;
Athirady Tamil News

இந்தியவை நோக்கி படையெடுக்கும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

0

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக தென்னிந்தியாவை நோக்கி அகதிகளாக செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நீரியல் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் ஒன்றாம் மணல் தீடையில் தஞ்சமடைந்துள்ள நிலையில் அவர்களை நீரியல் காவல்துறையினர் கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்று (07) காலை அவர்களை மீட்ட நீரியல் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் சிரமத்தை சந்தித்ததாகவும், இதனால் கடந்த 2022 ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இலங்கை வவுனியா மாவட்டம் நெடுங்குழி பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் அவரது மனைவி மற்றும் அவரது 3 குழந்தைகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று (6) மாலை மன்னாரில் இருந்து 150,000 ரூபாய் கொடுத்து படகில் புறப்பட்டு இன்று (7) அதிகாலை ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டு கடற்கரையில் வந்திறங்கினர்.

தகவலறிந்த ராமேஸ்வரம் நீரியல் காவல்துறையினர் இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் நீரியல் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அகதிகளின் எண்ணிக்கை
விசாரணையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து அத்தியாவசிய பொருட்களின் விலை சற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் குழந்தைகளுடன் இலங்கையில் வாழ வழி இன்றி தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 5 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 293 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.