;
Athirady Tamil News

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பல பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கின!!

0

அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகின்றன.

இதன் காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ள அனர்த்த நிலை உருவாகியுள்ளதுடன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் சில குடியிருப்புக்களிலும் வெள்ளம் புகுந்துள்ளது.

இதேநேரம் அரச மற்றும் அரச சார்பற்ற திணைக்களங்கள் பாடசாலைகள் சிலவற்றிலும் வெள்ளம் புகுந்துள்ள நிலையில் அலுவலகங்களின் அன்றாட செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

சில பகுதிகளில் முற்றாக வெள்ளம் சூழ்ந்துள்ளதனால் வீதி அருகில் உள்ள வடிகான்களை அவதானிக்க முடியாத நிலையில் மக்கள் விபத்தினை எதிர்கொள்ளும் நிலையும் உருவாகியுள்ளது.

இதேநேரம் அறுவடைக்கு தயாராகிவிருந்த வயல் நிலங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அறுவடை மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

சாகாம வீதியில் உள்ள நீத்தை நீர் வடிந்தோடும் பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாதவாறு நீர் வடிந்தோடுவதை காண முடிகின்றது.

ஆலையடிவேம்பு பிரதேசத்தின் பிரதான நீர் வெளியேற்றப்படும் சின்னமுகத்துவாரம் கழிமுகப்பிரதேசம் உடைப்பெடுத்து நீர் வெளியேறுவதனால் வெள்ளம் அனர்த்தம் சற்று குறைவடையும் நிலையினையும் அவதானிக்க முடிகின்றது.

இது இவ்வாறிருக்க ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையிலான கணக்காளர் க.பிரகஸ்பதி சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பிரதேச செயலக அதிகாரிகள் வெள்ள அனர்த்த நிலை தொடர்பில் இன்று நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டுள்ளதுடன், மாவட்ட செயலகத்திற்கு நிலைமை தொடர்பில் அறிவித்துள்ளதுடன் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வெள்ள அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் தெளிவூட்டினர்.

இந்நிலையில் தொடர்ச்சியாக மழை பெய்யும் சந்தர்ப்பம் உருவானால் தாழ்நிலப்பகுதியில் வாழும் மக்கள் இடம் பெயர்ந்து செல்ல கூடிய நிலை உருவாகியுள்ளதுடன் அவர்களுக்குரிய நிவாரணப்பணி மேற்கொள்ள வேண்டிய நிலைக்கும் தள்ளப்படும் சந்தர்ப்பம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.