;
Athirady Tamil News

தேர்தலும் ‘வாதங்களும்’ !! (கட்டுரை)

0

இலங்கை போன்ற நாடுகளில் முன்வைக்கப்படும் இன, மத பயங்கர வாதங்களுக்கும் அரசியலுக்கும் நெருங்கிய ஒரு தொடர்பிருக்கின்றது. இங்கே அரசியல் எனும் போது உள்நாட்டு அரசியலுக்கு மட்டுமன்றி வெளிநாட்டு அரசியல் நகர்வுகளுக்கும் தொடர்பிருக்கின்றது என்பது நாம் அறியாததல்ல.

சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்து இனம் சார்ந்த அரசியல் இலங்கையில் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வந்திருக்கின்றது என்பதை வரலாற்றை ஆழமாக நோக்குகின்ற யாரும் அறிந்து கொள்வது அவ்வளவு கடினமன்று.

இதே வகிபாகத்தையே மதவாதமும், பெருந்தேசிய வாதமும், பயங்கரவாதமும் தீவிரவாத போக்குகளும் வகித்து வந்திருக்கின்றன. ஆனால் இதிலுள்ள ஆச்சரியம் என்னவென்றால் இன்று வரையும் அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு இவை பெரும்பாலும் வெற்றியையே பெற்றுக் கொடுத்திருக்கின்றன என்பதுதான்.

இலங்கையில் இனப் பிரச்சினையை எப்போதோ தீர்த்து வைத்திருக்கலாம். அதைச் செய்வதற்கு பெருந்தேசிய சக்திகள் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களும் இது விடயத்தில் பல தருணங்களில் தவறிழைத்தன என்றுதான் கூற வேண்டியுள்ளது.

அதுபோலவே, சிங்கள, இந்து, இஸ்லாமிய மத தீவிர செயற்பாட்டாளர்களும் தாம் சார்ந்த வாதங்களை முன்வைத்ததன் ஊடாக இலங்கையில் முரண்பாடுகளுக்கு தூபமிட்டு வந்திருக்கின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த வாதங்கள் எல்லாம் அரசியல் தரப்பினருக்கு நன்மை தராது என்றிருந்தால் என்றோ இந்த வாதங்கள் எல்லாம் ஒரு பிசாசைப் போல பிடிக்கப்பட்டு குடுவைக்குள் அடைக்கப்பட்டிருக்கும்.

ஆக, ஒரு ‘பிச்சைக்காரனின் புண்ணைப்போல’ இலங்கையில் ஏதாவது ஒரு குழப்பம் இருக்க வேண்டும் என்ற தேவைப்பாடு அரசியல் தரப்பினர், இனவாத, மதவாத மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு இன்று வரை இருந்து வருகின்றது. இந்தப் புண்ணில் ‘அழற்சியை’ ஏற்படுத்தும் வேலையை அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளும் செய்து கொண்டிருக்கின்றன எனலாம்.

யுத்தத்தை சந்தைப்படுத்தியே கிட்டத்தட்ட இலங்கையில் கிட்டத்தட்ட 40 வருட அரசியல் வெற்றிகள் சாத்தியமாக்கப்பட்டுள்ளன. சிங்கள அரசியல்வாதிகள் மட்டுமன்றி ஒரு வகையில் பார்த்தால், தமிழ் அரசியல்வாதிகளும் இதனை ஒரு கருவியாக பயன்படுத்தியிருக்கின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய, பணம் வழங்கிய கதைகள் கூட உள்ளன.

2009 இல் யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு யுத்த வெற்றிதான் சந்தைப்படுத்தல் சரக்காக இருந்தது. ஆனால் 5 வருடங்களுக்குப் பிறகு அதனை வெற்றிகரமாக சந்தைப்படுத்த முடியாத ஒரு கட்டம் வந்ததை நாம் அறிவோம்.

அந்த தருணத்தில் மதவாதமும் இனவாதமும் திட்டமிட்டு கையிலெடுக்கப்பட்டு சின்ன சின்ன அரசியல் நகர்வுகளில் வெற்றியை அவர்கள் அடைந்து கொண்டனர். குறிப்பாக இனவாதத்தால் ஒரு கோட்டையை ராஜபக்‌ஷக்கள் கட்டியிருந்தனர் எனச் சொல்லலாம்.

அப்போதுதான் இனவாதத்துக்கு எதிரான நல்லிணக்க சித்தார்ந்தம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நிலைமாறுகால நீதி என்பவற்றைக் கையில் எடுத்துக் கொண்டு களத்திற்கு வந்த மைத்திரி, ரணில் கூட்டணியில் நல்லாட்சி மலர்ந்தது.

அதன்பிறகு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு கருவி இருக்கவில்லை. அல்லது இருந்த கருவிகளும் மந்திரங்களும் வேலை செய்ய இயலாத ஒரு கட்டம் வந்ததது எனலாம். அந்த வேளையிலேயே 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றது.

தாக்குதலுக்குப் பிறகு சடசடவென எல்லாம் சொல்லி வைத்தாற்போல் நிகழ்ந்தததை நாம் இன்னும் மறந்து விடவில்லை. தொப்பி போட்டு தாடிவைத்த ஒரு கூட்டம் இந்த பயங்கரவாத செயற்பாட்டை மேற்கொண்டிருந்தாலும் இதனை ஆட்டுவித்தோரின் நிகழ்ச்சி நிரல் அரசியல் நோக்கை கொண்டதாக இருந்தது என்று நாம் அன்று அனுமானித்த விடயம் இப்போது பகிரங்கமாகவே பேசப்படுகின்றது. இவற்றைக் கோர்த்துப் பார்க்கின்ற போது இனவாதம் கைகூடாத தருணத்தில் இன்னுமொரு வாதம் கையிலெடுக்கப்பட்டிருக்கின்றது என்றுதான் கருத வேண்டியுள்ளது.

2022 இல் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சியின் பின்னணியில் பெருமளவானோரின் சமூக உணர்வு இருந்தது. அரச எதிர்ப்பு மனநிலையும், சமூக விடுதலை உணர்வும் இருந்தது. ஆனால் எங்கோ ஒரு மூலையில் அதற்குள் அரசியல், வெளிநாட்டு நலன்களும் செல்வாக்குச் செலுத்தியது. புதிய ஜனாதிபதி பதவியேற்பின் பின்னால் ஒரு தொலைக்காட்சியை அணைத்து விடுவது போல காட்சிகள் ‘ஓப்’ செய்யப்பட்டதில் இருந்து இதனை உணர முடிந்தது.

இப்போது உள்ளுராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் எந்த அபிவிருத்தியைச் செய்வதற்கும் தேர்தல் நடத்துவதற்கும் நிதியில்லை. அதற்கான சாதக நிலையும் இல்லை என்ற நியாயங்கள் கூறப்படுகின்றன. ஆனால் மத்திய வங்கியின் கஜானாவிலும் கடலில் மூழ்கிய கப்பலிலும் ஊழல் செய்வதற்கு இன்னும் பணமிருக்கின்றது என்பதே முரண்நகையாக உள்ளது.

இங்கு இன்னுமொரு விடயம் கவனிப்பிற்குரியது.

அதாவது நாட்டில் அபிவிருத்தியை கட்டியெழுப்புதவற்கும் பொருளாதார, சமூக கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்கும் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்ற அழைப்பை அரச தலைவர் பலமுறை விடுத்துவிட்டார்.

தமிழ் தரப்பிற்கு அரசியல் தீர்வையோ அதுபோன்ற ஒரு பொதியையோ வழங்குவதில் பல தடங்கல்கள், திட்டமிட்ட சூட்சும முட்டுக்கட்டைகள் காணப்பட்டாலும் தமிழ் தேசியத்தை மிகக் கவனமாகக் கையாள ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர். மறுபுறத்தில் கிள்ளுக்கீரையாக முஸ்லிம் அரசியல் இருக்கின்றது.

இவ்வாறு எல்லோருக்கும் அழைப்பு விடுத்துக் கொண்டு வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் இன ஆதிக்க செயற்பாடுகள்தான், சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. அக்குரணையில் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறவுள்ளதாக வெளியான கதைகளும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்தாமல் இல்லை.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் நிலங்கள் பல்வேறு தோரணைகளில் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அரசியல்வாதிகள், அரச இயந்திரத்தின் துணைகொண்டு சில குழுக்கள் அல்லது அதிகாரிகள் இதனைச் செய்கின்றார்கள். அத்துடன் மிக உன்னத வழிகாட்டியான புத்த பெருமானின் சிலையை பயன்படுத்தி சில நகர்வுகள் செய்யப்படுவது இன்னும் கவலைக்குரியதாகும்.

நாடு இப்போது இருக்கின்ற நிலையில் இதுபோன்ற நகர்வுகளுக்காக நேரத்தையும் பணத்தையும் செலவழிக்க வேண்டிய தேவையில்லை. அத்துடன் இது நல்லிணக்கத்தை குலைக்கும் என்பதால் நாட்டை ஒன்றிணைந்து எல்லோருமாக முன்னேற்றுவதற்கான முயற்சிகளுக்கு பெரும் தடைக்கல்லாகவும் அமையும்.

இதுவெல்லாம் ஆட்சியாளர்களுக்கு தெரியாததல்ல. அதனையும் மீறி இனவாத செயற்பாடுகளும் ஏனைய வாதங்கள் குறித்த அச்சமூட்டல்களும் மேற்கொள்ளப்படுகின்றது என்றால், எங்கோ அது உதைக்கின்றது.

அதாவது இதுவெல்லாம் அரசாங்கத்திற்கு குறிப்பாக ஜனாதிபதிக்கு நல்ல பெயரை ஏற்படுத்தக் கூடியவை அல்ல. அப்படியிருந்தும் இது முன்னெடுக்கப்படுகின்றது என்றால், ஒன்று இது பிரதான ஆட்சியாளரை சூட்சுமமாக குழிவெட்டி வீழ்த்தும் சதித்திட்ட செயற்பாடாகவும் அதன் ஊடாக எதிர்தரப்பு கட்சிகளில் ஒன்று அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நகர்வாகவும் இருக்க வேண்டும். அல்லது, அடுத்த தேர்தலுக்கு அரசாங்கமே ஒரு ‘வாதத்தை’ கூர்தீட்டுவதாக இருக்க வேண்டும்.

நாட்டில் உள்ளுராட்சி தேர்தல் நடைபெறாது என்றும் நேரடியாக அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி அகலக்கால் பாய்ச்சல் மேற்கொள்ளலாம் என்றும் ஊகங்கள் அரசியல் அரங்கில் பரவலாக முன்வைக்கப்படுவதை காண முடிகின்றது. ஒருவேளை அது உண்மையாக இருக்குமென்றால், அடுத்த தேர்தலை முன்னிறுத்தி அரச ஆதரவு தரப்போ அல்லது மொட்டு அணியோ ஏதோ ஒரு வாதத்தை பயன்படுத்த முனைவதாகவே கருத வேண்டியுள்ளது.

எப்படியிருப்பினும், இது இன்று கட்டுக்கடங்காத அடக்குமுறையாக மாறி வருகின்றது. அரசாங்கம் இரட்டை முகத்தை காட்டி வருவதாகவே பல சந்தர்ப்பங்களில் தோன்றுகின்றது. ‘இப்படியே போனால், இன்னுமொரு மோதல் நிலை உருவாகலாம்’ என சுமந்திரன் எம்.பி கூறுமளவுக்கு நிலைமைகள் சென்றிருக்கின்றன என்பது சர்வ சாதாரணமான விடயமல்ல.

எனவே, அரசாங்கமும் அரச இயந்திரத்தில் உள்ள அதிகாரிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். கடந்த காலத்தில் இனவாதம், பயங்கரவாதம், மதவாதத்திற்கு முட்டுக் கொடுக்கின்ற செயற்பாடுகளை மேற்கொண்டு, அதனூடாக ‘தின்பாருக்கு தேனெடுத்துக் கொடுத்து’ நாட்டில் இன்னுமொரு பின்னடைவுக்கு வித்திடக் கூடாது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.