;
Athirady Tamil News

மும்பை ஐ.ஐ.டி.-க்கு ரூ.315 கோடி நன்கொடை அளித்த நந்தன் நிலேகனி!!

0

பெங்களூரூவை தலைமையிடமாக கொண்ட பிரபல இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், இன்ஃபோஸிஸ். இது 1981ம் வருடம் 7 பொறியாளர்களால் உருவாக்கப்பட்டது. அந்த 7 பேர்களில் ஒருவரான அதன் இணை நிறுவனர், நந்தன் நிலேகனி, தான் உயர்கல்வி பயின்ற நிறுவனமான மும்பை இந்திய தொழில்நுட்ப கழகத்துடன் (IIT-Mumbai) தனக்குள்ள 50 ஆண்டுகால தொடர்பை குறிக்கும் வகையில் அந்நிறுவனத்திற்கு ரூ.315 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார். அவர் இக்கல்வி நிறுவனத்தில் 1973ம் ஆண்டு மின்பொறியியல் துறையில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நிலேகனி அளித்துள்ள நன்கொடையானது உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை வளர்ப்பதற்கும், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் பகுதிகளில் ஆராய்ச்சிகளைத் தூண்டும் நோக்கத்துடனும் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஒரு முன்னாள் மாணவர், தான் படித்த கல்வி நிறுவனத்திற்கு வழங்கிய நன்கொடைகளிலேயே மிகப்பெரிய நன்கொடை தொகை இதுதான்.

இதுபற்றி நந்தன் நிலேகனி கூறும்போது, “மும்பை இந்திய தொழில்நுட்ப கழகம் எனது வாழ்க்கையில் ஒரு அடித்தளம் அமைத்து கொடுத்தது. எனது வாழ்வின் வளர்ச்சிக்கான ஆண்டுகளை வடிவமைத்து, எனது வாழ்க்கை பயணத்திற்கு அடித்தளம் அமைத்தது. இந்த மதிப்பிற்குரிய நிறுவனத்துடனான எனது 50 ஆண்டுகால தொடர்பை நான் கொண்டாடும் போது, எதிர்காலத்தில் அது முன்னோக்கிச் செல்வதற்கு எனது பங்களிப்பை கொடுக்க நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். இந்த நன்கொடை வெறும் நிதி பங்களிப்பு அல்ல; அதை விட அதிகம்.

இது எனக்கு நிறைய வழங்கிய இடத்திற்கு நான் அளிக்கும் ஒரு பதில் மரியாதை. மேலும், நாளை நம் உலகத்தை வடிவமைக்க போகும் மாணவர்களுக்கான ஒரு அர்ப்பணிப்பு” என கூறியிருக்கிறார். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிலேகனி மற்றும் மும்பை இந்திய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனர் சுபாசிஸ் சவுத்ரி ஆகிய இருவரும் இன்று பெங்களூருவில் கையெழுத்திட்டனர். “இந்த வரலாற்று சிறப்புமிக்க நன்கொடை, மும்பை இந்திய தொழில்நுட்ப கழகத்தை உலகளாவிய தலைமைத்துவ பாதையில் கொண்டு செல்லும். புகழ்பெற்ற எங்களின் முன்னாள் மாணவர் நந்தன் நிலேகனி தொடர்ந்து இந்த கல்வி நிறுவனத்திற்கு அளித்து வரும் முன்னுதாரணமான பங்களிப்புகள் எங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நன்கொடையானது மும்பை இந்திய தொழில்நுட்ப கழகத்தின் வளர்ச்சியை நிச்சயமாக அதிகப்படுத்தும். மேலும் உலகளாவிய தலைமைக்கான பாதையில் வழிநடத்தும்” என்று சவுத்ரி கூறியிருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.