;
Athirady Tamil News

நீங்கள் வாங்கும் காஞ்சிப் பட்டு அசலா, போலியா? எப்படி கண்டுபிடிப்பது?!!

0

பட்டுப்புடவை என்றாலே அனைவரின் நினைவிலும் முதலில் வருவது காஞ்சிபுரம் தான்.

காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் பட்டுப்புடவைகள் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரசித்திப் பெற்றது.

நாடு முழுவதும், பல்வேறு இடங்களில் காஞ்சிப் பட்டு விற்கப்பட்டாலும், இன்றும் பலர் தங்கள் வீட்டின் சுபநிகழ்ச்சிகளுக்கு காஞ்சபுரத்திற்கு நேரடியாக வந்து பட்டுத் துணிகளை வாங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பல நூறு ஆண்டுகளாக பரம்பரையாக நெய்து வரும் தொழிலாளர்களின் கை வண்ணம்தான் இதற்குக் காரணம்.

காஞ்சி பட்டில் 3 இழைகளைச் சேர்த்து ஒரு இழையாக மாற்றி தறியில் புடவை நெய்யப்படும். எனவே, காஞ்சிப் பட்டின் எடை கூடுதலாக இருக்கும்

காஞ்சிப் பட்டை மக்கள் தேடி வாங்குவதற்கு சில பிரத்யேக காரணங்கள் இருக்கின்றன. காஞ்சிப் பட்டு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதன் பொலிவை இழக்காது, இதில் தூசியும் படியாது என்கின்றனர் அதன் நெசவாளார்கள்.

ரோமாபுரி அரண்மனைக்கு காஞ்சியில் இருந்து பட்டு கொண்டு செல்லப்பட்டதாக வரலாறு உண்டு எனத் தெரிவிக்கிறார், தமிழ்நாடு மாநில கைத்தறி நெசவு தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் முத்துக்குமார்.

காஞ்சி மற்றும் காசியில் மட்டும்தான் பட்டு நெய்ய பிரத்யேக தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தப்படுவதாக கைத்தறி நெசவு தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் முத்துக்குமார் தெரிவிக்கிறார்.

“தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற்போல், குளிர் காலத்தில் கதகதப்பாகவும், வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும் இயல்பை மாற்றிக் கொள்ளும் தன்மை காஞ்சிப் பட்டுக்கு உண்டு.

நாட்டின் மற்ற இடங்களில் எல்லாம் ஒரு இழை மட்டுமே பயன்படுத்தி பட்டுப் புடவைகள் தயாரிக்கப்படுகின்றன. காஞ்சிப் பட்டில் 3 இழைகளைச் சேர்த்து ஓர் இழையாக மாற்றி தறியில் புடவை நெய்யப்படும். எனவே, காஞ்சி பட்டின் எடை கூடுதலாக இருக்கும்.

காஞ்சி மற்றும் காசியில் மட்டும்தான் இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தப்படுகின்றன. காசியில் பெரும்பாலும் இஸ்லாமியர்களே பட்டு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்,” என்று குறிப்பிடுகிறார் முத்துக்குமார்.

காஞ்சியில் ஓடும் பாலாற்று நீரில் பட்டு நூலுக்கு சாயம் போடுவது காஞ்சிப் பட்டுக்கு ஒரு தனித்துவம்

தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களில் பட்டு நெய்யப்பட்டாலும், காஞ்சிபுரத்தில் நெய்யப்படும் பட்டுக்கு தனித்தன்மை உண்டு எனப் பெருமையுடன் கூறுகிறார் காஞ்சிபுரத்தில் உள்ள பட்டு நெசவாளர் சிவபிரகாசம்.

“மற்ற பட்டுகளைவிட காஞ்சிப் பட்டு மிணுமிணுப்புடன் காணப்படுவதை யாராலும் மறுக்க முடியாது. காஞ்சியில் ஓடும் பாலாற்று நீரில் பட்டு நூலுக்கு சாயம் போடுவது காஞ்சிப் பட்டுக்கு ஒரு தனித்துவம்,” என்கிறார்.

காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவைகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை விற்கப்படுகின்றன.

கைத்தறியில் 72 வகையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி காஞ்சி பட்டுப்புடவைகள் தயார் செய்யப்படுகின்றன

கைத்தறியில் 72 வகையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி காஞ்சி பட்டுப்புடவைகள் தயார் செய்யப்படுகின்றன.

இந்தத் தொழில்நுட்பங்களை அறிந்தவர்கள் மட்டுமே இதை நெசவு செய்ய முடியும். விசைத்தறியில் இந்த தொழில்நுட்பங்கள் கிடையாது.

கைத்தறியில் ஒரு பட்டுப்புடவையை உருவாக்க குறைந்தபட்சம் இரண்டு பேரும் அதிகபட்சமாக நான்கு பேரும் தேவைப்படும். புடவை நெய்ய சாதம் வடித்த கஞ்சி மட்டுமே காஞ்சியில் பயன்படுத்தப்படுகிறது.

கைத்தறியில் நெய்யும்போது, புடவையில் உடல் பகுதி மற்றும் பாடர் பகுதியைத் தனித்தனியாக நெய்து இணைக்கப்படுவதால் நேர்த்தியான வடிவமைப்பு கிடைக்கும்.

காஞ்சிபுரம் கைத்தறி நெசவாளர்கள் தினமும் பத்து மணிநேரம் நெசவு செய்கின்றனர். விற்பனை அதிகமாக உள்ள மார்கழி போன்ற காலங்களில் 16 மணிநேரம் தங்கள் உழைப்பைச் செலுத்துகின்றனர்.

மற்ற இடங்களில் ஒரு பட்டுப்புடவை தயாரிக்க 3 நாட்கள் ஆகும். ஆனால், காஞ்சி நெசவாளர்கள் 12 நாட்கள் எடுத்துக் கொள்கின்றனர்.

வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்றாற்போல நாடு முழுவதும் உள்ள கோவில்களில் உள்ள சிற்ப வடிவங்களைச் சேகரித்து வைத்துள்ள காஞ்சிபுரம் கைத்தறி நெசவாளர்கள், சேலையில் அதை வடிவமைத்துக் கொடுக்கிறார்கள்.

சுத்தமான காஞ்சி பட்டுப்புடவை மட்டும் 700 கிராம் வரை இருக்கும். அதில் 100 கிராம் பாடர் உள்ள ஜரிகையில் 40 கிராம் வெள்ளி, 0.2 சதவீதம் தங்கம் கலந்திருக்கும்.

காஞ்சிபுரத்தின் அடையாளமாக விளங்கும் பட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது

புவிசார் குறியீடு என்பது, ஒரு புவியியல் பகுதியோடு தொடர்புடைய தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் அடையாளம். அந்த பொருட்களுக்கு, குறிப்பிட்ட குணங்கள், குறிப்பிட்ட தயாரிப்பு முறைகள் போன்றவை இருக்கும்.

அதேபோன்று, மதுரை குண்டு மல்லி, தஞ்சாவூர் தட்டு, ஆகியவற்றுக்கும் புவிசார் குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் காஞ்சிபுரத்தின் அடையாளமாகவே விளங்கும் பட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

புவிசார் குறியீடு பெற்ற பல்வேறு தயாரிப்புகள் குறித்த வீடியோக்களை பதிவு செய்து வரும், சென்னையைச் சேர்ந்த வ்லாகர் தீபன் சக்ரவர்த்தி, இனி வேறு ஊர்களில் தயாரித்த புடவையை காஞ்சிப் பட்டு என விற்பது பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 1999-ன் கீழ் சட்டப்படி குற்றமாகும் என்கிறார்.

“இது பொருளின் உற்பத்தியாளர்களுக்குச் சொந்தமான பொது சொத்தாகக் கருதப்படும். புவிசார் குறியீட்டை தனி ஒருவர் வாங்க முடியாது. சட்டரீதியான அல்லது சட்டத்திற்கு உட்பட்ட அமைப்புகள், அந்தப் பகுதி சார்ந்த அமைப்புகளே வாங்க முடியும். புவிசார் குறியீட்டுக்கான பதிவு பத்து ஆண்டுகளுக்கு செல்லும். அதற்குப் பிறகு புதுப்பித்துக் கொள்ளவேண்டும்,” என்றார்.

பல துணி கடைகளில் கைத்தறி பட்டுப்புடவை என்று கூறி போலியான பட்டுப்புடவைகளே விற்பனை செய்யப்படுவதாக நெசவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பல துணி கடைகளில் கைத்தறி பட்டுப்புடவை என்று கூறி போலியான பட்டுப்புடவைகளே விற்பனை செய்யப்படுவதாகவும், அவை குறைந்த விலையில் இருப்பதால் தரமாக புடவை தயாரிக்கும் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் நெசவாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

“விசைத்தறி பட்டுப்புடவைகள் ஆயிரம் ரூபாய் முதல் கிடைக்கிறது. அவற்றில் பல உண்மையான காஞ்சிப்பட்டு கிடையாது. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு உண்மையான பட்டை கண்டறியத் தெரியாததால், அவர்களும் அதையே வாங்கி செல்கின்றனர்,” என்கிறார் சிவபிரகாசம்.

தமிழ்நாடு முழுவதும் 2 லட்சத்து 44 ஆயிரம் கைத்தறி நெசவாளர்களும், 5 லட்சம் கைத்தறி நெசவு சார்ந்த தொழிலாளர்களும் உள்ளனர். போலியாக விற்கப்படும் பட்டுப்புடவைகளால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சிவபிரகாசம் கூறுகிறார்.

தங்கம், வெள்ளி விலை உயர்வால், சில நெசவாளர்கள் சூரத் போன்ற இடங்களில் இருந்து 2ஜி, 3ஜி, 5ஜி போன்று தரம் குறைவான ஜரிகைகளை வாங்கி பட்டுப்புடவைகளில் சேர்க்கத் தொடங்கியுள்ளனர். இதனால் குறைவான விலையில் பட்டு சேலைகளை விற்க முடிகிறது.

“பட்டு நூல் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வால் உற்பத்தி செய்யப்படும் புடவைகளின் விலையும் அதிகரிக்கிறது. இதனால் குறைவான விலையில் விற்கப்படும் பட்டுப்புடவைகளை வாடிக்கையாளர்கள் நாடிச் செல்வதால், சுத்தமான பட்டு மற்றும் தரமான ஜரிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டுப்புடவைகளின் விற்பனை குறைகிறது,” என்கிறார் சிவபிரகாசம்.

ஆறு மாதங்கள் முன்பு வரை, மாதத்திற்கு மூன்று புடவைகளை விற்றவர்களுக்கு தற்போது ஒரு புடவை விற்பதே சவாலாக இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

“நாங்கள் தயாரித்த புடவைகளை கூட்டுறவு சங்கத்தில் கொடுத்து விற்பனைக்கு அனுப்புவோம். ஆனால் போலி பட்டுப்புடவைகள் விற்பனை அதிகரித்துவிட்டதால், நாங்கள் தயாரிக்கும் தரமான பட்டுப்புடவைகள் தேக்கம் அடைந்துவிட்டன,” என்கிறார் அவர்.

அசல் பட்டு சேலைகளைக் கண்டறிய சில முத்திரைகள் இடம் பெற்று இருக்க வேண்டும்.

அசல் பட்டுப்புடவைகளைக் கண்டறிய சில முத்திரைகள் இடம் பெற்று இருக்க வேண்டும்.

பட்டுப்புடவையின் தரத்தை தமிழ்நாடு ஜரி சென்டர், மத்திய அரசின் தர பரிசோதனை மையம் போன்ற இடங்களில் சோதித்துப் பார்க்கலாம்.

இங்குள்ள நவீன இயந்திரங்களின் மூலம் பட்டுப்புடவையில் உள்ள ஜரிகையில் தங்கம், வெள்ளி எத்தனை சதவீதம் உள்ளது என வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள முடியும். இதற்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஒரு காஞ்சிப் பட்டுப்புடவை நெய்ய 12 நாட்கள் ஆகும்.

காஞ்சி பட்டு, கைத்தறி பருத்தி சேலை, கைத்தறி லுங்கி போன்ற 22 ரகங்களை கைத்தறியில் மட்டுமே நெய்ய வேண்டும் என்று 1985ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது.

கடந்த 1995ஆம் ஆண்டு அவற்றை 11 ரகங்களாக மத்திய அரசு குறைத்துவிட்டது. இந்த 11 ரகத்தையாவது காப்பாற்ற வேண்டும் என்பது நெசவாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

“காஞ்சி பட்டுப்புடவைகளுக்கு சில்க் மார்க் முத்திரையை மத்திய அரசு கொடுத்துள்ளது. இது புடவை உற்பத்தி செய்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது.

இப்போது விற்பனையார்கள் தாங்களும் கைத்தறி நெசவு செய்கிறோம் என்று கூறி சில்க் மார்க் முத்திரையை மத்திய அரசிடம் வாங்கி, விசைத்தறி சேலைகளில் சில்க் மார்க் முத்திரையைப் போட்டு வாடிக்கையாளர்களை ஏமாற்றி விற்பனை செய்கின்றனர்,” என்கிறார் நெசவாளர் சிவபிரகாசம்.

இதனால் பட்டுப்புடவையை வாங்க வரும் மக்களும் ஏமாறாமலும் அதே நேரம் கைத்தறி நெசவுத் தொழிலை காப்பாற்றவும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பது நெசவாளர்களின் கோரிக்கை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.