தாயிற்காக விமானி ஒருவர் செய்த நெகிழ்ச்சி செயல்.. அதிகம் பகிரப்படும் காணொளி
விமானப் பயணத்தின் போது தனது தாய்க்கு இளம் விமானி ஒருவர் ஆற்றிய உணர்ச்சிபூர்வமான செயல் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
விமானப் பயணம் என்பது பலருக்கு ஒரு சிறப்பு அனுபவம், அண்மையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காணொளி பலரின் இதயங்களைத் தொட்டுள்ளது எனலாம்.
அஸ்வத் புஷ்பா என்ற விமானி, தனது தாயை விமானத்தில் முதல் முறையாக அழைத்து சென்ற விதமானது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
முதல் பயணம்
அஸ்வத் புஷ்பா, தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இச்சம்பவம் தொடர்பான காணொளியில், அவரின் தாய், தன் வாழ்க்கையில் முதல் விமான பயணத்தை மேற்கொண்டமை பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த காணொளியில், விமானி தனது தாயை அன்புடன் அணைத்து, பின்னர் பயணிகளுக்கு ஒரு நெகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிடுகின்றார்.
அதில் “இன்று விமானத்தில் என்னுடன் ஒரு சிறப்பு விருந்தினர் இருக்கிறார். வழக்கமாக நான் அவரை மளிகைக் கடை அல்லது சலூனுக்கு அழைத்துச் செல்வேன், ஆனால் இன்று நான் அவரை முதல் முறையாக வேறொரு நாட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்.
அந்த சிறப்பு நபர் என் அன்புக்குரிய தாய்,” என்று விமானி மிகுந்த உணர்ச்சியுடன் பயணிகளுக்கு அறிவிப்பு விடுக்கின்றார்.
இந்த அறிவிப்பு விமானத்தில் இருந்த மற்ற பயணிகளின் கைதட்டலுடன் வரவேற்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் விமானியின் தாயாரை அன்புடன் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.