;
Athirady Tamil News

ஸ்வால்பார்ட்: 4 மாதம் இரவு, 4 மாதம் பகல் – இங்கே துப்பாக்கிதான் தேவை, விசா அல்ல – எங்கே இருக்கிறது?!!

0

ஸ்வால்பார்ட் என்பது நார்வேயில் உள்ள ஒரு தீவுக்கூட்டமாகும். இது பூமியின் வட துருவத்திலிருந்து 1300 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ஒரு வகையில் இது ‘பூமியில் நிலத்தின் வடக்கு எல்லை’ என வைத்துக்கொள்ளலாம். அதற்கு அப்பால் எந்த நிலப்பகுதியும் இல்லை.

மூச்சடைக்கக் கூடிய ஜொலிக்கும் வான்முகில் கூட்டங்கள், பனிச்சூழல் சார்ந்த இயற்கைக் காட்சிகள் மற்றும் இயற்கை அழகு நிறைந்த இந்த தீவுக்கூட்டத்துக்கு உலகின் எந்த நாட்டிலிருந்தும் விசா இல்லாமல் பயணம் செய்யமுடியும்.

அங்கு சென்று சுற்றிப் பார்ப்பது மட்டுமின்றி மக்கள் அங்கேயே குடியேறவும் வேலை செய்யவும் முடியும்.

ஆனால் அவ்வாறு செய்வதற்கு முன், இரண்டு விஷயங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். முதலாவதாக, அங்கு நான்கு மாதங்கள் தொடர்ந்து காரிருள் சூழ்ந்த இரவாகவும், நான்கு மாதங்கள் பகல் நேரமாகவும் இருக்கும். இரண்டாவதாக, எப்போதும் துப்பாக்கியை எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம்.

1920 களில் மக்கள் குடியேறத் தொடங்கும் வரை ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டம் நார்வேயின் ஒரு பகுதியாக இருந்தது.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் இங்கு குடியேறினர். அவர்களில் பெரும்பாலானோர் தற்போது சுற்றுலாத் துறையில் பணியாற்றி வருகின்றனர்.

ஸ்வால்பார்ட்டின் தலைநகரம் லாங்கர்பின். இத்தீவுக்கூட்டத்தில் 51 நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் வாழ்கின்றனர்.

இங்கு மனிதர்களை விட விலங்குகள் தான் அதிகம் வாழ்கின்றன. வெள்ளை நிறத்திலான துருவ கரடி மிகவும் பொதுவான விலங்காகக் காணப்படுகிறது.

இக்கரடி அடிக்கடி பொதுமக்கள் வாழும் பகுதிகளுக்குச் செல்வதுடன், அவர்களைத் தாக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன.

எப்போது துருவக்கரடி மனிதர்களைத் தாக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் துப்பாக்கி வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

அதனால்தான் இங்கு வசிக்கும் போதோ அல்லது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் பயணம் செய்யும்போதோ துப்பாக்கியை எடுத்துச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம். துப்பாக்கி வைத்திருக்கும் ஒரு நபர் அதை எடுத்துச் செல்லவில்லை என்றால் அவருக்கு ஒரு துணை இருக்க வேண்டும். ஏனெனில் இந்த கரடிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்கு இது ஒன்றே வழி.

வெள்ளைக் கரடிகள் தவிர, மான், நரி போன்ற விலங்குகளும், சீல், திமிங்கலம் போன்ற நீர்வாழ் விலங்குகளும் இங்கு அதிகம் காணப்படுகின்றன.

ஸ்வால்பார்ட் எப்போதும் பனியால் மூடப்பட்டிருக்கும். இங்கு விவசாயம் என்பதே இல்லை. ஆர்க்டிக் பனியின் சிலிர்ப்பை அனுபவிக்க விரும்பும் சாகசப் பயணிகளை ஈர்க்கும் மையமாக இது உள்ளது.

ஸ்வால்பார்ட்டில் பொது போக்குவரத்து அமைப்பு இல்லை. சில உள்ளூர்வாசிகள் கார் வைத்திருக்கிறார்கள். 50 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை வசதி உள்ளது. கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டால், மக்கள் ‘ஸ்னோ-மொபைலை’ எனப்படும் பனி உந்து வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர்.

சுற்றுச் சூழல் பாதிப்பில் ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டத்தின் வெப்பநிலை வேகமாக அதிகரித்துவருகிறது.

உலகின் பிற பகுதிகளைப் போலவே, கொரோனா தொற்றுநோய் சுற்றுலாத் துறையில் மட்டுமல்ல, ஸ்வால்பார்டிலும் பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்தப் பகுதி எவ்வளவு அழகாகத் தெரிகிறதோ, அந்த அளவுக்கு இங்குள்ள மக்களின் வாழ்க்கை கடினமானதாகவும் சவாலாகவும் இருக்கிறது.

அவ்வப்போது பனிச்சரிவுகள், வீடுகள் இடிந்து விழுவது, உடைமைகள் சேதம் என பலவித விபரீதங்கள் நிகழ்கின்றன.

ஸ்வால்பார்டின் ‘பவளப்பாறைகள்’ காலநிலை மாற்றத்திற்கான நேரடி சான்றுகள்.

1971 முதல், ஆர்க்டிக்கில் வெப்பநிலை நான்கு டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இது உலக சராசரியை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.

சில பகுதிகளில் நீண்ட நாட்களாக நல்ல பனிப்பொழிவு இல்லை என்றும், சீதோஷ்ண நிலை வேகமாக மாறி வருவதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

இது தொடர்ந்தால், அடுத்த 10 ஆண்டுகளில் ஸ்வால்பார்ட் புகழ் பெற்ற பனிப்பிரதேசமாக இருக்காது.

இது தவிர, நீங்கள் அன்றாட வாழ்க்கை மற்றும் சலிப்பூட்டும் நிகழ்வுகளால் சோர்வடைந்து, சிறந்த மாற்றத்தை விரும்புகிறீர்கள் என்றால், இந்த தீவுக்கூட்டம் உங்களுக்கு ஒரு புதிய உலகத்தை வழங்கும் என்பது நிச்சயமான உண்மை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.