;
Athirady Tamil News

இனி அக்டோபர் “இந்து பாரம்பரிய” மாதமாக கொண்டாடப்படும்: அமெரிக்க மாநிலத்தில் தீர்மானம்!!

0

அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் ஜியார்ஜியா. இதன் தலைநகரம் அட்லான்டா.

இந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி இம்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து மத விரோத சிந்தனைகளையும், செயல்களையும் கண்டிக்கும் விதமாகவும், “இந்துஃபோபியா” எனப்படும் இந்து மதத்தை குறித்து பொய்யாக அச்சுறுத்தும் வகையில் பரப்பப்படும் பிரசாரத்திற்கு எதிராகவும் ஒரு தீர்மானம் கொண்டு வந்தனர். அமெரிக்க வரலாற்றிலேயே இத்தகைய ஒரு இந்து மதத்திற்கு ஆதரவான கண்டனம் எழுப்பப்படுவது இதுதான் முதல்முறை. அத்தீர்மானம் கொண்டு வந்த போது யோகா, தியானம், ஆயுர்வேதம், இந்து மத உணவுமுறை, கர்னாடக இசை மற்றும் கலை உட்பட பல வழிகளில் அமெரிக்கர்களின் கலாச்சாரத்தையும், லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை முறையையும் மேம்படுத்திய இந்து மதத்தின் பரந்த பங்களிப்புகளுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குடியரசு கட்சியை சேர்ந்த ஜியார்ஜியா ஆளுனர் பிரையன் போர்டர் கெம்ப் (59), சில தினங்களுக்கு முன் ஒரு பிரகடனம் செய்துள்ளார்.

இப்பிரகடனத்தில் ஆளுனர் கூறியிருப்பதாவது: “ஜியார்ஜியாவில் உள்ள அமெரிக்க வாழ் இந்து சமூகத்தினர், ஜியார்ஜியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளனர். இதன் மூலம் இங்கு வாழும் குடிமக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அக்டோபர் மாதம் இனி “இந்து பாரம்பரிய மாதம்” என ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும். இந்து கலாச்சாரத்தையும், பலதரப்பட்ட இந்து மத ஆன்மிக வழிமுறைகளை அனைவரும் கவனிக்கும் விதத்தில் இந்த கொண்டாட்டங்கள் அமையும்,” என்று கெம்ப் தெரிவித்துள்ளார். கோனா என அழைக்கப்படும் வட அமெரிக்காவின் இந்துக்களுக்கான கூட்டமைப்பு, ஆளுனரின் இந்த முடிவை வரவேற்று அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறது.

ஆனால், கலிபோர்னியா மாநிலத்தில் அண்மையில் கொண்டு வரப்பட்ட சாதிகளுக்கு எதிரான மசோதாவிற்கு அதிருப்தி தெரிவித்துள்ள இந்த அமைப்பு, “கலிபோர்னியா எங்களை (இந்துக்களை)” குறி வைக்கும் நிலையில், ஜியார்ஜியா எங்களுக்கு அங்கீகாரம் தந்திருக்கும் இந்த செயல் மகிழ்ச்சியளிக்கிறது” என தனது எக்ஸ் (டுவிட்டர்) கணக்கில் தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதத்தில்தான் இந்தியர்களின் முக்கிய பண்டிகைகளான நவராத்திரி, தீபாவளி ஆகியவை கொண்டாடப்படுகிறது என்பதால் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அமெரிக்காவில் சுமார் 30 லட்சம் இந்துக்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.