;
Athirady Tamil News

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது இந்தியா.. உலகளவில் விலை உயரும் அபாயம்!!

0

உக்ரைன் நாட்டின் துறைமுகங்கள் மீதான ரஷிய தாக்குதல்கள், உலகளாவிய விநியோகம் குறித்த கவலைகளை எழுப்பியதால், கோதுமை விலை இந்த வாரம் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில் பாசுமதி அல்லாத அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்தி வைக்கும்படி இந்தியா நேற்று உத்தரவு பிறப்பித்தது. இந்த ஏற்றுமதி தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. மத்திய வர்த்தக துறையின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இயக்ககம் இதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சில மாதங்களாகவே “எல் நினோ” (El Nino) பருவகால மாற்றங்களால் நிகழும் சீரற்ற வானிலை காரணமாக இந்தியாவில் அரிசி உற்பத்தி குறைந்து விட்டது. இதனை கருத்தில் கொண்டும், உயர்ந்து வரும் விலைவாசியாலும், உள்நாட்டில் தடையின்றி அரிசி வினியோகம் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையிலும் இந்த தடை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் உலகளவில் அரிசி விலை உயரும் அபாயம் உள்ளதாகவும், இதனால் உலகளவில் அரிசி வர்த்தகர்கள் பெரும் லாபம் அடைவார்கள் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

“ஏற்றுமதி சந்தையில் அரிசி விலை மேலும் உயரப் போகிறது. ஒரு மெட்ரிக் டன்னுக்கு குறைந்தபட்சம் ரூ.4100 ($50) லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அது ரூ.8000 ($100) அல்லது அதற்கும் மேல் அதிகரிக்கலாம். சந்தை எவ்வளவு உயரும் என்பதைப் பார்க்க விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் காத்திருக்கிறார்கள்,” என்று சிங்கப்பூரை சேர்ந்த ஒரு சர்வதேச வர்த்தக நிறுவனத்தின் வர்த்தகர் கூறியுள்ளார். சிங்கப்பூரை சேர்ந்த வேறொரு வர்த்தகரும், பாங்காக்கின் ஒரு வர்த்தகரும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

உலகளவில் 300 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு அரிசி ஒரு பிரதான உணவாகும். அதிகளவில் நீர் தேவைப்படும் பயிரான அரிசியின் உற்பத்தி, 90% ஆசியாவில் நடக்கிறது. எல் நினோ வானிலை மாற்றங்களால் ஏற்படும் வறட்சி நிலை உற்பத்தியை தாறுமாறாக முடக்கியுள்ளது. இதனால் அரிசி விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதிக்கும் என்ற எதிர்பார்ப்புகளால், அரிசி ஏற்றுமதி செய்யும் பிற நாடுகளிலும், அதன் விலை உயர்ந்து வருகிறது. உலக அரிசி ஏற்றுமதியில் இந்தியா 40% பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.