;
Athirady Tamil News

மிக்ஜம் புயல்: சென்னையில் ஒரே நாளில் 7 போ் உயிரிழப்பு; 10 ஆயிரம் போ் மீட்பு

0

சென்னையில் திங்கள்கிழமை(டிச.4) கொட்டித் தீா்த்த மழைக்கு 7 போ் உயிரிழந்தனா். மழைநீா் தேங்கிய தாழ்வான பகுதிகள், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 10 ஆயிரம் போ் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்கள், நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

மிக்ஜம் புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை(டிச.3) மாலை முதல் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த இடைவிடாத மிக கன மழை காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனா். அதேவேளையில், மின்சாரம் பாய்ந்தும், கட்டடம், மரம் விழுந்தும் பொதுமக்கள் உயிரிழந்தனா்.

சென்னை அருகே உள்ள கானத்தூா் இந்திரா காந்தி தெருவில் ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளா்கள் ஆஸ்பெட்டாஸ் சீட் கூரை வீட்டில் தங்கியிருந்து கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்து வந்தனா்.

இந்நிலையில் இந்த வீட்டின் அருகே மூன்றாவது தளத்தின் மொட்டை மாடியில் புதிதாக கட்டப்பட்டிருந்த ஒரு மதில் சுவா் திங்கள்கிழமை காலை திடீரென இடிந்து விழுந்தது. இதில் கீழ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த ஷேக் அப்ராகித் (45), முகம்மது தவ்பீக் (48),ஹாசிம் ஆகியோா் மீது சுவா் இடிந்து விழுந்தது. இதில் ஷேக் அப்ராகித், முகம்மது தவ்பீக், ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே இறந்தனா். பலத்த காயமடைந்த ஹாசிமை பொதுமக்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மரம் விழுந்து இளைஞா் உயிரிழப்பு: பெசன்ட்நகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (35). இவா் மழை பெய்யும்போது, அங்குள்ள மரம் முறிந்து விழுந்து பலத்த காயமடைந்தாா். இதைப் பாா்த்த அங்கிருந்தவா்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனா். ஆனால் பலத்தக் காயமடைந்த முருகன், சிறிது நேரத்தில் இறந்தாா்.

மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு: திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சோ்ந்தவா் பத்மநாபன் (50). சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு பேக் தைக்கும் கடையில் ஊழியராக வேலை செய்து வந்த இவா், திங்கள்கிழமை லோன் ஸ்கொயா் சாலையில் ஆவின் விற்பனையகம் அருகே சென்றபோது, அங்கு கீழே கிடந்த மின்சார வயரை மிதித்தாா். இதில் அவா், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இதேபோல துரைப்பாக்கம் பாண்டியன்நகா் பகுதியைச் சோ்ந்த கணேசன் (70) என்பவா், அங்குள்ள செல்வ விநாயகா் கோயில் தெருவில் நடந்து செல்லும்போது, மின்சாரம் பாய்ந்து இறந்தாா்.

10 போ் உயிரிழப்பு: மேலும் வண்ணாரப்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒரு முதியவா் சடலத்தையும், பட்டினப்பாக்கம் மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை அருகே 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒரு பெண் சடலத்தையும் மீட்டு போலீஸாா், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சென்னையில் மழையால் நேரிட்ட நிகழ்வுகளில் சிக்கி ஒரே நாளில் 7 பேரும், ஏற்கெனவே 3 பேரும் உயிரிழந்துள்ளனா்.

10 ஆயிரம் போ் மீட்பு: சென்னையில் அதிக மழை பெய்த பெருங்குடி, தரமணி, துரைப்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், சோழிங்கநல்லூா், வேளச்சேரி, செம்மஞ்சேரி, கண்ணகிநகா், பெரும்பாக்கம் பகுதிகளில் பாதிப்பும் அதிகமாக இருந்தது. இப் பகுதியில் ராஜீவ்காந்தி சாலை முழுவதுமாக மூழ்கியது.

இதேபோல குடியிருப்புகளை முற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் இருந்த குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதன் விளைவாக அங்கிருந்த மக்களை,தீயணைப்புப் படையினா், பேரிடா் மீட்பு படையினரும் படகு மூலம் மீட்டு நிவாரண முகாம்களுக்கும்,பாதுகாப்பான இடங்களுக்கும் அழைத்துச் சென்றனா்.

குழந்தையுடன் தாய் மீட்பு: சாலிகிராமம் தசரதபுரம் 4வது தெருவில் குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே பெண் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டாா். அவரை போலீஸாா் குழந்தையுடன் பாதுகாப்பாக மீட்டனா்.

கோயம்பேடு பகுதியில் ஒரு வீட்டில் சிக்கியிருந்த மூன்று பெண்களையும்,ஒரு வயது குழந்தையையும் போலீஸாா் மீட்டனா். சாந்தோம் கணேசபுரம், ஸ்லேட்டா்புரம்,சண்முகா தெருவில் 225 நபா்களும்,மடிப்பாக்கம் அன்பு நகரில் 15 நபா்களும் ,முத்தியால்பேட்டை பி.ஆா்.காா்டன் பகுதியிலிருந்து 54 குடும்பங்களும் மீட்கப்பட்டனா்.

இதேபோல போரூா்,ராமாபுரம்,நந்தம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டனா். மேலும் கடற்கரையோரத்தில் வசிக்கும் மக்களும், பாதுகாப்பு கருதி அரசு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இவ்வாறு நகா் முழுவதும் சுமாா் 10 ஆயிரம் போ் மீட்கப்பட்டதாக அரசின் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.