;
Athirady Tamil News

நகர்ப்புறங்களில் மயில்கள், குரங்குகள், மான்கள் ஊடுருவல் அதிகரிப்பு

0

கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறப் பகுதிகளில் மயில்கள், குரங்குகள் மற்றும் மான்கள் போன்ற வனவிலங்குகளின் வருகை படிப்படியாக அதிகரித்து வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இயற்கை வாழ்விடங்கள் அழிவடைதல், இயற்கை உணவுச் சங்கிலியில் ஏற்படும் முறிவுகள் மற்றும் வேட்டையாடும் விலங்குகளின் எண்ணிக்கை குறைவு ஆகியவையே இந்த நிலைக்கு முதன்மையான காரணங்கள் என வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரி ஹசினி சரத்சந்திரவை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தாழ்நில ஈரவலயத்தில் முன்னெடுக்கப்படும் தொழில்மயமாக்கல், அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் விரிவடைந்து வரும் மனிதக் குடியிருப்புகள் காரணமாக விலங்குகளின் இயற்கை வாழிடங்கள் இழக்கப்பட்டுள்ளன.

இதனால் விலங்குகள் நகர்ப்புறங்களை நோக்கி நகர்வதால் மனித-விலங்கு மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மயில்களின் முட்டைகளை உணவாகக் கொள்ளும் நரிகள் போன்ற வேட்டையாடும் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்தமையால், மயில்களின் பெருக்கம் கட்டுப்பாடின்றி அதிகரித்துள்ளது.

இதேவேளை கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் குடியிருப்புகளை நோக்கி குரங்குகளின் வருகை அதிகரித்துள்ளது.

ஹோமாகம போன்ற பகுதிகளில் மான்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளமைக்கு, முன்னர் வீடொன்றில் வளர்ப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட சில மான்களின் எண்ணிக்கை பெருகியமையே காரணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேசமயம் விலங்குகள் வன்முறையாக நடந்துகொள்ளும் அல்லது தாக்கும் அபாயம் உள்ள சந்தர்ப்பங்களில் கொழும்பு, கம்பஹா, முத்துராஜவெல மற்றும் அத்திடிய ஆகிய பிராந்திய வனஜீவராசிகள் அலுவலகங்கள் ஊடாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.