;
Athirady Tamil News

சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரி ஓட்டு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு!!

0

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஸ்டராங் ரூம் இன்று திறக்கப்பட்டு தேர்தல் பொதுப்பார்வையாளர் முன்னிலையில் மண்டல வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணி நடந்து வருகிறது. இந்த வாக்குபதிவு எந்திரங்கள், பொருட்களை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பெற்றுக்கொள்வார்கள். பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் விதிமீறல் தொடர்பாக வரும் புகார்கள் குறித்து முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் மட்டுமல்ல பொதுமக்களும் விதிமீறல் தொடர்பாக புகார் அளிக்கலாம். இதற்காக இலவச எண் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 10 நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுவரை 796 தேர்தல் விதிமீறல் புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில் பல புகாருக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. தகுதியான வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.

வாக்களிப்பதில் முறைகேடு நடைபெற வாய்ப்பு இல்லை. ஒருவர் வாக்களிக்க வரும்போது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து தான் வாக்களிக்க முடியும். எனவே இதில் முறைகேடு நடைபெற வாய்ப்பு இல்லை. தேர்தல் நடைபெறும் 238 வாக்கு சாவடிகளிலும் நுண்பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.