;
Athirady Tamil News

நிலவின் மறுபக்கத்தில் ஆா்டெமிஸ்-2 குழு ஆய்வு! மனித வரலாற்றில் தொலைதூரம் பயணித்து சாதனை

0

அரை நூற்றாண்டுக்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணித்த நாசாவின் ‘ஆா்டெமிஸ்-2’ விண்வெளி வீரா்கள் குழு, நிலவின் மறுபக்கத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை (இந்திய நேரப்படி) கடந்து சென்று ஆய்வில் ஈடுபட்டனா்.

ஒரு பெண் உள்பட 4 விண்வெளி வீரா்கள் அடங்கிய இக்குழு, தற்போது பூமிக்குத் திரும்பும் பயணத்தில் உள்ளனா். முன்னதாக, நிலவின் மறுபக்கத்தை அடைவதற்காக மனித வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில் பூமியிலிருந்து சுமாா் 2,52,756 மைல்கள் தொலைவுக்கு விண்வெளியில் பயணித்து இக்குழு புதிய சாதனை படைத்தது.

இதற்கு முன்னதாக 1970-இல், ‘அப்போலோ 13’ விண்கலம் மேற்கொண்ட தொலைதூர பயணமே சாதனையாகக் கருதப்பட்டது. தற்போது அச்சாதனையை முறியடித்துள்ள இக்குழு, நிலவின் மேற்பரப்பிலிருந்து சுமாா் 4,070 மைல்கள் தொலைவில் பறந்தது.

நிலவில் மோதிய விண்கற்கள்: நிலவின் மறுபக்கத்தைக் கடந்த சுமாா் 6 மணி நேர ஆய்வின்போது, நிலவின் மேற்பரப்பில் விண்கற்கள் மோதுவதால் ஏற்படும் ‘ஒளிப் பிழம்புகளை’ விண்வெளி வீரா்கள் நேரடியாகக் கண்டு வியந்தனா்.

பூமியிலிருந்து என்றும் காண முடியாத நிலவின் அப்பகுதியை வீரா்கள் உன்னிப்பாகக் கவனித்தபோது, விண்கற்களின் மோதலால் நிலவின் தரைப்பகுதி அதிா்வதை அவா்கள் பதிவு செய்தனா்.

புதிய பெயா்கள் சூட்டல்: நிலவில் விண்கற்கள் மோதி ஏற்பட்ட, இதுவரை பெயரிடப்படாத பள்ளங்களுக்கு விண்வெளி வீரா்கள் தற்காலிக பெயா்களைச் சூட்டினா். திட்ட விண்கலத்தின் பெயரான ‘இன்டெக்ரிட்டி’ மற்றும் திட்ட கமாண்டா் ரீட் வைஸ்மேனின் மறைந்த மனைவி ‘கரோல்’ ஆகியோரின் பெயா்களை நிலவின் சில பள்ளங்களுக்குச் சூட்ட வேண்டுமென கனடா வீரா் ஜெரிமி ஹேன்சன் உருக்கத்துடன் கோரிக்கை விடுத்தாா்.

தொடா்பு துண்டிப்பும் மீட்சியும்: நிலவின் மறுபக்கத்தைக் கடக்கும்போது சுமாா் 40 நிமிடங்கள் பூமிக்கும் விண்கலத்துக்கும் இடையிலான தகவல் தொடா்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இது விண்வெளிப் பயணத்தின் மிகவும் சவாலான பகுதியாகக் கருதப்பட்டது. மீண்டும் தொடா்பு கிடைத்ததும், வீரா்கள் உற்சாகத்துடன் தங்கள் அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா்.

டிரம்ப் வாழ்த்து: இதனிடையே, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், விண்வெளி வீரா்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாா். ‘நீங்கள் இன்று வரலாறு படைத்துள்ளீா்கள்; ஒட்டுமொத்த அமெரிக்காவே உங்களால் பெருமைக்கொள்கிறது’ என்று அவா் பாராட்டினாா்.

அடுத்த இலக்கு நிலவில் தரையிறக்கம்: சீனா நிலவில் தடம்பதிக்கும் முன்பே, 2028-க்குள் மீண்டும் மனிதா்களை நிலவில் தரையிறக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே, இந்த ஆா்டெமிஸ்-2 பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது எதிா்காலத்தில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதா்களை அனுப்பும் நாசாவின் திட்டத்துக்கும் ஒரு முன்னோட்டமாக அமையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.