;
Athirady Tamil News

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

0

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (22.05.2025) யாழ் .மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்படுத்தலில் வினைத்திறனான செயற்பட்டு வரும் சுகாதாரத்துறையினர், உள்ளூராட்சி துறையினர் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், தற்போது மழை பொய்து வருவதால் ஏற்படக்கூடிய டெங்கு நோய் பரவல் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், பொது மக்களுக்கான போதிய விழிப்புணர்வின் அவசியத்தினையும் எடுத்துக்கூறினார். மேலும், விழிப்புணர்வு செயற்பாட்டிற்கு கிராம மட்ட உத்தியோகத்தர்களை வழிப்படுத்துமாறும் பிரதேச செயலாளர்களை கேட்டுக்கொண்டதுடன், கழிவகற்றல் தொடர்பாகவும் சரியான பொறிமுறையின் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.

மேலும் இக் கூட்டத்தில்
முன்னெச்சரிக்கையாக டெங்குக் நோய் வராமல் தடுப்பதற்குரிய வழிவகைகள் ஆராயப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

1.பாடசாலைகளிலும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

2.2025 ஆம் ஆண்டு டெங்கு தாக்கத்தை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர் தமது பிரதேச செயலகங்களில் ஜீன் மாதம் முதல் 3வது புதன்கிழமை 2.30 மணிக்கு டெங்குக் கட்டுப்பாட்டுக் குழுக்கூட்டம் நடாத்துவதுடன் அதன் கூட்டக்குறிப்பு மாவட்ட செயலகத்திற்கு அறிக்கையிடுமாறும் கோரப்பட்டது.

3.கிராம மட்ட டெங்குக் குழுக்கூட்டத்தினை ஜீன் மாதம் முதல் 1வது, 2வது செவ்வாய்க்கிழமைகளில் நடாத்துவதற்கும் அது தொடர்பான கூட்டக்குறிப்பு பிரதேச செயலாளருக்கு அறிக்கையிடுமாறும் கோரப்பட்டது.

4.ஜீன் 1ஆம் திகதி முதல் முன்மாதிரியாக மாவட்ட செயலகம் மற்றும் பாடசாலைகளில் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டிருத்தல் வேண்டும் எனவும், அவ்வாறு தரம் பிரிக்காமல் காணப்படுமாயின் அதற்குரிய அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. யாழ் மாவட்டத்திலுள்ள ஏனைய திணைக்களங்கள் கால அவகாசத்திற்கு அமைய, ஜீலை 1ஆம் திகதி முதல் இந் நடைமுறையை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டது.

5.பிளாஸ்டிக், பொலித்தீனை கட்டுப்படுத்தல் தொடர்பான நடைமுறைகளை மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் பொதுமக்களுக்கு அது தொடர்பான சரியான அறிவுறுத்தல்களை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டது.

6.கழிவுகளை வீதிகளில் கொட்டுவதை குறைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக யாழ்ப்பாண மாநகர சபையினாலும், கோப்பாய் பிரதேச சபையினாலும் கண்காணிப்பு கமரா (CC TV) பொருத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், மாவட்ட பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள் சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை செயலாளர்கள், கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.