;
Athirady Tamil News

அதிபர் டிரம்ப்பின் புதிய மருமகள் பெட்டினா ஆண்டர்சன்!

0

டிரம்ப்பின் புதிய மருமகள் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியருக்கும் (48) சமூக ஆர்வலரும் மாடலிங் துறையைச் சேர்ந்தவருமான பெட்டினா ஆண்டர்சனுக்கும் (39) நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

ஃபுளோரிடாவைச் சேர்ந்த பெட்டினா ஆண்டர்சன், பிஏஇ வென்சர்ஸ் எல்எல்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பது மட்டுமின்றி, மருந்துத் துறையில் பணியாற்றிய அனுபவமிக்க வணிக மேம்பாட்டு இயக்குநராகவும், மேலாண்மை, சந்தை ஆராய்ச்சி, விற்பனை, விற்பனை விளக்கக் காட்சிகளில் திறமையானவராகவும் இருந்து வருகிறார். மேலும், மாடலிங் துறையிலும் கோலோச்சி வருபவராவார்.

பெட்டினாவும் அவரின் சகோதரர்களும் இணைந்து, பேரழிவு நிவாரண நிறுவனங்களுக்கு உதவும் லாபநோக்கற்ற தி பாரடைஸ் ஃபண்ட் என்ற நிறுவனத்தையும் நிறுவியுள்ளனர்.

டிரம்ப்பின் மருமகளாகப் போகும் ஆனந்தத்தில் நிச்சயதார்த்த அறிவிப்பின்போது பேசிய பெட்டினா, “இது என் வாழ்க்கையின் மறக்க முடியாத தருணம். என் வாழ்நாள் காதலரை திருமணம் செய்யவிருக்கிறேன். உலகின் மிகவும் அதிருஷ்டமான பெண்ணாக உணர்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

டிரம்ப் ஜூனியருக்கு இது மூன்றாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

வனேசா டிரம்ப் என்பவரும் டிரம்ப் ஜூனியரும் 2006-ல் திருமணம் செய்துகொண்ட நிலையில், 2018-ல் விவாகரத்து செய்தனர். 12 ஆண்டுகள் ஒன்றாக இருந்த இவர்களுக்கு பதின்வயதிலான 5 குழந்தைகள் உள்ளனர்.

தொடர்ந்து, செய்தித் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த கிம்பர்லி கில்ஃபாய்லுக்கும் டிரம்ப் ஜூனியருக்கும் 2018-ல் அறிமுகம் ஏற்பட்டு, 2020-ல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இருப்பினும், 2024-ல் தங்கள் உறவை முறித்துக் கொண்டனர். இவர்களின் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இருப்பினும், அதே ஆண்டில்தான் டிரம்ப் ஜூனியருக்கும் பெட்டினாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கிம்பர்லியுடன் உறவில் இருந்தபோதே, 2024 ஆகஸ்ட் மாதத்தில் பெட்டினாவுடன் டிரம்ப் ஜூனியருக்கு பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்துதான், 2024 டிசம்பரில் கிம்பர்லியும் டிரம்ப் ஜூனியரும் பிரிந்து விட்டதாகச் செய்திகள் வெளியாகின.

You might also like

Leave A Reply

Your email address will not be published.