;
Athirady Tamil News

ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் மோசடியால் நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளது -சந்திரிக்கா!!

0

ராஜபக்ஷ குடும்பம் எவ்வித வரையறையும் இல்லாமல் அரச நிதியை கொள்லையடித்ததால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு அரச தலைவர்கள் இன்று சர்வதேசத்திடம் யாசகம் பெறுகிறார்கள். நாட்டின் இன்றைய அவல நிலையினால் மன வேதனைக்குள்ளாகியுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

மதுகம நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நவ லங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டின் இன்றைய அவல நிலையை கண்டு மன வேதனையடைகிறேன். முழு உலகத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்த இலங்கை இன்று ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் மோசடியினால் வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு அரச தலைவர்கள் தற்போது சர்வதேசத்திடம் யாசகம் பெறுகிறார்கள்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளதை பொருளாதார பாதிப்பு என்ற வரையறைக்குள் மாத்திரம் வைத்து மதிப்பிட முடியாது.பொருளாதார பாதிப்பினால் சமூக கலாசாரம்,நல்லிணக்கம்,தேசிய பாதுகாப்பு,கருணை,பிறருக்கு உதவி செய்தல் என அனைத்து நல்ல விடயங்களும் சீரழிந்து விட்டது.பொருளாதார பாதிப்பினால் நாடு சீரழிந்து விட்டது.

எனது 11 வருட ஆட்சிகாலத்தில் யுத்தத்துடன் போராடினேன்.ஒரு யுத்தத்தை புரிந்துகொண்டு மறுபுறம் நாட்டை அபிவிருத்தி செய்தேன்.பதவி காலம் முடிந்த பிறகு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆட்சியை ஒப்படைக்கும் போது நாட்டில் ரூபாவும் இருந்தது,டொலரும் இருந்தது,

ராஜபக்ஷ குடும்பம் மக்களாணை என குறிப்பிட்டுக் கொண்டு நாட்டு மக்களை தவறாக வழிநடத்தி ஆட்சியை கைப்பற்றினார்கள்.ஒரு குடும்பம் முழு நாட்டையும் சூறையாடியது. வரையறையற்ற அரச முறை கடன்களினாலும் ,அனைத்து அபிவிருத்திகளிலும் மேற்கொள்ளப்பட்ட மோசடியாலும் நாடு பாரிய கடன் சுமையை எதிர்கொண்டது.

ராஜபக்ஷ குடும்பமும்,அவர்களை சார்ந்தோரும் எவ்வித வரையறையும் இல்லாமல் அரச நிதியை கொள்லையடித்தார்கள். ஊழல் மோசடி தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ அவதானம் செலுத்தவில்லை,அகப்படாத வகையில் ஊழல் மோசடிகளை செய்யுங்கள் என அவர் அவரது சகாக்களுக்கு ஆலோசனை வழங்கினார். இறுதியில் நேர்ந்தது என்ன பொருளாதார பாதிப்பு முழு நாட்டையும் வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

மீண்டும் ராஜபக்ஷர்கள் தலைமையிலான ஆட்சியை உருவாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் அரசியல் செய்கிறார்கள்.நாட்டின் எதிர்கால தலைமுறையினரின் நலனை கருத்திற் கொண்டு மிகுதியாக இருக்கும் வளங்களை பாதுகாக்க வேண்டுமாயின் ராஜபக்ஷர்கள் கௌரவமாக அரசியலில் இருந்து விலக வேண்டும். அதுவே நாட்டுக்கு செய்யும் அளப்பரிய சேவையாக காணப்படும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.