;
Athirady Tamil News

குருந்தூர் மலையில் பௌத்த வழிபாட்டுக்கு இடையூறு தொடர்பான வழக்கு ; வினோ, கஜேந்திரன் எம் பிகள் மன்றில் ஆஜராக உத்தரவு!!

0

குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவித்து பௌத்த தேரர்களால் தொடரப்பட்ட வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம் மற்றும், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் மன்றில் ஆஜராகவேண்டுமென முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கானது நேற்று (02)முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே நீதிபதியால் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்தோடு மேலதிக விசாரணைகளுக்காக இவ்வழக்கானது எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் கடந்த 12.06.2022 அன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான முயற்சியில் பௌத்தபிக்குகள் மற்றும், பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச்சார்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி மேற்கொள்ள இந்த முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் ஜனநாயகரீதியிலான போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இவ் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், செல்வராஜாகஜேநனதரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன்,கந்தையா சிவநேசன் மற்றும், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

அந்தவகையில் மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையை மீறி அன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த நிகழ்வுகள் அனைந்தும் ஏற்பாட்டாளர்களால் கைவிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் குருந்துர்மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளை தடுக்கமுற்பட்டதாகத் தெரிவித்து, ஆலய நிர்வாகத்தினரோடும், பொதுமக்களோடும் மக்கள் பிரதிநிதிகளாக இணைந்து ஜனநாயகவழி போராட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோருக்கு எதிராக மணலாறு சப்புமல்தென்ன ஆராண்ய விகாராதிபதி கல்கமுவ சந்தபோதி தேரர் உள்ளிட்ட ஏழு தேரர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேரர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை விசாரணைக்கு வருமாறு முல்லைத்தீவு பொலிஸார் அழைப்பாணை விடுத்திருந்தனர்.

பொலிஸாரால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைவாக கடந்த 02.09.2022 அன்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் சென்று தமது வாக்குமூலங்களையும் வழங்கியிருந்தனர்.

இவ்வாறு வாக்குமூலங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, பொலிஸார் இந்த விவகாரம் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கொன்றினைத் தாக்கல் செய்தனர்.

அந்தவகையில் பௌத்த துறவிகளுக்கும், அவர்களுடன் வழிபாடுகளுக்காக வந்த குழுவினருக்கும் அச்சுறுத்தல் விடுத்தமை, அவமானம் ஏற்படுத்தும் வகையில் நடந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து B/688/22 என்னும் வழக்கிலக்கத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகள், 10.11.2022அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில், நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளதும், பொலிஸாரினதும் வாதங்களைச் செவிமடுத்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், ஜூட் நிக்சன் ஆகியோரை தலா ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுவித்து உத்தரவிட்டிருந்ததுடன், 02.03.2023ஆம் திகதிக்கு மேலதிக விசாரணைகளுக்காகத் திகதியிட்டிருந்தார்.

அந்தவகையில் குறித்த வழக்குவிசாரணை 02.03.2022 இன்று நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் சந்தேக நபர்களாக பெயர்குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகவேண்டுமென உத்தரவிட்டுள்ளதுடன், குறித்த வழக்கானது எதிர்வரும் 08.06.2023ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.