மரணப் பொறிகளாகும் இலங்கையின் வீதிகள்!
நவம்பர் 10ஆம் திகதி காலை அநுராதபுரம் – ரம்பேவ பகுதியில் ஏ-09 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோரமான பேருந்து விபத்து, ஒட்டுமொத்த தேசத்தையும் மீளவும் ஒரு பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகளும், ஒரு தனியார் பேருந்தும் ஒன்றோடொன்று மோதிக் கொண்ட இந்தத் துயரச் சம்பவத்தில், பேருந்து சாரதி ஒருவர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 70க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் அநுராதபுரம் மற்றும் மதவாச்சி மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்டப் பொலிஸ் விசாரணைகளின்படி, வவுனியாவிலிருந்து ரம்பேவ நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்து ஒன்று, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற வேளையிலேயே இக்கொடூரம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மழையினால் ஈரலிப்பாக இருந்த வீதிச் சூழல், மோசமான காலநிலை மற்றும் பார்வைக் குறைபாடு ஆகியவற்றுடன், சாரதிகளின் அதீத அவசரமும் கவனயீனமுமே இந்த மூன்று பேருந்துகளின் மோதலுக்கு வித்திட்டுள்ளன.
இலங்கையின் வீதிகளில் நாள்தோறும் அரங்கேறும் விபத்துகளுக்கு இந்தச் சம்பவம் விதிவிலக்கல்ல; மாறாக, இதனை எமது போக்குவரத்து கலாசாரத்தின் ஒட்டுமொத்தப் பிரதிபலிப்பாகவே பார்க்க வேண்டும். 2026ஆம் ஆண்டின் கடந்த 10 மாத காலப்பகுதியில் மட்டும் நாட்டில் இடம்பெற்ற 2,257 பாரிய வீதி விபத்துகளில் 2,381 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வூட்லர் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 785 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் ஆவர்.
200க்கும் மேற்பட்டோர் அப்பாவிப் பாதசாரிகள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வளவு விபத்துகள் நடந்தும், தொடர்ச்சியான விழிப்புணர்வுகளும் கண்டனங்களும் வெளிவந்தும், எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாதது போல் நமது நெடுஞ்சாலைகள் மரணப் பொறிகளாக மாறிக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தற்போது இலங்கையில் யார் வாகனத்தின் சாரதி இருக்கையில் அமர்ந்தாலும், அவர்களிடம் ஒருவிதமான விபரிக்க முடியாத பரபரப்பும் மன அழுத்தமும் ஏற்படுவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். முன்னே செல்லும் வாகனத்தை முந்திச் செல்ல வேண்டும், குறிப்பிட்ட நேரத்திற்குள் இலக்கை அடைய வேண்டும் என்ற அவசரம் மட்டுமே மனித உயிர்களின் மதிப்பை இரண்டாம் இடத்திற்குத் தள்ளியுள்ளது.
சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளுடனான கலந்துரையாடலொன்றில், மின்சாரத்தில் இயங்கும் புதிய வாகனங்களின் (பச்சை நிற இலக்கத் தகடுகள் கொண்டவை) பெருக்கம் குறித்த தகவல்கள் வெளியாயின. ஒரு நாளில் மாத்திரம் நூற்றுக்கணக்கான புதிய வாகனங்கள் வீதிகளில் இணையும் அதேவேளை, மறுபுறம் முப்பது நாற்பது வருடங்கள் பழைமையான, புகையைக் கக்கும், பிரேக் கோளாறுகளுடன் இயங்கும் வாகனங்களும் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கின்றன. பாவனைக்கு உதவாத இத்தகைய பழைய காலத்து வாகனங்களை அப்புறப்படுத்துவது குறித்து அரசாங்கம் துணிச்சலான தீர்மானங்களை எடுக்க வேண்டிய தருணம் இது.
பயணிகளின் அச்சமும் இளையோரின் பொறுப்பற்ற போக்கும் இங்கு கவனிக்கத்தக்கது. பயணிகளாக நாம் பேருந்துகளில் ஏறும்போதே நமது உயிரைப் பணயம் வைத்துத்தான் பயணிக்க வேண்டியுள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எமது நாட்டின் பேருந்துப் பயணங்களை ‘ஃபார்முலா வன்’ (Formula 1) கார்ப் பந்தயம் போல இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் விபரிப்பது எமது நாட்டுக்குப் பாரிய அவமானத்தையும் சுற்றுலாத் துறைக்குப் பாதிப்பையும் ஏற்படுத்துவதல்லவா?
பாதசாரிக் கடவைகளில் கூட அச்சமின்றி வீதியைக் கடக்க முடியாத சூழலே நிலவுகிறது. கடந்த வாரங்களில் மாத்திரம் பாதசாரிக் கடவைகளைக் கடந்த நான்கு பேர் வெவ்வேறு இடங்களில் விபத்துகளில் பலியானதே இதற்குச் சாட்சியாகும்.
அதேபோல், இலங்கையில் சுமார் 60 இலட்சம் மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இளம் வயதினர் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துவது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. எனவே, பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வாங்கிக் கொடுக்கும்போது, அதிலுள்ள ஆபத்துகளை உணர்ந்து கூடுதல் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதே இங்கு முக்கியமானது. விபத்து இடம்பெற்ற சில நாட்களுக்கு அது ஊடகங்களில் பேசுபொருளாக இருந்துவிட்டு, பின்னர் மற்றுமொரு விபத்து நடைபெறும் வரை மறக்கப்பட்டு விடுகிறது. இந்த ரம்பேவ விபத்தையாவது ஒரு சாதாரண விபத்தாக அல்லாமல், நமது நாட்டின் போக்குவரத்து அமைப்பின் மீதான ஒரு ‘சிவப்பு எச்சரிக்கையாகப்’ பார்க்க வேண்டும். இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கமும் போக்குவரத்து அதிகாரிகளும் அதிரடி நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்:
தவறிழைப்போருக்கு கடுமையான சட்டமும் பிணை மறுப்பும் அவசியமாகின்றது. கவனயீனமாக வாகனம் செலுத்தி உயிர்ப் பலிகளை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு எக்காரணம் கொண்டும் பிணை வழங்கப்படக் கூடாது. அத்துடன், அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை எவ்வித தயவுதாட்சண்யமுமின்றி உடனடியாக இரத்துச் செய்யும் சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பது சில ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
பழைய வாகனங்களை அகற்றுவதும் இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. வீதிகளுக்குப் பொருத்தமற்ற, நீண்டகாலமாகச் சேவையில் ஈடுபட்டுள்ள தரம் குறைந்த வாகனங்களை முற்றிலுமாக அகற்றுவதற்கான தேசியக் கொள்கையை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
சாரதிகளுக்கான பயிற்சியும் மனநலனும் கவனம் செலுத்தப்பட வேண்டிய மற்றொரு அம்சமாகும். தனியார் மற்றும் அரச பேருந்து சாரதிகளுக்கு முறையான மனநல மற்றும் தொழில்முறைப் பயிற்சி நெறிகளைக் கட்டாயமாக்குவதோடு, அவர்களின் வேலைநேர அழுத்தத்தைக் குறைப்பதற்கான வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.
மக்களின் உயிர் காக்கும் விடயத்தில் பாரபட்சமற்ற, கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ரம்பேவ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களின் வேதனைக்கு யார் பொறுப்புக் கூறுவது? எதிர்காலத்தில் இவ்வாறான துயரங்கள் தொடராமல் தடுக்க, சட்டத்தின் இறுக்கமும் ஓட்டுநர்களின் பொறுப்புணர்வும் கைகோர்க்க வேண்டும்.