;
Athirady Tamil News

காலநிலை மாற்றத்தால் அதீத மழை: இமயமலை பிரதேசத்தில் பல கோடி பேரின் எதிர்காலம் என்ன ஆகும்?

0

கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் இடிந்து விழும் கட்டிடங்கள் என இந்தியாவின் இமயமலை பிரதேசம் அவ்வபோது இயற்கை பேரழிவை சந்தித்து தான் வருகிறது.

இந்த பேரழிவுகளுடன், வழக்கத்திற்கு மாறாக தற்போது இந்த பிரதேசத்தில் பெய்து வரும் தொடர்மழை இமயமலை பகுதியை மேலும் ஆபத்து நிறைந்ததாக மாற்றி வருகிறது.

இந்த மாதம் இப்பகுதியில் பெய்து வரும் கனமழை, அதன் விளைவாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.

இமாச்சல பிரதேசம் சந்தித்துவரும் மழை, வெள்ளத்தால் இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளும் பாதிப்பை சந்தித்துள்ளன.

கடந்த காலங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருந்து வந்த இமயமலை உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள உயரமான மலைப் பிரதேசங்கள், தற்போது அதிக மழைப் பொழிவை எதிர்கொண்டு வருகின்றன என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இயற்கையின் இந்த திடீர் மாற்றம், இம்மலை பிரதேசங்களை மேலும் ஆபத்தானவையாக மாற்றி உள்ளன. அதிகரித்துவரும் புவி வெப்பநிலை இங்கு மழைப்பொழிவை அதிகரித்துள்ளதுடன், பனி மற்றும் பனிக்கட்டிகள் உருகும் வேகத்தையும் கூட்டியுள்ளது.

அளவுக்கு அதிகமாக வழிந்தோடும் மழைநீர் மண்ணை வலுவற்றதாக ஆக்கிவிடுகிறது. இது நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு, பாறைகள் உருண்டு இடம்பெயர்வது போன்ற பேரிடர்கள் ஏற்பட வழிவகுக்கிறது.

அதிகரித்துவரும் மழை மற்றும் பனிப்பாறைகள் உருகுதல் மலைப் பிரதேசங்களை மேலும் ஆபத்து நிறைந்த பகுதிகளாக மாற்றி வருவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

“வெப்பமயமாதலின் விளைவாக, பூமியின் வடக்கு அரைக்கோளத்தின் பனி ஆதிக்கம் நிறைந்த உயரமான மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் உள்ளன” என்று நேச்சர் இதழில் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கூற்று, பருவநிலை மாற்றம் குறித்து, உலக நாடுகள் 2019 இல் வெளியிட்டிருந்த சிறப்பு அறிக்கையுடன் (IPCC) ஒத்துப் போகிறது.

அதிக வெப்பநிலை காரணமாக மலைப் பிரதேசங்களில் பனிப்பொழிவு குறைந்துள்ளது. குறிப்பாக இந்த பிராந்தியங்களில் குறைவான உயரமுள்ள பகுதிகளில் இந்த எதிர்வினை ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், மலைப்பிரதேசங்களின் உயரமான பகுதிகளிலும் அனைத்துப் பருவங்களிலும் தற்போது கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது என்று தேசிய வானிலை ஆய்வு மையத்தின் நிர்வாக இயக்குநரும், IPCC சிறப்பு அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவருமான சாமுவேல் மோரின் கூறுகிறார்.

புவி வெப்பமடைதலின் விளைவாக பூஜ்ஜிய டிகிரி சம வெப்பம், பனிப்பொழிவாக விழும் உறைபனி நிலை ஆகிய காரணிகள் அதிக உயரத்திற்கு நகர்ந்திருப்பதே இதற்குக் காரணம்.

“இதன் காரணமாக மலைப் பகுதிகள் அதிக மழைப்பொழிவு, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, மண் அரிப்பு போன்ற பேரிடர்களால் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக (ஹாட்ஸ்பாட்கள்) தற்போது கருதப்படுகின்றன,” என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமயமலை பிரதேசத்தில் அமைந்துள்ள மாநிலங்கள் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அதிகம் பாதிப்பை சந்தித்து வருகின்றன

பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள ஆல்ப்ஸ் மற்றும் ராக்கீஸ் போன்ற பிற மலைத் தொடர்களை ஒப்பிடும்போது இமயமலை தொடர்களுக்கு புவி வெப்பமயமாதலின் விளைவான ஆபத்து அதிகம் என்று இதுதொடர்பாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முதன்மை ஆசிரியர் முகமது ஓம்பாடி பிபிசியிடம் தெரிவித்தார்.

“வெப்பமயமாதல் தொடர்பான கூடுதல் செயல்முறைகள், இமயமலைப் பிரதேசத்தில் காற்றின் போக்கு மற்றும் புயலின் தடத்தை மாற்றி அமைப்பதாக உள்ளன. இது புயல்களின் தீவிரத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது” என்றும் அவர் கூறினார்.

இந்தியா, பூடான், நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் பரவியிருக்கும் இமயமலைப் பிரதேசங்களில் வானிலை நிலையங்கள் எதுவும் இல்லை. இதனால், இந்தப் பகுதிகளில் பொழியும் மழை அளவு குறித்த துல்லியமான தரவுகளை பெற முடியாமல் போகிறது.

மலைகளின் தாழ்வான பகுதிகளில் சில வானிலை நிலையங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் பதிவாகும் விவரங்கள் மூலம், அவை மழைப்பொழிவை குறிக்கின்றதா அல்லது பனிப்பொழிவை குறிப்பிடுகின்றதா என்பதை அறிய முடியாது.

இருப்பினும், இந்த ஆண்டு ஜுன் 1 முதல் ஆகஸ்ட் 10 வரை, இமயமலைப் பகுதிகளில் மொத்தம் பெய்துள்ள 245.5 மில்லிமீட்டர் பொழிவுகளில் 75 சதவீதம் மழையாகவே பொழிந்துள்ளது. மீதமுள்ள 25 சதவீதம் தான், பனியாகவோ அல்லது பனி மற்றும் மழையின் கலவையாகவோ பெய்துள்ளது என்பதை எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமில் நிறுவப்பட்டுள்ள வானிலை நிலைய பதிவுகள் மூலம் அறிய முடிகிறது.

இதுவே 2022 இல் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இப்பகுதியில் 32 சதவீதம் மட்டுமே மழை பதிவாகியுள்ளது.

இதுவே 2021 இல் 43 சதவீதமாகவும், 2020 இல் 41 சதவீதமாகவும் இருந்தது. இந்த மழை அளவுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு இமயமலையில் பதிவாகியிருக்கும் மழை அளவு மிகவும் அதிகமாகும் என்று குறிப்பிடுகின்றனர் புவியியல் ஆய்வாளர்கள்.

“மழை மற்றும் பனியின் ஆதிக்கம் ஒப்பீட்டளவில் சமீபத்திய நிகழ்வு என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் இதை முழுமையாக அளவிட நம்மிடம் நீண்ட கால தரவுகள் இல்லை” என்று நேஷனல் ஜியோகிராபிக் பயண ஆய்வாளர்களான பேக்கர் பெர்ரி மற்றும் டாம் மேத்யூஸ் கூறுகின்றனர்.

இமயமலைப் பிரதேசங்களில் மழைப்பொழிவில் ஏற்பட்டுவரும் அதிரடி மாற்றங்களை உத்தராகண்ட் மாநிலத்தில் கண்கூடாக காண முடிகிறது என்கிறார் அந்த பிராந்தியத்தின் வானிலை மைய தலைவர் பிக்ரம் சிங்.

“இப்பகுதிகளில் பனிப் பொழிவின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது என்று நாம் உறுதியாக கூறலாம். அதேநேரம், பருவமழைக் காலங்களில் தாழ்வான மலைப் பகுதிகள் அதிக மழையைப் பெறுகின்றன” என்கிறார் அவர்.

குறைந்து வரும் பனிப்பொழிவு மற்றும் அதிகரித்துவரும் மழையின் விளைவாக, இமாலயப் பகுதிகளில் ஓடிக் கொண்டிருக்கும் ஆறுகளின் தன்மையையும் மாறிவிட்டது என்று கவலை தெரிவிக்கிறார் குமாவுன் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் ஜே.எஸ்.ராவத்.

“கனமழையின் விளைவாக இப்பிராந்தியத்தில் அவ்வபோது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதன் விளைவாக, ஒரு காலத்தில் பனிப்பாறைகள் நிறைந்த ஆறுகள், தற்போது மழை நீர்நிலைகளாக மாறிவிட்டன” என்கிறார் அவர்.

இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் இம்மாதம் பெய்துவரும் கனமழையின் விளைவாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை டஜன் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

ஆகஸ்ட் 14 ஆம் தேதி நள்ளிரவு, பட்டாவின் இரண்டு மாடி வீட்டுக்குள் பெரு வெள்ளம் புகுந்தது. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலச்சரிவினால் அவரது வீடு இடிபாடுகளுக்கு இடையே புதைந்தது.

“கனமழை பெய்து வருவதால் எங்கள் கிராமத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று மலைப் பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் முன்கூட்டியே எச்சரித்திருந்தனர். அதன் பயனாக நாங்கள் உயிர் பிழைக்க முடிந்தது” என்று கண்ணீர் மல்க கூறுகிறார் உத்தராகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்துக்கு உட்பட்ட மாயாபூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரான பிரபாகர் பட்டா.

அன்றிரவு முழுவதும் தனது குடும்பத்தினர் விழித்திருந்ததாகவும், பெருக்கெடுத்த வெள்ளத்தின் அச்சுறுத்தும் ஓசையை கேட்டதும் தாங்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் வெள்ளத்தில் இருந்து தப்பித்த திகில் அனுபவத்தை விவரிக்கிறார் அவர்.

“வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் என் தந்தை இந்த வீட்டை கட்டினார். அதுவும் இப்போது இல்லாமல் போய்விட்டது. வாழ தகுதியற்ற இடமாக இந்தப் பகுதி மாறி வருகிறது” என்று அவர் வேதனையுடன் தெரிவிக்கிறார் பட்டா.

சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதிகளில் சாலைகள்,சுரங்கப் பாதைகள், நீர்மின் திட்டங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் இயற்கை பேரழிவுகளுக்கு வழிவகுக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இமயமலை போன்ற நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ள உள்கட்டமைப்புகள், நிலநடுக்க அபாயத்துக்கு உட்பட்டவையாக உள்ளன. இது இங்கு நிலவும் சூழலை மேலும் மோசமாக்கிறது.

வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அவ்வபோது ஏற்பட்டு வருவதன் காரணமாக, தங்களின் வசிப்பிடம், வாழ தகுதியற்ற இடமாக மாறிவருகின்றன.

இமயமலைப் பிரதேசங்களில் அதிகரித்துவரும் மழைப்பொழிவு, இந்திய எல்லைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்துகுஷ் மலைத்தொடர் அமைந்துள்ள வடக்கு பாகிஸ்தானில், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போக்கு அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு பாகிஸ்தான் பிராந்தியத்திற்கு உட்பட்ட கில்கிட் பால்டிஸ்தான் பகுதியில், கடந்த பருவமழை காலத்தின் போது சுமார் 120 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடந்த 10-20 ஆண்டுகளுக்கு முன் இந்த பிராந்தியத்தில் நிலவிவந்த சூழலை ஒப்பிடும்போது, தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்கிறார் இந்தப் பிராந்தியத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் கமல் கமர்.

“கோடை மற்றும் குளிர் காலங்களில் இமாலய மலைப் பகுதிகளில் சுமார் 4,000 மீட்டர் உயரத்தில் தற்போது மழை பொழிகிறது. இதன் விளைவாக உண்டாகும் இயற்கை பேரிடர்கள் தொடராமல் இருக்க, அங்கு மழைப்பொழிவுக்கு பதிலாக பனிப்பொழிவு இருக்க வேண்டும்” என்கிறார் அவர்.

நேபாளத்தின் கிழக்கு இமயமலைப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் திடீர் வெள்ளப்பெருக்கும், அதன் விளைவாக சேரும் குப்பைகளும் குடியிருப்புகள், சாலைகள் மற்றும் பாலங்களி்ல் கடும் சேதத்தை விளைவிக்கின்றன. மேலும் நீர் மின்சாரம், குடிநீர் ஆலைகள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

கிழக்கு நேபாள பகுதிகளில் அமைந்துள்ள 30 நீர்மின் நிலையங்கள் இந்த பருவமழை காலத்தில் சேதமடைந்துள்ளன என்று அந்நாட்டின் மின் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இமயமலைப் பகுதிகளில் மழைப்பொழிவு அவ்வபோது அதிகரித்து வருகிறது என்பதுடன், அதன் தீவிரமும் கூடி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

“இமாலயப் பிரதேசத்தில் அதிகரித்துவரும் மழைப்பொழிவானது புவி வெப்பமயமாதல், பனிப்பாறைகள் உருகுதல் போன்ற சங்கிலி தொடரின் தொடக்கமாகவோ, துண்டுதலாகவோ இருக்கக்கூடும்” என்று கூறுகிறார் காத்மாண்டுவை தளமாகக் கொண்ட, ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் ஆராய்ச்சியாளர் ஜேக்கப் ஸ்டெய்னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.