் துறைமுகத்தை மேலும் வலுப்படுத்தி, இலங்கையைத் தெற்காசியாவின் ஒரு முக்கிய ஏற்பாட்டியல் மையமாக மாற்றும். இதன் மூலம், ஏற்பாட்டியல் துறையை ஆண்டுக்கு 15% வளர்ச்சி விகிதத்தில் முன்னோக்கிச் செலுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் இதனால் எழும் சவால்களை வெல்வது எளிதாக இருக்காது. ஏனெனில், தற்போது நமது நாட்டின் ஏற்றுமதி வருவாயில் பாதிக்கும் மேற்பட்டவை ஆடைகள் மற்றும் தேயிலை விற்பனையிலிருந்து வருகின்றன. எனவே, உலகச் சந்தையில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம் கூட நமது பொருளாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும். மேலும், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) வர்த்தகக் கடன் பெறுவதில் உள்ள சிரமங்களையும், ஏற்பாட்டியல் வசதிகளில் உள்ள குறைபாடுகளையும் நிவர்த்தி செய்வதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2026 – 2030 தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் என்பது 2025 பாதீட்டின் கீழ் இலங்கை அரசின் கொள்கை வழிகாட்டலுக்கு அமைவாக, நாட்டின் ஏற்றுமதித் துறையை வலுவூட்டுவது மற்றும் ஏற்றுமதியை முதன்மையாகக் கொண்ட நிலைபேற்று பொருளாதார வளர்ச்சியைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரதான தேசிய வேலைத்திட்டமாகும். தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைமையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கொள்கை அடிப்படை கடன் திட்டத்தினால் வழங்கப்பட்ட தொழிநுட்ப உதவியுடன் இந்த உபாயத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது அரசின் பிரதான நிறுவனங்கள், தனியார்த் துறையின் பங்குதாரர்கள் மற்றும் அபிவிருத்தி கூட்டாளிகளின் நெருக்கமான ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆலோசனை நடைமுறையின் பெறுபேறாகும்.
‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ எனும் நோக்குக்கு அமைவாக, இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் ஊடாக 2030 ஆம் ஆண்டின்போது 36 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கினை நிறைவுசெய்துகொள்வதற்காக இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பிராந்திய மற்றும் உலக சந்தைக்குத் தேவையான சேவைகளை வழங்கும் சேவைச் சங்கிலி மற்றும் அறிவை அடிப்படையாகக்கொண்ட ஏற்றுமதி கேந்திர நிலையமாக்குவது இத்திட்டத்தின் பிறிதொரு பிரதான நோக்கமாகும். இவ் உபாய திட்டமானது கிடைப் பிரிவுகள் (Horizontals) மற்றும் முன்னுரிமைப் பிரிவுகள் (Verticals) என்ற ஒன்றுடோடொன்று சந்திக்கும் பிரதான தூண்கள் மீது நிறுவப்படுகின்றது.
ஏற்றுமதி பல்வகைமை, பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை அதிகப்படுத்துதல், உலக சந்தையில் இலங்கையை மிகவும் போட்டித் தன்மைவாய்ந்த இடத்தில் நிலைநிறுத்துவதற்காக மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள், இறப்பர் சார்ந்த தொழில்கள், கடல் சார்ந்த தொழில்கள் (படகு, கப்பல் உற்பத்தி), மளிகைப் பொருள்கள் டிஜிட்டல் உற்பத்தி சேவைகள், மின்சார மின்னணு பாகங்கள், தயாரிக்கப்பட்ட உணவு ஆகிய பிரதான எட்டு (8) ஏற்றுமதி துறைகள் இனங்காணப்பட்டுள்ளன.
வலுவான கட்டுப்பாட்டுடன் கூடிய மேற்பார்வை கட்டமைப்பின் உதவியுடன் இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் உள்நாட்டு உற்பத்திகளை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவதற்கும், நாட்டின் நீண்ட கால பொருளாதார நிலைத்தலையும் விருத்தியையும் உறுதிசெய்வதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, ‘ஐந்தாண்டு திட்டம்’ ஒன்றை முன்வைத்திருக்கின்றது. இவ்வாறானதொரு திட்டத்தின் மூலம் இந்தியா பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் நிகழ் சான்றுகளாக இருக்கின்றன.