;
Athirady Tamil News

தீர்த்தவாரியின் போது 5 பேர் பலியான குளத்தில் இறங்க தடை- கோவில் தரிசனம் ரத்து!!

0

சென்னையை அடுத்த நங்கநல்லூர், எம்.எம்.டி.சி. காலனியில் பழமையான தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக கோவிலில் இருந்து சுமார் 400 மீட்டர் தூரத்தில் உள்ள கங்கையம்மன் கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடத்த திட்டமிட்டு இருந்தனர். அர்ச்சகர்கள், தன்னார்வலர்கள் உள்பட சுமார் 30-க்கும் மேற்பட்டோர் உற்சவர் சாமி சிலையுடன் குளத்திற்குள் சென்று நீராடினர். அப்போது அர்ச்சகர்களுக்கு பாதுகாப்பு அரணாக சங்கிலிபோல் கைகோர்த்து நின்ற தன்னார்வலர்களில் ஒருவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார்.

அவரை காப்பாற்ற முயன்ற அருகில் நின்ற 4 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கினர். இதில் நங்கநல்லூரை சேர்ந்த வனேஷ் (வயது 19), புழுதிவாக்கம் முத்து முகமது தெருவை சேர்ந்த ராகவ் (19), புழுதிவாக்கம் ராஜேஸ்வரி நகரை சேர்ந்த ராகவன் (22), நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. நகர் பகுதியை சேர்ந்த சூர்யா (22), மடிப்பாக்கத்தை சேர்ந்த யோகேஸ்வரன் (23) ஆகிய 5 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். அவர்களின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலியான 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த துயர சம்பவம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் ஆறுதல் கூறினர். கோவில் குளத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. பலியானவர்களில் வனேசும், ராகவனும் சி.ஏ.மாணவர்கள், ராகவ் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.காம் படித்து வந்தார். சூர்யா தனியார் தொலைக்காட்சியில் மேக்கப் கலைஞராக வேலை பார்த்தார். யோகேஸ்வரன் ஒரகடத்தில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலைபார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பலியானவர்கள் தண்ணீரில் மூழ்கும் வீடியோ காட்சி பார்ப்பவர்களை பதை பதைக்க வைக்கிறது.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக இந்த கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்று வந்து உள்ளது. முதல் ஆண்டு மட்டும் உரிய பாதுகாப்பு நடைமுறை கடைபிடிக்கப்பட்டது. பின்னர் 2 ஆண்டுகளும் உரிய விதிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே தீர்த்தவாரியின் போது 5 பேர் பலியான கங்கையம்மன் கோவில் குளத்தில் இறங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. குளத்திற்கு செல்லும் குளத்தின் முன்பகுதி கேட் மூடப்பட்டு உள்ளது.

அதில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் பங்குனி உத்திர விழா நடைபெற்ற தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் பொதுமக்கள் சாமி தரிசனம் நிறுத்தப்பட்டு உள்ளது. கோவில் நடை சாற்றப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருக்கிறது. அதில், தவிர்க்க முடியாத காரணத்தால் பொது தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு உள்ளனர். கோவில் குளத்தில் 5 பேர் பலியான விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பழவந்தாங்கல் போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.