இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்கத் தேவைப்படும் தொழில் சட்ட சீர்திருத்தங்கள்!
இலங்கையின் தற்போதைய தொழிலாளர் சட்டக் கட்டமைப்பு சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான பல சட்டங்களின் தொகுப்பாகவே காணப்படுகிறது. தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது எந்தவொரு ஜனநாயக நாட்டிற்கும் அவசியமான ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்தப் பாதுகாப்பு என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்ட இறுக்கமான விதிகள், மாறிவரும் உலகளாவிய வணிகச் சூழலுக்கு ஏற்ப நிறுவனங்கள் தங்களை மாற்றிக்கொள்வதைத் தடுக்கும் வகையில் அமைந்திருப்பதாக பொருளியலாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, புதிதாகத் தொடங்கப்படும் ‘ஸ்டார்ட்-அப்’ (Start-up) நிறுவனங்களுக்கும், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கும் இச்சட்டங்கள் பெரும் சவாலாக அமைகின்றன. சந்தை மாற்றங்களுக்கு ஏற்பத் தொழிலாளர் படையைச் சீரமைப்பதில் உள்ள சட்டச் சிக்கல்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கையை நோக்கி வரவிடாமல் தடுக்கும் ஒரு காரணியாக மாறியுள்ளது. அண்மையில் நடைபெற்ற பொருளாதார உச்சிமாநாட்டில் பல நிபுணர்கள் சுட்டிக்காட்டியது போல, வியட்நாம், பங்களாதேஷ் போன்ற பிராந்தியப் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் தொழிலாளர் செலவு மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவற்றில் பெரும் பின்னடைவு காணப்படுகிறது.
இன்றைய நிலையில் இலங்கை எதிர்கொள்ளும் மிகப்பெரிய முரண்பாடு என்னவென்றால், ஒருபுறம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றித் தவிப்பதும், மறுபுறம் நிறுவனங்கள் தங்களுக்குப் பொருத்தமான பணியாளர்கள் கிடைக்காமல் திண்டாடுவதுமாகும். சுற்றுலா, உற்பத்தி, சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் அதிவேகமாக வளர்ந்து வந்தாலும், அத்துறைகளுக்குத் தேவையான நடைமுறை மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் நமது இளைஞர்களிடம் போதுமானதாக இல்லை.
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் வழங்கும் கல்வியானது, தொழில் சந்தையின் உண்மையான தேவைகளோடு ஒத்திசைந்து செல்லவில்லை என்பதை இந்த இடைவெளி காட்டுகிறது. இதன் விளைவாக, தமது திறமைக்கேற்ற ஊதியமும், தெளிவான தொழில் எதிர்காலமும் நாட்டில் இல்லை என்ற விரக்தியில், நாட்டின் முதுகெலும்பாகத் திகழ வேண்டிய பல திறமையான இளைஞர்கள் வெளிநாடுகளை நோக்கிப் படையெடுக்கின்றனர். இத்தகைய அறிவு வெளியேற்றத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்தாவிட்டால், எந்தவொரு முதலீட்டு மண்டலத்தை உருவாக்கினாலும் அங்கு பணிபுரியத் தகுதியான ஆட்கள் இல்லாத சூழலே உருவாகும்.
கடந்த காலங்களில் இலங்கைப் பாராளுமன்றம் தொழிலாளர் சட்டங்களில் சில முற்போக்கான மாற்றங்களை செய்தது.
குறைந்தபட்ச ஓய்வூதிய வயது சட்ட மூலம் (2021) மூலம் தனியார் துறை ஊழியர்களுக்குத் தெளிவான ஓய்வூதிய வயது இல்லாதிருந்த நிலையை மாற்றி, குறைந்தபட்ச ஓய்வூதிய வயதாக 60 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டது.
இளைஞர்களின் வேலைவாய்ப்பு வயதுச் சீர்திருத்தம் (2021) மூலம் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்கும் வகையில் குறைந்தபட்ச வேலைவாய்ப்பு வயது 16 ஆக உயர்த்தப்பட்டது. வெளிநாட்டு ஊழியர்களுக்கான EPF விலக்குகள் (2021) மூலம் தாய்நாட்டில் சமூகப் பாதுகாப்புச் சந்தா செலுத்தும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இருதரப்பு ஒப்பந்தங்களின் கீழ் விலக்களிக்கப்பட்டது.
தேசிய குறைந்தபட்ச ஊதிய உயர்வு (2022) மூலம் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 12,500 ஆகவும், தினசரி ஊதியம் ரூ. 500 ஆகவும் உயர்த்தப்பட்டது.
பணியாளர் நஷ்டஈட்டுச் சட்ட விரிவாக்கம் (2022), பணிக்கு வரும் மற்றும் திரும்பும் வழியில் ஏற்படும் விபத்துகளுக்கும் நஷ்டஈடு வழங்கும் வகையில் சட்டப் பாதுகாப்பை விரிவாக்கியது.
இருப்பினும், இவையனைத்தும் நிலவும் பெரிய சிக்கல்களுக்கான சிறுசிறு தீர்வுகளேயன்றி, முழுமையான தீர்வாகாது.
தற்போதைய அரசாங்கமும் தொழில் அமைச்சும் தொழிலாளர் சட்டங்களில் ஒரு பரந்த சீர்திருத்தத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளன. பிரதியமைச்சர் மஹிந்த ஜெயசிங்க குறிப்பிடுவது போல, இந்தச் சீர்திருத்தங்கள் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதற்காக அன்றி சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரநிலைகளுக்கமைய தொழிலாளர் உரிமைகளைப் பலப்படுத்தும் அதேநேரத்தில் முதலீட்டாளர்களுக்குத் தேவையான நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்காகவே கொண்டுவரப்படுகின்றன.
தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழு மற்றும் மாகாண மட்டத்திலான ஆலோசனைக் கூட்டங்கள் மூலம் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளின் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன. இது ஒரு நல்ல ஆரம்பமாகவே பலராலும் பார்க்கப்படுகின்றது.ஆனால், இலங்கை 2030 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு ஒரு தெளிவான ‘தேசிய உழைப்பு படையணி வியூகத்தை’ வகுப்பது அவசியமானது.
பல்கலைக்கழகங்களும் பயிற்சி மையங்களும் தொழில்துறையினருடன் நேரடியாகக் கை கோர்த்து, அவர்களின் தேவைகளுக்கேற்ப பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் மற்றும் நவீன தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப நமது தொழிலாளர்களைத் தயார்படுத்தும் ‘மறுதிறன்’ திட்டங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
முதலீட்டாளர்கள் பயமின்றி முதலீடு செய்யவும், அவசியமான வேளைகளில் வணிகத்தைச் சீரமைக்கவும் வழிவகுக்கும் அதேவேளை, ஊழியர்கள் நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்படுவதைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட வேண்டும்.
தொழிலாளர் சீர்திருத்தம் என்பது ஏதோ முதலாளிகளுக்கு மட்டும் சாதகமான ஒரு நடவடிக்கை என்ற குறுகிய பார்வையை அனேகரிடம் காணப்படுகின்றது. மாறாக அது சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமே புதிய வேலைவாய்ப்புகளையும், உயர் ஊதியத்தையும் உருவாக்க முடியும்.
அரசாங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் தனியார் துறை ஆகிய மூன்றும் நாட்டின் எதிர்காலத்தை மனதில் கொண்டு இச்சீரமைப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். காலத்தை இழுத்தடிக்கும் விவாதங்களைக் கடந்து, தெளிவான சட்டச் சீர்திருத்தங்களை உடனடியாகச் செயல்படுத்துவதே, நமது இளைஞர்கள் சொந்த மண்ணிலேயே கண்ணியத்துடனும் வளத்துடனும் வாழ்வதை உறுதிசெய்வதாக அமையும்.