;
Athirady Tamil News

தனி மரத்தின் முன்பாகவுள்ள சவால்கள்!! (கட்டுரை)

0

சில பழமொழிகளின் அர்த்தத்தை மிக ஆழமாகச் சிந்தித்து, சுய தர்க்கத்துக்கு உட்படுத்திக் கொண்டோமெனின், பல சிக்கல்களை அவிழ்த்துவிடலாம். நமது நாட்டைப் பொறுத்தவரையில், அரசியலில் அவ்வாறு ஒன்றுதான் அரங்கேற்றப்பட்டுள்ளது.

சமூகத்தில் தனிமையில் ஒருவராக வாழ முயற்சி செய்தால் அது பெரும் வெற்றிக்கு வழிசமைக்காது. ஆனால் பலரும் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தால் வாழ்வில் பெரும் வெற்றி கிட்டும் என்ற அர்த்தத்துக்கான பழமொழிதான் “தனி மரம் தோப்பாகாது” என்பதாகும்.

இலங்கையின் அரசியலை பொறுத்தவரையில், உலக அரசியல் அரங்கில் எங்குமே நிகழாதது நிகழ்ந்துள்ளது. அதாவது, இறுதியாக நடந்த பாராளுமன்றத் தேர்தலில், எந்தவொரு தொகுதியையுமே வெற்றிகொள்ளாது, முழு ஆசனங்களையும் இழந்து, கட்சிக்குக் கிடைத்த மொத்த வாக்குகளின் அடிப்படையில், தேசியப் பட்டியலின் ஊடாக நியமன எம்.பியாக வந்த ஒரேயொருவர் பிரதமராக்கப்பட்டுள்ளார்.

நாடு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டுமாயின், அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கவேண்டும். எதிர்க்கட்சியினரும், ஆளும் கட்சியிலிருந்து விலகி பங்காளிகளாக இருப்போரும், பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்காக நிபந்தனைகளை விதித்திருந்தனர்.

இந்நிலையில்தான், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். தனிமரமாக நியமிக்கப்பட்டார். அவருக்கு ஆதரவளிக்கமாட்டோமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, விமல், கம்மன்பில ஆகியோர் உள்ளடங்கிய குழு-10, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன வெளிப்படையாக தெரிவித்துவிட்டன.

ஆக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிப்போர் மட்டுமே பிரதமருக்கு ஆதரவளிக்கவேண்டும். அதிலும் இரண்டு நிலைப்பாடுகள் இருப்பதாகவே அறியமுடிகிறது. எனினும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) ஆகியன ஆதரவுக்கரம் நீட்டியிருப்பதாக அறியமுடிகிறது.

இவற்றுக்கெல்லாம், எதிர்வரும் 17ஆம் திகதியன்று கூடும் பாராளுமன்றமே பதில் சொல்லும். எனினும், இரண்டு பக்கங்களிலும் தனக்கு பெரும்பான்மை இருப்பதாக புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதவியேற்ற ஒருசில நிமிடங்களிலேயே பகிரங்கமாக அறிவித்துவிட்டார்.

அரசியல் காய்நகர்த்தலில் இராஜதந்திரத்தின் வகிபாகத்தை குறைத்து மதிப்பிடமுடியாது. அதில், பழம் தின்று கொட்டை போட்டவர்தான் ரணில் விக்கிரமசிங்க என்பதை மறந்துவிடவும் கூடாது. இராஜதந்திரிகளின் வாழ்த்துக்கள் மற்றும் சந்திப்புகள் தனிமரத்துக்கு ஊரமூட்டுபவையாகவே அமைந்திருக்கின்றன.

அவ்வாறான தனிமரத்துக்கு முன்பாக பல சவால்கள் உள்ளன. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காண்பிப்பது, பொருளாதார பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, மக்களின் வரிசையை குறைப்பதல்ல, இல்லாமற் செய்வது, மூவேளையும் உணவு உண்டு வாழக்கூடிய நிலைமையை உருவாக்குதல், இவற்றுக்கு இடையில் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்டவற்றைக் குறிப்பிடலாம்.

அந்த சவால்களை எல்லாம் எதிர்கொண்டு வெற்றிநடை போட்டு, தனிமரத்தை தோப்பாக்க வேண்டியதே, புதிய பிரதமர் ரணில் முன்னிருக்கும் பாரிய சவாலாகும் என்பதை நினைவூட்டுகிறோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.