;
Athirady Tamil News

எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த உதவி கமிஷனரிடம் சி.பி.சி.ஐ.டி. திடீர் விசாரணை!!

0

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில் யாருமே எளிதில் நெருங்க முடியாத இடமாக இருந்த கொடநாடு பங்களாவில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டதும், அங்கிருந்த ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. 300-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் நீடிக்கும் மர்மத்தை வெளிக்கொண்டு வருவதற்காக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கொடநாடு வழக்கில் திடீர் திருப்பமாக அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரியான உதவி கமிஷனர் கனகராஜிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர். உதவி கமிஷனர் கனகராஜின் வீடு சென்னை மந்தைவெளியில் உள்ள சி.ஐ.டி. காவலர் குடியிருப்பில் உள்ளது. அங்குள்ள வீட்டுக்கு இன்று காலை 7.30 மணி அளவில் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் சூப்பிரண்டு முருகவேல் தலைமையிலான போலீசார் சென்றனர். கொடநாடு வழக்கின் விசாரணை அதிகாரியான முருகவேல் வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்களை திரட்டி வரும் நிலையில்தான் இன்று திடீரென எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது.

காலை 7.30 மணியில் இருந்து 10 மணி வரையில் உதவி கமிஷனர் கனகராஜிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் கொடநாடு கொலை-கொள்ளை வழக்கின் விசாரணை அடுத்த கட்டத்துக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொடநாடு வழக்கில் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்தன.

இது தொடர்பாக பலர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் விசாரணை நடத்தி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளனர். இதன்படி அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் மேலும் பலரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இது தொடர்பான தகவல்களை திரட்டுவதற்கு வசதியாகவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர் விசாரணையில் இறங்கி உள்ளனர். இதன் மூலம் கொடநாடு வழக்கின் விசாரணை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரது முன்னாள் பாதுகாவலரான போலீஸ் அதிகாரி ஒருவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி இருப்பது அ.தி.மு.க. வட்டாரத்திலும் அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் கொடநாடு வழக்கின் அடுத்த கட்ட விசாரணை தொடர்பான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.