;
Athirady Tamil News

ஐரோப்பாவை உலுக்கும் மக்கள் போராட்டம் : பிரான்சில் 3.20 லட்சம் பேர் பங்கேற்பு

0

பாரிஸ்,

விலைவாசி உயர்வு மற்றும் கல்வி பிரச்சினைகளை கண்டித்து பிரான்ஸ் நாட்டில் வெடித்துள்ள போராட்டம் 20-ஆவது நாளாக நீடித்து வருகிறது. சனிக்கிழமையன்று நடைபெற்ற மாபெரும் பேரணியில் மட்டும் சுமார் 3.20 லட்சம் பேர் பங்கேற்று அதிரவைத்துள்ளனர்.

70,000 போலீசார் குவிப்பு

தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அசம்பாவிதங்களை தடுக்க பிரான்ஸ் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சுமார் 70,000 போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.

560 பேர்

போராட்டம் பெரும்பாலும் அமைதியாக நடந்தபோதிலும், ஒரு சில இடங்களில் திடீர் வன்முறை வெடித்தது. மர்ம நபர்கள் சிலர் பொதுச்சொத்துக்களுக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். சனிக்கிழமை இரவு ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் 560 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐரோப்பாவை உலுக்கும் ‘ஜென்-ஸீ’ இளைஞர்கள்

பிரான்ஸை தொடர்ந்து இந்த போராட்டம் அண்டை நாடுகளான ஜெர்மனி, போர்ச்சுகல் மற்றும் நெதர்லாந்துக்கும் வேகமாக பரவியுள்ளது. ‘ஜென்-ஸீ’ என்று அழைக்கப்படும் இளம் தலைமுறையினர் இந்த நாடுகளின் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

ஜெர்மனி

கல்வி, சுகாதாரம் மற்றும் பருவநிலை பாதுகாப்பை வலியுறுத்தி, ஜெர்மனியின் 30 முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணிகள் நடைபெற்றன.

போர்ச்சுகல் – நெதர்லாந்து

போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரிலும், நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இளைஞர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த நகரங்கள் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகள் முழுவதும் விலைவாசி உயர்வு மற்றும் இளைஞர்களின் வாழ்வாதார பிரச்சினைகளால் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.