பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரின் சொத்துக்கு தீ வைத்த வழக்கு: மூன்றாவது நபர் கைது!

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சொத்துக்கள் தொடர்பான தீவைப்பு சம்பவத்தில் தொடர்புடைய மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்றாவது நபர் கைது
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் தொடர்புடைய சொத்துக்கள் மற்றும் வாகனம் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட தீவைப்பு சம்பவங்கள் தொடர்பாக லண்டன் சட்ட அமலாக்கப் பிரிவினர் மூன்றாவது நபரை கைது செய்துள்ளனர்.
மேற்கு லண்டனின் செல்சியா மாவட்டத்தில் இன்று அதிகாலை 34 வயதுடைய நபர் ஒருவரை உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோக்கத்துடன் தீ வைப்பதற்கு சதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பெருநகர காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சமீபத்திய கைது நடவடிக்கையானது சனிக்கிழமையன்று லூட்டன் விமான நிலையத்தில் 26 வயதுடைய நபர் ஒருவர் அதே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து வந்துள்ளது.
வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவரது தடுப்புக்காவலை நீட்டிக்க அதிகாரிகள் பிடியாணை பெற்றுள்ளனர்.
உக்ரைன் நாட்டவர் கைது
இந்த கைது நடவடிக்கைகள், இதற்கு முன்பு ரோமன் லாவ்ரிநோவிச் என்ற 21 வயதுடைய உக்ரைன் நாட்டவர் மீது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோக்கத்துடன் மூன்று தீவைப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாகும்.
தென்கிழக்கு லண்டனின் சிடென்ஹாம் பகுதியைச் சேர்ந்த லாவ்ரிநோவிச் வெள்ளிக்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.