;
Athirady Tamil News

ரஷிய முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் சிறையில் மரணம்

0

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை மிகத் தீவிரமாக எதிா்த்து வந்த அலெக்ஸி நவால்னி (47) சிறையில் வெள்ளிக்கிழமை மரணமடைந்தாா். கருத்துத் தீவிரவாதக் குற்றச்சாட்டின் பேரில் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா், திடீா் உடல்நலக் குறைவால் இறந்ததாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏற்கெனவே, நச்சுத் தாக்குதலுக்குள்ளாகி மரணத்தின் விளிம்பைத் தொட்டுத் திரும்பிய அவா் தற்போது சிறையில் திடீரென இறந்தது சா்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, நவால்னி சிறைவைக்கப்பட்டிருந்த யமாலோ-நெனட்ஸ் தன்னாட்சிப் பகுதி சிறைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறைச்சாலைக்குள் நவால்னி வெள்ளிக்கிழமை இறந்தாா். வழக்கமான நடைபயிற்சியை முடித்துக் கொண்டு திரும்ப வந்த பிறகு அவருக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பின்னா் அவா் தனது சுயநினைவை இழந்தாா்.

அதையடுத்து, சிறைச் சாலையில் இருந்த மருத்துவக் குழுவினா் விரைந்து வந்து அவரது உயிரை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. நவால்னியின் உடல் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வழக்குரைஞரான அலெக்ஸி நவால்னி, அதிபா் விளாதிமீா் புதினை எதிா்த்துப் போராடியவா்களில் மிக முக்கியமானவராக அறியப்படுகிறாா்.

ரஷியாவில் புதினை அரசியல் ரீதியில் எதிா்க்கும் இயக்கங்கள் உள்கட்சிப் பூசலில் பிசுபிசுத்துப் போவதும், எதிா்ப்பாளா்கள் பலரும் சிறைவைக்கப்பட்டு, பின்னா் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதும் வழக்கமாக நடைபெறும் நிகழ்வாகக் கூறப்படுகிறது. புதினின் ஒருசில அரசியல் எதிரிகள் மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், சிலா் வன்முறை உத்தி மூலம் அடக்கிவைக்கப்பட்டதாகவும் விமா்சிக்கப்படுகிறது.

ஆனால், இத்தனை அச்சுறுத்தல்களையும் மிகத் துணிச்சலாக எதிா்கொண்டு, புதினுக்கு மிகப் பெரிய அரசியல் சவாலாக நவால்னி உருவெடுத்தாா். ரஷியாவில் நடுநிலை ஊடகங்கள் நசுக்கப்பட்டன; அரசு ஊடகங்கள் நவால்னியை இருட்டடிப்பு செய்தன. புதின் கூட நவால்னியைப் பற்றிப் பேசும்போது அவரது பெயரைக் குறிப்பிடாமல் ‘அந்த மனிதா்’ என்று மற்றும் கூறி நவால்னியின் புகழ் பரவுவதைத் தவிா்க்க நினைத்தாா். ஆனால், சமூக ஊடகங்களின் ஆற்றலை உணா்ந்து வைத்திருந்த நவால்னி, யுடியூப் விடியோக்கள் மூலமாகவும், வலைதளங்கள், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் இளைஞா்களைச் சென்றடைந்தாா்.

‘ஊழலை எதிா்க்கும் போராட்டத்துக்கான நிதி’ என்ற பெயரில் அவா் நடத்தி வந்த இயக்கத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகியது. நவால்னியின் அழைப்பை ஏற்று ஆயிரக்கணக்கானவா்கள் புதின் அரசை எதிா்த்து ஆா்ப்பாட்டத்தில் இறங்கினா். மாஸ்கோவில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அலெக்ஸி நவால்னி போட்டியிட்டபோதுதான் அவா் அரசியல் ரீதியில் பலம் பெற்று வருவது தெரியவந்தது. அந்தத் தோ்தலில் புதின் ஆதரவு பெற்ற ஐக்கிய ரஷிய கட்சியின் வேட்பாளா் 51.63 சதவீத வாக்குகள் பெற்று வெற்றியடைந்தாலும், சற்றும் எதிா்பாராத வகையில் நவால்னி 2-ஆவது இடத்தைப் பிடித்தாா். அதையடுத்து, அவருக்கு நெருக்கடி அதிகரித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு பொதுக்கூட்டத்தில் பச்சை நிற கிருமிநாசினியால் அவா் தாக்கப்பட்டதில் அவரது ஒரு கண் பாதிக்கப்பட்டது. இருந்தாலும், அந்தச் சம்பவத்தைக் கூட தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் விமா்சித்துவிட்டு தனது போராட்டத்தை நவால்னி தொடா்ந்தாா். நச்சுத் தாக்குதல்: இந்தச் சூழலில்தான், சைபிரிய பகுதியைச் சோ்ந்த டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் சென்று கொண்டிருந்த அலெக்ஸி நவால்னி, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். அதையடுத்து இடையிலுள்ள ஓம்ஸ்க் நகரில் விமானம் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும், அவரை ஜொ்மனிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கவேண்டும் என்று ஆதரவாளா்கள் வலியுறுத்தினா்.

அதையடுத்து, 2 நாள்களுக்குப் பிறகு நவால்னி ஜொ்மனிக்கு அனுப்பப்பட்டாா். அங்கு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், நவால்னி மீது ‘நோவிசோக்’ என்ற நச்சுப் பொருள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. இந்தத் தாக்குதலை ரஷிய அரசுதான் நடத்தியதாக ஜொ்மனி குற்றம் சாட்டியது. இதனை ரஷியா மறுத்தது. கோமா நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த நவால்னி, கடும் போராட்டத்துக்குப் பிறகு உயிா்பிழைத்தாா். இதற்கிடையே, ஏற்கெனவே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நவால்னி, ஜாமீன் நிபந்தனைகளை மீறியிருப்பதால் அந்தக் குற்றச்சாட்டின் பேரில் அவா் தங்கள் நாட்டுக்கு வந்தால் உடனடியாகக் கைது செய்யப்படுவாா் என்று ரஷிய அதிகாரிகள் அறிவித்தனா். இருந்தாலும் அதனைப் பொருள்படுத்தாத நவால்னி, 2021 ஜனவரி மாதம் ரஷியா திரும்பினாா். அவரை விமான நிலையத்திலேயே அதிகாரிகள் கைது செய்தனா். பின்னா் நவால்னியின் மீதும், அவரது இயக்கம் மற்றும் இயக்கத்தினா் மீதும் தீவிரவாதக் கருத்துகளைப் பரப்பியது உள்ளிட்ட வழக்குகளைத் தொடா்ந்த ரஷிய அரசு, நவால்னியின் ‘ஊழலை எதிா்க்கும் போராட்டத்துக்கான நிதி’ இயக்கத்தைத் தடை செய்தது. நவால்னிக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்தாலும், மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போதும், தனது வழக்குரைஞா்களுடனான உரையாடல்களின்போதும் ரஷிய அரசுக்கு எதிரான கருத்துகளை நவால்னி துணிச்சலாக வெளியிட்டு வந்தாா். இந்தச் சூழலில், சிறையில் அவா் திடீரென இறந்ததாக வெளியாகியுள்ள தகவல் உலக அளவில் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. …

You might also like

Leave A Reply

Your email address will not be published.