;
Athirady Tamil News

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்- கருத்துக்கணிப்பில் புதிய தகவல்!!

0

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பம்பரமாய் சுழன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பா.ஜ.க. மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடகப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், தொடர்ச்சியாகப் பல மாநில பேரவைத் தேர்தல்களில் தோல்வி கண்டிருந்தாலும் அண்மையில் ஹிமாசல் பேரவைத் தேர்தலில் பெற்ற வெற்றி, அக்கட்சிக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் வழங்கியுள்ளது.

அந்த உற்சாகத்தில் காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பேரவை அமையும் சூழல் ஏற்பட்டால், யார் ஆட்சியமைப்பது என்பதில் மதச்சார்பற்ற ஜனதா தளம் துருப்புச் சீட்டாக செயல்படும். இத்தகைய சூழலில் ஆட்சியை பிடிப்பது யார் என்ற கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 140 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி ஆட்சியமைக்கும் என தகவல் வெளியானது.

கன்னட டிஜிட்டல் ஊடகமான ஈதினா டாட் காம் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் வெல்லும் என தெரிவித்துள்ளது. பிரபல தேர்தல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ் உடன் இணைந்து கர்நாடக தேர்தல் கருத்துக் கணிப்பை ஈதினா டாட் காம் நடத்தியுள்ளது. தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின்படி, கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 134 தொகுதிகளிலிருந்து 140 தொகுதிகள் வரை காங்கிரஸ் கைப்பற்றும் என்றும் பா.ஜ.க.விற்கு 57-ல் இருந்து 65 இடங்கள் வரை கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 104 தொகுதிகளில் வென்ற பாஜகவுக்கு தற்போது பெரும் சரிவு ஏற்படும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு 43 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனவும் காங்கிரசைவிட 10 சதவீதம் குறைவாக 33 சதவீத வாக்குகளை பாஜக பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக தலைநகரான ஹைதராபாத் கர்நாடக பிராந்தியத்தில் காங்கிரஸுக்கு 31-ல் இருந்து 37 தொகுதிகள் வரை கிடைக்கும் எனவும், ஹைதராபாத் கர்நாடக பிராந்தியத்தில் பா.ஜ.க.வுக்கு இரண்டிலிருந்து நான்கு தொகுதிகள் வரை கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

மும்பை கர்நாடகா பிராந்தியத்தில் காங்கிரசுக்கு 40-லிருந்து 46 இடங்கள் கிடைக்கும் என்றும், தெற்கு கன்னடத்தில் காங்கிரசுக்கு 26 முதல் 32 தொகுதி வரையும், பெங்களூருவில் 16-லிருந்து 20 தொகுதி வரையும் கிடைக்கும் என்றும் கணித்துள்ளனர். மேலும் கர்நாடகத்தின் மத்திய கர்நாடகா பிராந்தியத்தில் காங்கிரசுக்கும் 3-ல் இருந்து 4 தொகுதிகளும், பாஜக 19 லிருந்து 23 தொகுதிகளும் கைப்பற்ற வாய்ப்புள்ளது என்றும், கடலோர கர்நாடகத்தில் பாஜகவிற்கு 10 லிருந்து 14 தொகுதிகள் வரையும், காங்கிரசிற்கு ஐந்திலிருந்து ஒன்பது தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.