;
Athirady Tamil News

வித்தியா படுகொலை வழக்கு: குற்றவாளிகளின் மேன்முறையீடு பிரதம நீதியரசருக்கு அனுப்பப்பட்டுள்ளது

0

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ்குமார் உள்ளிட்ட குற்றவாளிகள், தம்மை விடுவிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீடு, பிரதம நீதியரசருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரிப்பதற்கான நீதியரசர்களை நியமிப்பதற்காக குறித்த மேன்முறையீடு பிரதம நீதியரசருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான A.H.M.D. நவாஸ், அர்ஜூன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய குழாமினால் குறித்த மேன்முறையீடு நேற்று (01) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி புங்குடுதீவு மாணவி வித்யா கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சுவிஸ்குமார் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பாலேந்திரன் சசி மகேந்திரன், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அன்னலிங்கம் பிரேம் சங்கர் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாத்தினால் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏழு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதேவேளை, மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் ஒருவர் கடந்த 30 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கண்டி – பல்லேகல தும்பர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 41 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

நீண்டகாலமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கிருமித்தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.