;
Athirady Tamil News

2 கோடி பேரை இணைப்பது தான் டார்கெட்.., கட்சி தொடங்கிய சில நாட்களிலேயே விஜய் போடும் திட்டம்

0

2 கோடி உறுப்பினர்களை கழகத்தில் சேர்க்க இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என விஜய் கூறியுள்ளார்.

2 கோடி பேர் இலக்கு
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிக்கை வெளியிட்டார். அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், 2026 -ம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று பனையூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உட்கட்சி அமைப்பு விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனைகள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நம் தலைவரின் ஆணைப்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும். நமது தமிழக வெற்றிக் கழகத் தலைவரால் விரைவில் முதற்கட்டமாக மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர்.

உறுப்பினர் சேர்க்கை அணியுடன் இணைந்து, புதியதாக நியமிக்கப்பட இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆகியோர் முழு அளவில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தால் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்புச் செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாவட்ட, மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி, வார்டு வாரியாக முழுவீச்சில் நடத்தி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். தலைவரின் ஆணையை ஏற்று, இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தான் நமது முதற்கட்டப் பணியாகும்.

ஒவ்வொரு தேர்தலிலும் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள. புதிய வாக்காளர்கள் மற்றும் மகளிர் உள்ளிட்ட வாக்காளர்கள் அனைவரையும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ரீதியாகவும், சட்டமன்றத் தொகுதி வாரியாகவும் புதிய திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள். தங்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் தொடர்புடைய வாக்காளர் பட்டியலின் நகலை முறைப்படி பெற்றுக்கொள்ள வேண்டும்.

மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள். தங்களது நிர்வாகத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும். பூத் கமிட்டி அமைத்து, பூத் வாரியாக வாக்காளர்களில் கட்சி சார்புள்ளவர்கள் யார்? யார்? எந்தக் கட்சியையும் சாராதவர்கள் யார்? யார்? என்ற விவரங்களையும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

நமது கழகத் தலைவர் உத்தரவின் பேரில், மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை ஏற்றுச் செயல்படுவதைக் கடமையாகக் கருத வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை அறிவித்து, தலைவர் வெளியிட்ட அறிக்கையில், நமது இலக்கு குறித்தும், அரசியல் நிலைப்பாடு குறித்தும் தெளிவாக விளக்கியுள்ளார்கள். அதனை மாவட்ட, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.