;
Athirady Tamil News

வளைகுடாவில் பதற்றமா?: ஈரானை அச்சுறுத்த எஃப்-16 போர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா!!

0

பாரசீக வளைகுடாவிற்கும் ஓமன் வளைகுடாவிற்கும் இடையில் உள்ளது ஹார்முஸ் ஜலசந்தி. பாரசீக வளைகுடாவின் பல துறைமுகங்களிலிருந்து எண்ணெய் கொண்டு செல்லும் மிகப்பெரிய கப்பல்கள் இந்த ஜலசந்தி வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் முக்கியமான பாதையாக கருதப்படுகிறது.

இப்பகுதியில் தன் அதிகாரத்தை நிலைநாட்ட ஈரான் முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதனை அமெரிக்கா தீவிரமாக எதிர்த்து வருகிறது. ஈரான், எண்ணெய் கப்பல்களை கைப்பற்றுவதையோ சேதம் விளைவிப்பதையோ தடுக்க ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றி போர் விமானங்களை அனுப்பி அமெரிக்கா பாதுகாத்து வருகிறது. கடந்த வாரம் இந்த ஜலசந்தி அருகே 2 எண்ணெய் கப்பல்களை ஈரான் கைப்பற்ற முயன்றது. ஒரு கப்பலின் மீது துப்பாக்கி சூடும் நடத்தியது. தற்போது வளைகுடா பகுதியில் ஒரு வாரத்திற்கும் மேலாக ஏ-10 (A-10) ரக தாக்குதல் விமானங்கள் ரோந்து வருகின்றன. இவற்றிற்கு வலு சேர்க்கும் விதமாக இவ்வார இறுதியில் எஃப்-16 (F-16) ரக ஜெட் விமானங்களையும் அமெரிக்கா அனுப்பவுள்ளது. எஃப்-16 விமானங்கள் ஈரானின் முயற்சிகளுக்கு தடையாக, நீர்வழி பாதையில் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். மேலும், அப்பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் பலமிக்க தோற்றத்தை உருவாக்கும் என அமெரிக்கா நம்புகிறது.

சிரியாவை விட்டு வெளியேறுமாறு அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து ரஷியா, ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. இது ரஷியா, ஈரான் மற்றும் சிரியா ஆகிய 3 நாடுகளிற்கு இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பு மூலம் சாத்தியமாகிறது. மத்திய கிழக்கு பகுதியில் ஈரான், ரஷியா மற்றும் சிரியா கைகோர்ப்பதை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. ஆனால் ஈரான் லெபனானின் ஹெஸ்பொல்லா அமைப்புக்கு பயங்கர ஆயுத உதவிகளை செய்து அதன் மூலம் இஸ்ரேலுக்கு நெருக்கடி கொடுக்க விரும்புகிறது. இதன் முயற்சிகளுக்கு சிரியாவில் உள்ள அமெரிக்கா ராணுவ துருப்புகள் பெரும் தடையாக உள்ளது. தனியாக அமெரிக்காவை எதிர்ப்பதை விட ரஷியாவோடு இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரான் விரும்புகிறது.

எனவே ரஷிய-உக்ரைன் போரில் ரஷியாவிற்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இந்த பின்னணியில் ரஷிய மற்றும் ஈரானிய குத்ஸ் (Quds) படைத்தலைவர்களுக்கு இடையே அதிக ஒத்துழைப்பு, திட்டமிடல் மற்றும் உளவுத்தகவல்கள் பகிர்வு நடப்பதாகவும், இதன் மூலம் சிரியாவில் இருந்து அமெரிக்க துருப்புக்களை வெளியேற்ற அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்க இந்த கூட்டணி முயல்வதாகவும் அமெரிக்கா கருதுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன்னை அமெரிக்கா தயார்படுத்தி கொண்டு வருகிறது. சிரியாவில் சுமார் 900 அமெரிக்க வீரர்கள் உள்ளனர். தவிர ஐஎஸ்ஐஎஸ் (ISIS) போராளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த மேலும் துருப்புகள் அமெரிக்காவிலிருந்து அவ்வப்போது அந்நாட்டிற்குள் வந்து போகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வரப் போகும் நாட்களில் வளைகுடா பகுதியில் அமைதி நிலவுமா? இல்லை சச்சரவு வெடிக்குமா? என நிபுணர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.