;
Athirady Tamil News

ஜனாதிபதி ரணிலிடமிருந்து மக்களின் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது பாரிய சவாலாகவுள்ளது – ஜி.எல். பீரிஸ்!!

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது பாரிய சவாலாக உள்ளது.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதை காட்டிலும், தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

வெலிகம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற சுதந்திர மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதி இல்லை என்று அரசாங்கம் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.

அரசாங்கத்துக்கு வாக்கு இல்லை என்பதே தேர்தலை பிற்போடும் செயற்பாடுகளுக்கான உண்மை காரணியாக உள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் 21 தடவை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் 22ஆவது முயற்சி தற்போது பகுதியளவில் வெற்றி பெற்றுள்ளது.

வாக்கெடுப்புக்கு தேவையான வாக்குச்சீட்டுக்களை அச்சிட நிதி வழங்காத காரணத்தினால் அரச அச்சக திணைக்களம் வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை இடைநிறுத்தியுள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் இவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை.

பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் முயற்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பத்தில் இருந்து முன்னெடுக்கிறார்.

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் நாட்டு மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை முழுமையாக புறக்கணித்தார்கள்.

ஆகவே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டு மக்கள் ஒருபோதும் ஆதரவு வழங்கப் போவதில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டு எதிர்வரும் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்தி மக்களாணையை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார்.

2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த பெறுபேற்றில் எவ்வித மாற்றமும் இனி ஏற்படாது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து நாட்டு மக்கள் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது பாரிய சவாலாக உள்ளது.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதை காட்டிலும், தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகிறோம்.

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க சட்டத்தின் ஊடாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.