;
Athirady Tamil News

பேரிடர் மேலாண்மைக்கு ரூ.8,000 கோடியில் 3 திட்டங்கள்: மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு!!

0

அனைத்து மாநிலங்களிலும் தீயணைப்புத் துறையை நவீனப்படுத்தவும், முக்கிய நகரங்களில் வெள்ள பாதிப்பை குறைக்கவும், 17 மாநிலங்களில் நிலச்சரிவை தடுக்கவும் ரூ.8,000 கோடியில் 3 முக்கிய திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மை அமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:

நாட்டில் எங்கேயாவது பேரிடர் ஏற்பட்டால், அதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்ற நிலையை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மாநிலங்களில் உள்ள தீயணைப்புத் துறையை நவீனப்படுத்த ரூ.5,000 கோடி மதிப்பிலான நிதியுதவி அளிக்கப்படும். இதற்காக விரிவான திட்டத்தை மத்திய அரசுதயாரித்துள்ளது. அது மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களில் வெள்ள பாதிப்பு அபாயத்தை குறைக்க, ரூ.2,500 கோடி வழங்கப்படும். இது குறித்த விரிவான திட்டங்கள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

17 மாநிலங்களில் நிலச்சரிவை எதிர்கொள்ள, ரூ.825 கோடியை மத்திய அரசு வழங்கும். 7 அணுமின் நிலையங்கள் கட்டப்படும் மாநிலங்களை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர். இங்குபேரிடர் சம்பவங்களை தடுக்க கடுமையான விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது நம் அனைவருக்கும் மிக முக்கியமானது.

மாதிரி தீயணைப்புத் துறை மசோதா, பேரிடர் தடுப்பு கொள்கை, இடி மற்றும் மின்னல் பாதிப்பு, கடுங் குளிர் ஆகியவற்றை சமாளிக்கும் கொள்கை போன்றவற்றை பெரும்பாலான மாநிலங்கள் அமல்படுத்தவில்லை, அதற்கான செயல் திட்டங்களும் உருவாக்கப்படவில்லை. இவற்றை முன்னுரிமை அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும்.

பேரிடர் ஏற்படும் வாய்ப்புள்ள 350 மாவட்டங்களில், ‘ஆப்டா மித்ரா’ திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தன்னார்வ தொண்டர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளனர். இது பேரிடர்களை சமாளிப்பதில் நல்ல பலனை அளித்துள்ளது.

இவ்வாறு அமித் ஷா கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.