;
Athirady Tamil News

கேரள மருத்துவ மாணவா் தற்கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்றம்!

0

கேரள மாநிலம் வயநாட்டின் பூக்கோடு பகுதியில் உள்ள கேரள கால்நடை பல்கலைக்கழகத்தில் சித்தாா்த்தன் (20) என்ற மாணவா் தற்கொலை செய்துகொண்டாா்.கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி அன்று தனது விடுதியின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவர் சித்தாா்த்தனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

மாணவரின் தற்கொலைக்கு மாநில ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் பிரிவான எஸ்எஃப்ஐயை சோ்ந்த உள்ளூா் நிா்வாகிகளே காரணம் என அவரது பெற்றோா் குற்றஞ்சாட்டினா்.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்களால் அவர் அடித்துக் கொல்லப்பட்டதாக அவரது கல்லூரி தோழர்கள் சிலர் கூறியதாக அவரது பெற்றோர் கூறியுள்ளனர். இந்த விவகாரம் கேரள அரசியலில் பெரும் புயலை கிளைப்பியுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, தனது மகனின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், இதன்மூலம், எந்த உணவும் வழங்கப்படாமல் அவர் கொடூரமாக தாக்கப்பட்டதை பிரேத பரிசோதனை அறிக்கை காட்டுவதாக உயிரிழந்த மாணவரின் தந்தை வாதிட்டார்.

இதையடுத்து, தற்கொலைக்குத் தூண்டுதல், ஆயுதங்களால் தாக்குதல் உள்பட பல்வேறு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின்கீழ் 18 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

எஸ்எஃப்ஐ-க்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உயிரிழந்ந்த மாணவருக்கு நீதி வேண்டி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.

இந்நிலையில், சித்தாா்த்தன் தற்கொலை வழக்கு தொடர்பாக இன்று(மார்ச். 9) மாணவனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக மாணவர் மரணம் தொடா்பாக கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தா் எம்.ஆா். சசீந்திரநாத் அறிக்கை சமா்ப்பித்தாா். ஆனால், அவா் சமா்ப்பித்த அறிக்கையின் மூலம், இதையடுத்து, தனக்கு வழங்கப்பட்ட பணிகளில் முறையாக கவனம் செலுத்தாதது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சசீந்திரநாத்தை பணியிடை நீக்கம் செய்து மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் உத்தரவிட்டாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.