;
Athirady Tamil News

முதலை, சிறுத்தையைக் கூட உண்ணும் ராட்சத மலைப்பாம்புகளை இவர்கள் பிடிப்பது எப்படி?!!

0

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்துக்கு உட்பட்ட நேபிள்ஸை பூர்வீகமாகக் கொண்டவர் ஜேக் வாலேரி. 22 வயது துடிப்பான இளைஞரும், ஓஹியோ பல்கலைக்கழகத்தின் மாணவருமான இவர், பாம்புகளை வேட்டையாடுவதைத் தனது கோடை விடுமுறையின் ஒரு பெரிய திட்டமாக வைத்திருக்கிறார்.

தொழில்முறையாக பாம்புகளை வேட்டையாடுபவர்களை தொலைக்காட்சியில் பார்த்த பிறகு, மலைப்பாம்புகளை வேட்டையாட வேண்டும் என்ற ஆர்வம் ஜேக்கிற்கு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவற்றை வேட்டையாடத் தொடங்கினார்.

அதன் அடுத்த கட்டமாக ஃப்ளோரிடா மாகாணத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மலைப்பாம்பு வேட்டை போட்டியில் கடந்த ஆண்டு பங்கேற்றார். ஆனால் அவர் தரவரிசையில் மிகவும் பின்தங்கி இருந்ததால், போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் ஏமாற்றம் அடைந்த ஜேக், “இந்த ஆண்டு நடக்கவுள்ள போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும்,” என்று விரும்புவதாகக் கூறுகிறார்.

இப்படி பாம்புகள் மீதுள்ள அச்சத்தைப் போக்கும் விதமாக, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் பர்மிய வகை மலைப்பாம்புகளை வேட்டையாடும் போட்டி (Python Challenge) நடத்தப்படுகிறது.

இந்தப் போட்டி கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டி அறிவிக்கப்பட்டது முதல், அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பர்மிய வகையைப் போன்ற நீளமாக வளரும் பாம்புகளை வேட்டையாடுவதற்கான தைரியம் வந்துள்ளது.
உலக அளவில் கவனம் பெற்றுள்ள பாம்பு வேட்டை போட்டி

கடந்த பத்து ஆண்டுகளாக, ஆண்டுதோறும் ஃப்ளோரிடாவில் நடத்தப்பட்டு வரும் மலைப்பாம்பு வேட்டை போட்டியில் கனடா, பெல்ஜியம், லாட்வியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 30 ஆயிரம் டாலர்கள் வரை பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. அத்துடன் அவர்களுக்கு சமூகத்தில் பெயரும், புகழும் கிடைப்பதால், சவாலான இந்தப் போட்டியில் பங்கேற்க, பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், காது கேளாத அறிவியல் பாட ஆசிரியர் ஒருவர், கிட்டத்தட்ட 16 அடி நீளமுள்ள பாம்பை வெறும் கைகளால் பிடித்து அசத்தினார்.

இந்தப் போட்டியில் வென்றதற்காக, 10 ஆயிரம் டாலர்கள் பரிசாக பெற்றார் 19 வயது இளைஞர் ஒருவர். இந்தத் தொகையைக் கொண்டு, பாம்புகளின் இருப்பிடத்தைத் தெளிவாகக் கண்டறிய பயன்படும் விளக்கை வாங்கி தனது வாகனத்தில் பொருத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், பர்மிய வகை மலைப்பாம்புகளை வேட்டையாடுவதற்கான போட்டி (Python Challenge) ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

ஃபுளோரிடாவில் ஆண்டுதோறும் நடைபெறும் பாம்பு வேட்டை போட்டியில் பங்கேற்க விரும்புவர்கள், 25 டாலர்கள் கட்டணம் செலுத்தி முதலில் தங்களின் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

அதன் பிறகு அவர்கள் 30 நிமிட பயிற்சி திட்டத்தை நிறைவு செய்ய வேண்டும். இதில் பாம்புகளை எவ்வாறு சரியாக அடையாளம் காண்பது, அவற்றை எப்படி விரைவாகவும், மனிதாபிமானத்துடனும் கொல்ல வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

சிறப்பு அனுமதியின்றி மலைப்பாம்புகளை உயிருடன் எடுத்துச் செல்வது சட்டவிரோதம் என்பதால், பெரும்பாலான போட்டியாளர்கள், தாங்கள் பிடிக்கும் பாம்புகளை அதிகாரபூர்வ எடை மேடைக்குக் கொண்டு வருவதற்கு முன் அவற்றைக் கொன்றுவிட வேண்டும்.

வேட்டையாடப்படும் பாம்புகளை டபுள் பித்திங் (Double Pithing) முறையில் கொல்வதே போட்டியாளர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறை. பாம்பின் முதுகுத் தண்டை துண்டிக்கும் விதத்தில், அதன் தலையில் குத்தி மூளையைச் செயலிழக்கச் செய்யும் கருவியின் பயன்பாடுதான் ‘டபுள் பித்திங்’ என்றழைக்கப்படுகிறது. சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் மலைப்பாம்புகளை வேட்டையாட துப்பாக்கிகள் அனுமதிக்கப்படுகின்றன.

பாம்புகளை அடையாளம் காண்பது மிகவும் முக்கியம். மலைப் பாம்புகளுக்குப் பதிலாக பிற பூர்வீக பாம்புகளைக் கொன்றால், அந்த வேட்டையாளர்கள் போட்டியில் இருந்து உடனே தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று இந்தப் போட்டியின் அமைப்பாளர்களில் ஒருவரான செகல்சன் கூறுகிறார்.

ரேடியோ கருவி பொருத்தப்பட்டு, இனப்பெருக்க நோக்கத்திற்கு என்று அடையாளம் காணப்பட்டுள்ள மலைப்பாம்புகளைக் கொல்வதற்கு போட்டியாளர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட பாம்புகளை போட்டியாளர்கள் தாங்களே வைத்திருக்கலாம் அல்லது விற்றுவிடலாம், ஃப்ளோரிடாவில் இருந்து மலைப்பாம்புகளின் தோலை வாங்குவதற்கு உலகெங்கும் உள்ள மக்களை அதிகாரிகள் ஊக்குவிக்கின்றனர்.

அதேநேரம், மலைப்பாம்பின் உடம்பில் அதிக அளவு பாதரசம் இருப்பதால் அதை உண்ண வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். ஆனால், இந்த அறிவுரையை எல்லாம் பொருட்படுத்தாமல், சில தீவிரமான வேட்டைக்காரர்கள் மலைப்பாம்பின் இறைச்சி மற்றும் அதன் முட்டைகளை உண்பதில் ஆர்வமாகத்தான் உள்ளனர்.

இந்நிலையில், வரும் 10ஆம் தேதி (ஆகஸ்ட் 10) தொடங்கி பத்து நாட்கள் நடைபெறவுள்ள, இந்த ஆண்டுக்கான போட்டியில் பங்கேற்பதற்காகத் தனது உறவினருடன் இணைந்து தீவிரமாக ஆயத்தமாகி வருகிறார் ஜேக் வாலேரி.

தங்களைத் தாங்களே க்ளேட் பாய்ஸ் (Glade Boys) என்று அழைத்துக் கொள்ளும் வாலேரி மற்றும் அவரது உறவினர், போட்டி தொடங்கும் ஆகஸ்ட் 4ஆம் தேதியில் இருந்து, ஒவ்வொரு நாள் இரவும் பாம்புகளை வேட்டையாடத் திட்டமிட்டுள்ளனர்.

மிகவும் தெம்புடன் இந்த வேட்டையில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வத்தில், அவர்கள் தங்கள் வசம் நிறைய ஆற்றல் பானங்களை வைத்துள்ளனர். மேலும் வேட்டையின்போது பூச்சிகள் தங்களை அண்டாதிருக்க, பிரத்யேக தெளிப்பான்களையும் (Bug Spray) வைத்துள்ளனர்.

போட்டியில் பிடிப்படும் மலைப்பாம்பு கொல்லப்படுவதற்கு முன் அதன் வாயை இறுக்கமாகக் கட்டுவதற்குத் தேவையான பெரிய கயிறும் அவர்களிடம் இருக்கிறது. காடு சூழ்ந்த சாலைகளில் வாகனத்தில் பயணிக்கும்போது, பயண வழியில் ஊர்ந்து செல்லும் உள்ளூர் நச்சுப் பாம்புகள் வாகனத்தில் அடிபட்டு இறப்பதைத் தடுக்கும் விதத்தில், அவற்றை அப்புறப்படுத்த பெரிய கம்பும் அவர்களிடம் உள்ளது. இப்படி பாம்பு வேட்டைக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றனர் க்ளேட் பாய்ஸ்.

“பாம்பின் தலையைப் பிடித்து அதன் சீற்றத்தைக் கட்டுப்படுத்தும்போது உங்கள் பிடியைத் தளர்த்திவிட்டால், நீங்கள் போட்டியில் தோல்வியடைய நேரிடும். இதேபோன்று, பாம்பைப் பிடிக்க தயங்கி, உங்கள் கையை அதன் முன் நீட்டினால் அது உங்களைக் கடித்துவிடும்,” என்று பாம்பு வேட்டை போட்டிக்கான நுணுக்கங்களை விளக்குகிறார் ஜேக்.

ஆசியாவில் இருந்து தெற்கு ஃப்ளோரிடா வனப்பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பர்மிய மலைப்பாம்புகள், அந்தப் பிராந்தியத்தின் பூர்வீக உயிரினங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகக் கருதப்படுகிறது.
மலைப்பாம்புகள் வேட்டையாடப்படுவது ஏன்?

ஃப்ளோரிடா மாகாணத்தின் தனிச்சிறப்பாக அமைந்துள்ள சதுப்பு நில புல்வெளி பகுதிக்கு (Everglades) பர்மிய வகை பாம்புகளால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளைத் தடுக்கும் விதத்தில், அவற்றை வேட்டையாட வேண்டியுள்ளது என்கின்றனர் உள்ளூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

அமெரிக்காவின் மிகப்பெரிய வெப்பமண்டல வனப்பகுதி மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது ஃப்ளோரிடாவின் எவர்க்லேட்ஸ் பகுதி. ‘உள்நாட்டில் இருந்து கடலுக்குள் கண்ணுக்குத் தெரியாமல் பாயும் புல் நதி’ என்று யுனெஸ்கோ அமைப்பால் வர்ணிக்கப்பட்டுள்ள எவர்க்லேட்ஸ் பகுதி, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் உயர் பன்முகத்தன்மைக்கு உகந்ததாக அமைந்துள்ளது.

ஆனால், 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், செல்லப்பிராணிகள் வர்த்தகத்தின் மூலம், ஆசியாவில் இருந்து தெற்கு ஃப்ளோரிடா வனப்பகுதிகளுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பர்மிய மலைப்பாம்புகள், அந்தப் பிராந்தியத்தின் பூர்வீக உயிரினங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

இருபது அடி (6 மீட்டர்) நீளமும், 90 கிலோ எடையும், தொலைபேசி கம்பத்தைப் போன்று அகலமும் உள்ள ஊர்வன வகையைச் சேர்ந்த பர்மிய மலைப்பாம்புகளால், ஃப்ளோரிடாவின் எவர்க்லேட்ஸ் பகுதியில் வாழ்ந்து வந்த முயல்கள், ரக்கூன்கள் உள்ளிட்ட சில வகை உயிரினங்கள் 90 சதவீதத்திற்கும் மேல் கொல்லப்பட்டுவிட்டன என்று இதுதொடர்பான கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.

புல்வெளிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் மரங்களில் மறைந்து வாழும் பர்மிய வகை மலைப்பாம்புகள் பிற ஊர்வனங்கள், பறவைகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடுகின்றன.

நிலத்தில் மட்டுமில்லாது இவை நீரிலும் நீந்தக்கூடியவை. ஆகையால், தண்ணீருக்குள் 30 நிமிடம் வரை தாக்குப்பிடிக்கும் திறன்கொண்ட முதலைகள், அழிந்து வரும் உயிரினமான ஃப்ளோரிடா சிறுத்தைகளைக்கூட உணவுக்காக இந்த மலைப்பாம்புகள் வேட்டையாடுகின்றன.

இப்படி ஃப்ளோரிடாவின் சதுப்புநில வனப்பகுதியில் உள்ள பல்வேறு வகை உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வரும் மலைப் பாம்புகளைக் கொன்று தின்னும் அளவுக்குத் திறன்மிக்க வேட்டை குணம் கொண்ட உயிரினம் எதுவும் அந்தப் பகுதியில் இல்லை.

கடந்த 2012இல், மலைப்பாம்பு வேட்டை போட்டி தொடங்கப்படுவதற்கு ஓராண்டுக்கு முன், பர்மிய வகை மலைப்பாம்புகளை இறக்குமதி செய்ய, ஃப்ளோரிடா மாகாண நிர்வாகம் தடை விதித்தது. ஆனால் இந்தத் தடை விதிக்கப்படுவதற்கு முன்பே, அந்த மாகாணத்தின் சதுப்புநில காட்டுப் பகுதியில் இருந்த பல்வேறு உயிரினங்கள், மலைப்பாம்புகளால் அழிக்கப்பட்டுவிட்டன.

தற்போது அங்கு வருடத்தின் எந்த நேரத்திலும், எவ்வித வரம்பும் இன்றி மலைப்பாம்புகளைக் கொல்லலாம். இதற்கு எந்த அனுமதியும் தேவையில்லை என்ற நிலை உள்ளது.

இதனிடையே, மலைப்பாம்பை வேட்டையாடும் நோக்கத்துடன் நடத்தப்படும் போட்டியை, பீட்டா உள்ளிட்ட விலங்கு உரிமைக்கான அமைப்புகள் விமர்சித்து வருகின்றன.

பர்மிய மலைப்பாம்பு போன்ற உயிரினங்களை அழிக்க வேண்டும் என்றால், அதை மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ள வகை செய்யும் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். அதற்கு மாறாக இப்படி போட்டி நடத்தி, தொழில்முறை அல்லாத வேட்டைக்காரர்கள் மூலம் அவற்றை அழிக்கக்கூடாது என்று இந்த அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, இப்போட்டியை நடத்தி வரும் அமைப்பு 2019இல் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது.

அதில், ‘அயல்நாட்டு செல்லப்பிராணிகள் வர்த்தகத்தில் நிகழும் சில தவறுகளை சரிசெய்ய ஏதாவது செய்யவேண்டும் என்பதை நாங்கள் உணர்கிறோம். ஆனால், இந்தப் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் தீர்க்க முடியுமா என்பதே உண்மையான சோதனை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு போட்டி தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன், ஓஹையா மற்றும் இல்லினாய் நகரங்களில் இருந்து ஃப்ளோரிடாவுக்கு வருகை தந்திருந்த தனது பல்கலைக்கழக நண்பர்களுடன் இணைந்து ஜேக் வாலேரி, சதுப்பு நிலங்களில் வழியாக மலைப்பாம்பு வேட்டையில் இறங்கினார்.

ஜேக்கின் நண்பர்கள் மலைப்பாம்பு வேட்டையில் பயிற்சி இல்லாத புதியவர்களாக இருந்தனர். ஆனாலும், சைப்ரஸ் பகுதியில் தேசிய அளவில் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்ட பெரிய சதுப்பு நிலப் பகுதியில் 19 அடி நீள பர்மிய வகை மலைப்பாம்பை கண்டதும், அதைப் பிடிக்கும் பணியில் அவர்கள் ஆர்வமுடன் இறங்கினர்.

“பாம்பு நம்மைக் கடிப்பதைத் தவிர்ப்பதற்கும், வேட்டையில் இருந்து தப்பிக்க அது தன் உடம்பை சுருக்கிக் கொள்வதை தடுக்கவும் அதன் தலையை இறுக்கமாகப் பிடித்து கட்ட வேண்டியது அவசியம். இதன்படி, நாங்கள் கண்ட மலைப்பாம்பின் தலையைச் சாதாரணமாக கருதி பிடிக்க முயன்றேன். ஆனால் அது அவ்வளவு எளிதான விஷயமில்லை என்று எங்களுக்குப் புரிந்தது,” என்று தமது பாம்பு வேட்டை அனுபவத்தை விவரிக்கிறார் ஜேக்.

“எங்களின் வேட்டையின் விளைவாக பாம்பு நிலத்தில் சறுக்கி விழுந்தபோது தான் அதன் பிரமாண்டமான நீளத்தை நேருக்கு நேராக கண்டேன். கடுமையான போராட்டத்துக்குப் பிறகு மலைப்பாம்பு பிடிப்பட்டது,” என்று பெருமை பொங்க கூறுகிறார் ஜேக்.

சைப்ரஸ் பகுதியில் ஜேக் குழுவினர் நடத்திய வேட்டையில் மலைப் பாம்பு சிக்கிய பிறகு, ஃப்ளோரிடா மாகாணத்தில் இதுவரை நடத்தப்பட்ட வேட்டைகளில் பிடிபட்ட மிகப்பெரிய பாம்பு இதுதான் என்று அறிவிக்கப்பட்டது.

நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றும் பிராண்டன் கால் செவித்திறன் அற்றவர்; ஆனால் பாம்புகள் உள்ளிட்ட ஊர்வன வகை விலங்குகளைக் கையாளும் திறன் மிக்கவர்.

இவர் 2021இல் நடைபெற்ற பாம்பு பிடிக்கும் போட்டியில் பங்கேற்று, பெரிய பாம்பைப் பிடித்ததற்காக 1,500 டாலர்கள் பரிசுத் தொகையை வென்றார். இந்த ஆண்டு இவர் மூன்றாவது முறையாக இந்தப் போட்டியில் பங்கேற்கிறார்.

“கடந்த ஆண்டு போட்டியின்போது பெரிய மலைப்பாம்பைப் பிடிக்கும் வேட்டையில் இறங்கினேன். முதலில் அதைக் கீழே சாய்ந்து கிடக்கும் மரம் என்றுதான் கருதினேன். பாம்பு எனத் தெரிந்தவுடன் அதை லாகவமாகப் பிடித்து விடவேண்டும் என்ற ஆவலில் அதன் அருகே சென்றபோது, எனது கைகள் பாம்பின் பிடியில் மாட்டிக்கொண்டன.

அதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த என் நண்பர்களிடம் காப்பாற்றுமாறு உதவி கேட்பதைவிட, பாம்புடன் சண்டையிடுவதில் நான் அதிகம் கவனம் செலுத்தினேன்,” என்று சைகை மொழியில் பேசும் ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலம் பிபிசி செய்தியாளரிடம் கால் கூறினார்.

காதுகேளாத அறிவியல் ஆசிரியர்கள் குழுவுடன், இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்க கால் திட்டமிட்டுள்ளார். காது கேளாமை பொதுவாக ஒரு குறையாகக் கூறப்பட்டாலும், அதுவே அவருக்கு காட்சி விழிப்புணர்வை அளிக்கிறது.

உருமறைப்புத் திறன் கொண்ட பாம்புகளை எளிதாகக் கண்டறிய உதவுகிறது என்கிறார் அவர்.

பாம்பு வேட்டையில் தம்மிடம் சிக்கும் பாம்புகளில் சிலவற்றை, செவித்திறன் அற்ற தனது மாணவர்களிடம் காண்பிப்பதற்காக பள்ளிக்குக் கொண்டு வருகிறார் கால்.

“நான் பாம்பு வேட்டைக்குச் செல்லும் போதெல்லாம், என் பிடியில் சிக்கும் பாம்புகளைக் காண என் மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் இருப்பார்கள்,” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் பிராண்டன் கால்.

ஃப்ளோரிடாவில் உள்ள மலைப்பாம்புகள் குறித்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்துவரும் டாக்டர் மில்லர்
பாம்பு வேட்டையை வரவேற்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

எவர்க்லேட்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பில் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள மலைப்பாம்பு வேட்டை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில் அங்கு பர்மிய வகை மலைப்பாம்புகள் மொத்தம் எத்தனை இருக்கின்றன என்பதை அறிய முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால், ”ஒவ்வொரு பர்மிய மலைப்பாம்பு பிடிபடும்போதும், எவர்க்லேட்ஸ் சுற்றுச்சூழல் பகுதியை பூர்வீகமாக கொண்ட பறவைகள், பாலூட்டிகள் மற்றும் பிற ஊர்வன வகை உயிரினங்கள், அதற்கு இரையாவதில் இருந்து தப்பிக்கின்றன. இந்த விதத்தில் இந்தப் பாம்பு வேட்டை வெற்றிகரமான முயற்சிதான்,” என்கிறார் சுற்றுச்சூழல் நிபுணரான கார்லி செகல்சன்.

பர்மிய வகை மலைப்பாம்புகளால் ஃப்ளோரிடா சதுப்புநில வனப்பகுதியில் உள்ள பிற உயிரினங்களுக்கு ஏற்படும் சேதத்தை உணர்த்த, இந்தப் போட்டியில் முன்னுரிமை அளிக்கப்படுவது வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறுகிறார்.

“பர்மிய வகை மலைப்பாம்பு வேட்டை போட்டியை ஒரு விழிப்புணர்வு நிகழ்வு” என்று வர்ணிக்கிறார் மலைப்பாம்பு போன்ற ஆக்கிரமிப்பு உயிரினங்களால், காட்டின் சூழலியல் சமநிலையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிபுணரான மெலிசா மில்லர்.

மலைப்பாம்புகள் தங்களது வாழ்நாளில் 80 சதவீத நேரத்தை நகராமல் ஓரிடத்தில் நிலையாக இருந்தபடியே கழிக்கின்றன. இரை தேடுவதற்காக அரிதாக இடம்பெயரும் இந்தப் பாம்புகளைக் கண்டறிவதும், பிடிப்பதும் மிகவும் கடினம் என்கிறார் அவர்.

“ஒரு குறிப்பிட்ட பகுதியில் 100 மலைப்பாம்புகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவற்றைத் தேட யாரையாவது அனுப்பினால், ஒன்றிரண்டு பாம்புகள் மட்டும்தான் அவர்களின் பார்வையில் படும். அந்த அளவுக்கு மனிதனின் பார்வையில் இருந்து தப்பித்து, அவர்களுக்கு போக்கு காட்டும் வல்லமை மிக்கவை அவை,” என்கிறார் மில்லர்.

ஃப்ளோரிடா மாகாணத்தில் இருந்து மலைப்பாம்புகளை ஒழிக்க செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் மூலம் இதுவரை 17 ஆயிரம் பாம்புகள் பிடிப்பட்டுள்ளன. மாகாண கவர்னர் ரான் டிசாண்டிசின் தலைமையின் கீழ் நடத்தப்படும் வருடாந்திர பாம்பு வேட்டைப் போட்டியின் மூலம், குறைந்த எண்ணிக்கையிலான பாம்புகள் மட்டுமே பிடிக்கப்பட்டு கொல்லப்படுகின்றன.

இத்துடன், ஃப்ளோரிடா மீன் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு ஆணையம், மலைப்பாம்பை பிடிக்கும் தொழில்முறை வேட்டையாளர்களுக்கு பணம் கொடுத்து அவற்றைக் கொல்லும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. மேலும் மலைப்பாம்புகளின் இருப்பிடத்தைக் கண்டறியும் பணியில் சமீபகாலமாக மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இவை மட்டுமின்றி, இரைக்காக பிற உயிரினங்களை உண்ணுவதில் இருந்து மலைப்பாம்புகளை திசைதிருப்பி, இனப்பெருக்கத்திற்காக அவற்றை பெண் மலைப்பாம்புகளைத் தேடிச் செல்லச் செய்யும் திட்டமும், மெலிசா மில்லர் தலைமையிலான நிபுணர் குழு மேற்கொண்டு வருகிறது.

ஆண் மலைப்பாம்புகளுக்கு இனப்பெருக்க உணர்வைத் தூண்டும் விதத்தில், அதன் உடம்பிற்குள் ஒரு நவீன கருவியை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெரும்பாலான பாம்புகள் சாலைகள் மற்றும் கரைகளுக்கு அருகில் காணப்படுகின்றன. மனிதர்கள் எளிதில் அணுகக்கூடிய இடங்களான இவற்றை, மலைப்பாம்புகளின் “வாழ்விடத்தின் விளிம்புகள்” என்று விவரிக்கிறார் மில்லர்.

அதாவது சாலையோரங்கள் மற்றும் கரையோரங்களைத் தவிர, வேட்டைக்காரர்களின் பார்வையில் படாத சதுப்பு நில உட்பகுதிகளில் நிறைய மலைப்பாம்புகள் இருக்கலாம் என்றும், அவற்றைப் பிடிப்பது கடினம் என்றும் கூறுகிறார் அவர்.

எவர்க்லேட்ஸ் பகுதியின் 97 சதவீதம் இடங்களுக்கு, விசிறி படகு அல்லது ஹெலிகாப்டர் போன்ற சிறப்பு உபகரணங்கள் இன்றிச் செல்ல முடியாது என்பதும் பாம்பு வேட்டையில் உள்ள மற்றொரு சவால் என்கின்றனர் நிபுணர்கள்.

கடந்த 40 ஆண்டுகளாக ஃப்ளோரிடாவில் வசித்து வரும் நியூ இங்கிலாந்தை சேர்ந்த மார்சியா கார்ல்சன் பார்க், ஆண்டு முழுவதும் மலைப்பாம்பை வேட்டையாடுகிறார். பாதிக்கப்படக்கூடிய வாழ்விடத்தைப் பாதுகாப்பது தனது கடமை என்று கருதுவதால், தொடர்ந்து பாம்புகளை வேட்டையாடி வருவதாகக் கூறுகிறார் அவர்.

அதேநேரம், ஆண்டுதோறும் நடைபெறும் மலைப்பாம்பை பிடிக்கும் போட்டியின்போது, தான் வேட்டையில் ஈடுபடுவதில்லை என்று கூறும் பார்க், ஒவ்வொரு முறையும் போட்டியாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கத் தவறுவதில்லை.

சதுப்பு நில புதர்களில், மலைப்பாம்பு வேட்டை எனும் கடினமான அனுபவத்தைப் பெறுவதற்கு சிறப்பான ஆயத்தம் வேண்டும் என்றும் அவர் வேட்டைக்காரர்களை அறிவுறுத்துகிறார்.

தன்னைப் போலவே வேறு சில பெண்களுடன் சேர்ந்துதான் முதன்முதலில் மலைப்பாம்பு வேட்டையைப் பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கியிருந்தார் பார்க். அதன் பின்னர் ‘எவர்க்லேட்ஸ் அவெஞ்சர் டீம்’ என்று அழைக்கப்படும் வேட்டைக் குழுவை வழிநடத்தும் அவரது நண்பரும், தொழில்முறை பாம்பு வேட்டைக்காரருமான டோனா கலிலுடன் சேர்ந்து, தனது பாம்பு வேட்டை பணியை விரிவுப்படுத்தி உள்ளார் பார்க்.

ஃப்ளோரிடாவின் சதுப்பு நிலத்தின் ஒட்டுமொத்த சூழலுக்கு மலைப்பாம்புகளால் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்து, இப்போட்டியின் மூலம் உலகளாவிய விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளதற்கு நன்றி தெரிவிக்கிறார் கார்ல்சன் பார்க்.

முயல்கள், ரக்கூன்கள் என்று எல்லா வகையான உயிரினங்களையும் மலைப்பாம்புகள் உண்பதால், ஃப்ளோரிடாவின் சதுப்பு நிலத்தில் காட்டுயிர்கள் எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. முதலைகள் போன்ற பெரிய உயிரினங்களைக்கூட இந்தப் பாம்புகள் விட்டுவைப்பதில்லை.

“ஒருமுறை எங்களிடம் பிடிபட்ட 15 அடி நீள மலைப்பாம்பின் வயிற்றில் 5 அடி நீள முதலை இருந்தது,” என்கிறார் பார்க்.

ஃப்ளோரிடா மாகாணத்தில் நடத்தப்படும் மலைப்பாம்பு வேட்டை போட்டி இன்று சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. மேலும் Parks and Recreation and Brooklyn 99 நிறுவனங்களின் சார்பில், இப்போட்டி குறித்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியும் தயாரிக்கப்பட்டுள்ளது.

“ஓர் உயிரினத்தை வேட்டையாடிக் கொல்லும் போட்டி அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படுவதைக் கண்டு பார்வையாளர்கள் சிலர் திகிலடையக் கூடும்.

ஆனால் ஃப்ளோரிடாவின் சதுப்பு நிலப் பகுதியில் மலைப்பாம்புகள் ஏற்படுத்தி வரும் சுற்றுச்சூழல் பாதிப்பை அவர்கள் அறியும்போது, அதற்கு எதிராகப் போராட வேண்டியதன் அவசியத்தை உணர்வார்கள்,” என்று டான் கூருடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை உருவாக்கிய லூக் டெல் ட்ரெடிசி பிபிசியிடம் கூறினார்.

“இந்தப் பாம்பு வேட்டை போட்டியை நீங்கள் எவ்வாறு பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து, அது உண்மையில் உங்களுக்கு வேடிக்கையானதாகவோ அல்லது துன்பகரமானதாகவோ இருக்கக்கூடும்,” என்றார் அவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.