;
Athirady Tamil News

ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச்சாலைக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்!!

0

பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க மத்திய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. இந்த சாலை கண்ணிகை பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், சென்னங்காரணி, பருத்தி மேனிகுப்பம், பனப்பாக்கம், பெரண்டூர், போந்தவாக்கம் உட்பட 21 கிராமங்கள் வழியாக சித்தூர் வரை அமைகிறது. இந்த சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஊத்துக்கோட்டை தாலுகாவில் சுமார் 276 ஏக்கர் நிலப்பரப்பில் விளை நிலங்கள் கோவில்கள், அரசுப் பள்ளி கட்டிடங்கள், 200க்கும் மேற்பட்ட வீடுகள், 13 ஏரிகள், 3 குளங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. 6 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

எனினும் சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பருத்தி மேனிகுப்பத்தில் 6 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 6 வழிச் சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் ஏராளமான விவசாயிகள் அங்கு திரண்டு சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை தாசில்தார் வசந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யபாமா ஆகியோர் அங்கு விரைந்து சென்று போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.